கடைசியில், அந்தச் சமூகத்தைக் காப்பதற்காகவே போர்களை நடத்தி, தங்களைத் தாங்களே, மனித இனம் பலியிட்டுக் கொள்ளத் தொடங்கியது.
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் இனம், மதம், மொழி, இடத்தின் பெயரால் சமூகத்தில் நடந்த மோதல்களால், ரத்தக் கறை படியாத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு, "போர்' எனும் கிருமி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து பரவியுள்ளது.
தற்போதைய போர்களில் பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்கள், நோய்க் கிருமிகளைவிட அதிகமான மனிதர்களைக் கொல்கின்றன.
நவீன மருத்துவ உதவியுடன், கிருமிகளையாவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தி விட முடியும்.
ஆனால், படைப்பின் நோக்கத்தையே சிதைக்கும் போர்களைத் தடுக்க, மேற்கொள்ளப்படும் எல்லாவித அஹிம்சை முறைகளும் தோற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒருபுறம் மனிதர்கள் கூட்டம், கூட்டமாகக் கொல்லப்படுவதை மற்றொருபுறம் மெüன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே நீடிக்கிறது.
சூடான், நைஜீரியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் உள்நாட்டுப் போர்களால் மிகப் பெரிய அகதி முகாம்களாகி விட்டது கண்கூடு.
அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு நிவாரணம் மேற்கொண்டு, புரையோடிய புண்ணுக்கு மருந்திடும் பணியை மட்டுமே, சர்வதேச அமைப்புகள் செய்து வருகின்றன.
கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் அதீத வளர்ச்சியால், உலகம் சுருங்கியது. ஆனால், நாடு பிடிக்கும் வேட்கையில் சர்வாதிகாரிகள் நடத்திய போர்கள், கோடிக்கணக்கான மக்களை, அவர்களது வாழ்விடத்தோடு சேர்த்து அழித்தன.
இரண்டாகப் பிளக்கப்பட்ட நாடுகளிடையே தீராத பிரச்னைகள் உருவாக்கப்பட்டு, மேலை நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ், நிரந்தரமாக அவை கொண்டு வரப்பட்டன.
கடந்த நூற்றாண்டில் சமூகம் எதிர்கொண்ட இரு பேரழிவுகளான உலகப் போர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கு மேல் என்கிறது ஓர் ஆய்வு.
இயற்கைப் பேரழிவின்போது கூட, இதுபோன்ற அதிகமான உயிரிழப்புகள் குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டதில்லை.
இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா முதன்முதலாக பரிசோதித்த இரு அணுகுண்டுகள், ஜப்பான் நாட்டின் இரு நகரங்களையே தரைமட்டமாக்கின.
துயரமான வரலாற்றுப் பதிவாகிவிட்ட அந்நிகழ்வில், ஓரிரு வினாடிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அணுகுண்டுத் தாக்குதலின் கதிரியக்கப் பாதிப்புகள், ஆயிரம் ஆண்டுகளுக்கேனும் நீடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வநாசம் நிச்சயம் என்பதை உணர்ந்தும், ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒரே நாளில் அழிப்பதற்குண்டான அளவுக்கு அணு ஆயுதங்களை, வல்லரசு நாடுகள் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, அதிநவீன போர் உத்திகளால் படைத்திறனைப் பன்மடங்கு பெருக்கி, விண்வெளி யுத்தத்துக்கே மேலைநாடுகள் தயாராகிவிட்ட நிலையில், இனியோர் உலக யுத்தம் மூண்டால், புவியும் ஓர் நெருப்புக் கோளமாகி, பேரண்டத்தில் சுற்றிவரும் என்பதில் சந்தேகமில்லை.
இதில், வளரும் நாடுகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.
குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கூட தன்னிறைவை அடையாத அந்நாடுகளும், ஆயுதங்களை வாங்க பெரும் பணத்தைச் செலவிட்டு வருகின்றன.
ஆயுதப் போட்டியை உருவாக்கி, வளரும் நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களை முடக்கி, அந்நாடுகள் எப்போதும் தங்களிடம் கையேந்திகளாக நிற்கும் தந்திரத்தை, மேலைநாடுகள் செயல்படுத்தி வருகின்றன.
இதனால், கோடிக்கணக்கான ஏழைகள் வறுமைக் கோட்டுக்குள்ளேயே, விட்டில் பூச்சிகளைப் போல வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலம் நீடிக்கிறது.
ராணுவத்துக்கு, இந்தியா ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடும் நிதி, சில ஆண்டுகளுக்கேனும் சுகாதார மேம்பாட்டுக்குத் திருப்பி விடப்பட்டால், அத்தனை ஏழைகளுக்கும் தரமான இலவச சிகிச்சை அளிக்கலாம் அல்லது அத்தொகையில், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்துவிடலாம் போன்ற செய்திகள் வியப்பை அளிக்கவில்லை.
போர்களற்ற சமுதாயம் உருவாக மதங்களாவது துணை நிற்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பல நாடுகளில் மத மோதல்கள் தீராத பிரச்னையாக நீடிக்கின்றன.
தெற்காசியாவில் அதிகமான இசுலாமியர்களை ஏவுகணைகளால் அழித்த நாடுகள் எவை எனக் கேட்டால், ஈராக், பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் கூட பதில் அளித்துவிடும் அளவுக்கு கிழக்கும், மேற்கும் நட்பு (?) பாராட்டி வருகின்றன.
புத்த மதம் தழுவிய நாடும், பெரும் போரை நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்திருப்பது, புவி சந்தித்திருக்கும் விநோதங்களில் ஒன்று.
நேயம், சக உயிர்களைக் காத்தல் உள்ளிட்ட எந்தவிதமான மத சித்தாந்தங்களுக்கும் இடம் கொடாமல், காட்டு விலங்குகளைப் போல மனிதர்களை வேட்டையாடி அழிக்கும் கொலைத் தொழிலான போர், துரதிருஷ்டவசமாக தற்போதைய நவீன சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
எதிர்காலத்தில் ஆயுதப் போட்டியாலும், சர்வாதிகார மனப்பான்மையாலும் நடத்தப்படும் போர்களால்தான், மனித குலத்துக்கு பேராபத்து ஏற்பட உள்ளது.
நுகர்வுக் கலாசாரத்தால் சுயநலம் மிகுந்திருக்கும் காலகட்டத்தில், பிரக்ஞையிழந்து நிற்கும் சமூகம் எதிர்கொண்டுள்ள பேராபத்து போர்தான்.
போருக்குப் பின் அமைதி திரும்பும் என்று, எந்தவொரு நாட்டின் தலைவராவது உறுதி அளித்தால், அது மயான அமைதியாகத்தான் இருக்கும்..!
அங்கே வாழ்வை இழந்து, வேரற்ற மரங்களைப் போல விழும் மனிதர்களைப் புதைக்கக் கூட மனிதர்கள் இல்லாமல் போகலாம்..!