Tuesday, July 21, 2009

கற்றலில் கேட்டலே நன்று!

கல்வி என்பது எப்போதுமே ஏதாவது ஒரு விவாதத்தில் சிக்காமல் இருப்பதில்லை. இந்த முறை பத்தாவது வகுப்புக்கு பொதுத் தேர்வு அவசியமா, தேர்வே இல்லாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அனுப்பிவைத்துவிடலாமா என்ற சர்ச்சை மூண்டிருக்கிறது. இந்த சர்ச்சையின் நாயகர் மத்திய அரசில் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்சர் கபில் சிபல் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வழக்கறிஞரான கபில் சிபல் சற்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார் என்பதுடன் விபரீதமாகவும் சிந்தித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
நம் நாட்டில் இப்போது அடுத்து அடிபடும் வார்த்தை சமச்சீர் கல்வி. அதாவது எல்லோரும் ஒரே மாதிரியான பாடங்களை, ஒரே மாதிரியான பட்டங்களுக்கு எல்லா மாநிலங்களிலும் எல்லா பல்கலைக்கழகங்களிலும் படிக்க வேண்டும், அப்போதுதான் கல்வி சமச்சீராக இருக்கும் என்பதாகும். எனவே மாநிலக் கல்வி வாரியம், மத்திய கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி வாரியம் என்றெல்லாம் பிரிவினைகள் தேவையில்லை என்பதே இதை வலியுறுத்துவோரின் வாதம். இவர்களுடைய வாதங்கள் எல்லாம் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு எழுத வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
பொது நுழைவுத் தேர்வு இல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்களைச் சேர்த்தால் நகர்ப்புற மாணவர்களோ அல்லது கல்வியில் சிறந்து விளங்கும் ஓரிரு மாநிலங்களின் மாணவர்களோ மட்டும் உயர் கல்விக் கூடங்களில் இடம்பெற்று விடுவார்கள் என்பதே இவர்களுடைய அச்சம். அதற்காகத்தான் சமச்சீர் கல்விக்கு அழுத்தம் தருகிறார்கள்.
மாணவர்களில் 3 ரகம் என்று அந்நாளிலேயே தரம் பிரித்திருக்கிறார்கள். கற்பூரம், கரித்துண்டு, வாழைமட்டை ஆகியவற்றைப் போல அறிவாற்றல் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த சமச்சீர் கல்வி, தரத்தை உயர்த்த எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும்?
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன பிறகும் கல்வி வளர்ச்சி நாம் விரும்பியபடி இல்லை. அரசு பள்ளிக்கூடங்களும் அரசு கல்லூரிகளும் தரம் குறைந்தவையாகவும், மாணவர்களின் கல்வித் தரத்திலும் ஒழுக்கத்திலும் அக்கறை இல்லாதவையாகவும் இருக்கின்றன.
அரசு பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு கெüரவமான ஊதியம் அளித்து, படித்து தங்களுடைய ஆற்றலை பெருக்கிக் கொள்ள போதிய அவகாசமும் கொடுக்கிறார்கள். அதை அவர்கள் நன்றாகப் படித்து மாணவர்களுக்குக் கற்றுத்தர பயன்படுத்துகிறார்களா? "டியூஷன் சென்டர்'களை நடத்துவது, உபரி வியாபாரத்தில் முதலீடு செய்வது, கந்து வட்டிக்குக் கடன் கொடுப்பது, அந்தத் தொழில்களில் அதிக அக்கறை செலுத்தி அவற்றை மேம்படுத்துவது என்று தங்களுடைய ஆற்றலையும் நேரத்தையும் அவர்கள் செலவிட்டால் கல்வித் தரம் எப்படி உயரும்?
அரசுக் கல்லூரிகள், பள்ளிகள் இப்படி இருக்க, தனியார் கல்வி நிறுவனங்களில் பண வசூல் மட்டுமே குறியாக இருக்கிறது. ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக நடத்தி, மாணவர்களுக்கு மனப்பாட சக்தியை மட்டும் வளர்த்து தேர்வில் ""100 சதவீத வெற்றி'' என்ற சாதனையைப் படைத்தால் அறிவு எப்படி வளரும்?
பள்ளிக்கூடத்தில் ஆரம்பத்தில் விளையாட்டு, பாட்டு, நடனம் ஆகியவற்றைக் கற்றுத்தந்து படிப்பதில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். பிறகு தாய்மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும். மெள்ள மெள்ள நம் மண்ணுக்கேற்ற வகையில் பாடங்களைச் சொல்லித்தந்து நம்முடைய இலக்கியம் வரலாறு ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். படிப்பில் ஆர்வமும் திறமையும் ஏற்பட்ட பிறகு கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றில் மதிப்பெண் மட்டுமே லட்சியமாகக் கொள்ளாமல் அவற்றில் புலமை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
அறிவியல், கலைப்பிரிவு பாடங்களை மேல்நிலைப் பள்ளிக்கூடம் தொடங்கி இப்போது சைவ, அசைவ உணவு வகைகளைப் போல கல்வியாளர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். கலைப்பாட மாணவனுக்கு அறிவியல் பாடத்திலும், அறிவியல் பாட மாணவனுக்கு கலைப் பாடத்திலும் ஆர்வம் இருந்தாலும் படிக்க முடியாதபடி பெரிய தடுப்புச்சுவர் உள்ளது.
அத்துடன் ஓவியம் வரைதல், கைத்தொழில் செய்தல், பாடுதல், இசைக்கருவிகளை வாசித்தல், விளையாட்டு போன்றவற்றால் அறிவு வளராது என்று முடிவே செய்து அவற்றைக் கல்வி திட்டத்திலிருந்தே விலக்கி வைத்திருக்கிறார்கள் கல்வித்துறை ஒüரங்கசீப்புகள்.
நீச்சல், கார்-பைக் ஓட்டுதல், சிலம்பம், கராத்தே, ஜூடோ போன்ற வீர விளையாட்டுகளையும் கற்றுத்தந்து மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் உரம் வாய்ந்தவர்களாக்குவதும் கல்வித்துறையின் கட்டாயக் கடமை. இவற்றை பால் வேறுபாடு இன்றி மாணவிகளுக்கும் கற்றுத்தர வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான ""மனித ஆற்றல்'' வெளிப்படும்.
நாம் ஊதுகிற சங்கை ஊதிவிட்டோம், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்...

நன்றி : தினமணி



No comments: