Saturday, August 30, 2008

லேண்ட்ரோவர் கார் உற்பத்தி குறைக்கப்பட்டது

சமீபத்தில் டாடா கைக்கு வந்த பிரிட்டிஷ் கார் கம்பெனி லேண்ட் ரோவரில் கார் தயாரிப்பு குறைக்கப்பட்டது. உலக அளவில் பொருளாதாரத்தல் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக, விற்பனையில் சரிவு ஏற்பட்டதால், இனிமேல் அங்கு வாரத்தில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இதுவரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை நாட்களாக இருந்த அங்கு, இனிமேல் நான்கு நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். அதாவது திங்கட்கிழமையில் இருந்து வியாழன் வரை தான் இனிமேல் அங்கு தயாரிப்பு நடக்கும். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும் அக்டோபரில் இருந்து இரவு ஷிப்டும் கேன்சல் செய்யப்படுகிறது. அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார் கம்பெனியிடம் இருந்த ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் கம்பெனிகள் கடந்த ஜூலை மாதம்தான் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் கைக்கு வந்தது. 1.7 பில்லியன் பவுண்டுக்கு ( சுமார் 13,600 கோடி ரூபாய் ) இந்த நிறுவனம் டாடாவால் வாங்கப்பட்டது. ஆனால் இந்த தயாரிப்பு குறைப்பால் அதன் வருடாந்திர தயாரிப்பு அளவில் ஒரு சதவீதம்தான் குறையும் என்று சொல்கிறார்கள். சீனா, ரஷ்யா, பிரேசில், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள்,வட ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இப்போதும் கூட லேண்ட் ரோவர், ஜாகுவார் கார்கள் நன்கு விற்பனை ஆகத்தான் செய்கிறது.
நன்றி : தினமலர்


கே.ஜி.படுகையில் காஸ் எடுப்பதில் தீவிரம் காட்டுகிறது ரிலையன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ( விற்பனையில் ) ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்., கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இருந்து கேஸ் எடுக்கும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ரிலையன்ஸ் இன்டஸ்டிரஸின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, வரும் அக்டோபரில் இருந்து அங்கு கேஸ் எடுக்கவேண்டும் என்றும் அதற்கு தகுந்த படி வேலைகள் செய்யுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே திட்டமிட்டிருந்த காலத்தை விட 2 - 3 மாதங்கள் முன்னதாகவே கேஸ் எடுக்க அவர்கள் முன்வந்துள்ளார்கள். கேஸ் கிடைக்கும் கிருஷ்ணா - கோதாவரி படுகை பகுதிக்கும், அதன் சுந்திகரிப்பு நிலையம் இருக்கும் ஜாம்நகர் பகுதிக்குமிடையே போடப்பட்டு வரும் பைப்லைன் வேலையும் முடியும் தருவாயில் இருக்கிறது. உலகிலேயே அதிகம் கேஸ் இருக்கும் பகுதி என்று சொல்லப்படும் கிருஷ்ணா - கோதாவரி ஆற்று படுகையில் 11.5 டிரில்லியன் கியூபிக் அடி ( டி சி எஃப் ) கேஸ் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இங்கு கேஸ் எடுக்கும் தொழிலில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்., ஈடுபட்டு வருகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் அங்கு நாள் ஒன்றுக்கு 40 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் கேஸ் எடுக்க திட்டமிட்டிருக்கிறது. பின்னர் அதை ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் 80 மில்லியனாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. மற்ற உலக நாடுகளில் கேஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 9 வருடங்களுக்குப்பின் தான் அங்கிருந்து கேஸை எடுக்க முடிந்திருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் இன்டஸ்டிஸ் கேஸ் உற்பத்தி நிலையமோ கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கேஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 6 வருடங்களிலேயே கேஸ் எடுக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


தமிழகத்துக்கு மாறுமா நானோ கார் திட்டம்?

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் இருந்து, தமிழகத்துக்கு மாறுமா டாடாவின் 'நானோ' கார் தொழிற் சாலை என்ற கேள்வி இப்போது பரபரப்பாக எழுந்துள்ளது. மற்ற எந்த நிறுவனமும் நிறைவேற்ற முயற்சிக்காத நிலையில், ஒரு லட்சம் ரூபாய் நானோ ரக கார்களை தயாரித்து விற்பனை செய்ய மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் தொழிற்சாலையை அமைத்தது டாடா நிறுவனம். விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்ற 400 ஏக்கர் நிலத்தை திரும்பத்தர வேண்டும் என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா போராடி வருகிறார். 'ஒரு நானோ காரை கூட வெளியே போக விடமாட்டோம்' என்று டாடா நிறுவனத்தைச் சுற்றி முற்றுகை போராட்டத்தை நடத்த தயாராகிவிட்டார்.'நானோ கார் திட்டத்துக்கு பிரச்னை வந்தால், நஷ்டத்தை நான் தாங்கிக் கொள்ளலாம்; ஆனால், தொழிலாளர்களுக்கு ஆபத்து வந்தால், நான் மேற்கு வங்கத்தை விட்டு தொழிற்சாலையை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை' என்று, டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்தார்.டாடாவுக்கு அளித்த நிலத்தை திரும்பப் பெற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் திட்டவட்டமாக கூறிவிட்டார். மம்தாவும், நிலத்தை திரும்பத் தராத வரை போராட்டம் ஓயாது என்று வெளிப்படையாக அறிவித்தும் விட்டார். இதனால், இழுபறி நீடிக்கிறது.நானோ கார் திட்டத்தை, திட்டமிட்டபடி அக்டோபர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.
ஒரு லட்சம் ரூபாய் காரை சந்தைக்கு கொண்டு போக வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் உள்ள பிரச்னையால் நானோ கார் அக்டோபருக்குள் வெளியில் வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா உட்பட சில மாநில அரசுகள் டாடாவுக்கு அழைப்பு விடுத்தாலும், மேற்கு வங்க மாநிலம் ஒத்துழைக்க முடியாத நிலை வரும் போது, நானோ கார் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க டாடா முன்வரும் என்று தெரிகிறது.இது தொடர்பாக தமிழக அரசு, டாடாவுக்கு அழைப்பு விடுத்து விட்டது.
தூத்துக்குடியில் டைட்டானியம் ஆலை அமைக்க டாடாவுக்கு நிலத்தை ஏற்கனவே அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், நானோ கார் தொழிற்சாலைக்கும் நிலம் ஒதுக்க தயாராக உள்ளது.'டாடா நிறுவனம் ஏற்க முன்வந்தால் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது. ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை' என்று, அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப் பட்டுள்ளது. டாடா தரப்பிலும் எந்த பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை.டாடா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'நானோ கார் திட்டம் வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டால், மூலதன செலவில் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

சிங்கூர் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றியது டாடா மோட்டார்ஸ்

கோல்கட்டாவுக்கு 35 கி.மீ.,தூரத்தில் இருக்கும் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அதன் தொழிலாளர்களை, நிர்வாகம் வெளியேற்றி விட்டது. திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் டாடா மோட்டார்ஸ் தொழிலாளர்கள் மிரட்டப்படுவதால் டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நிலவி வரும் மோசமான நிகழ்ச்சிகளால் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று டாடாவின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வியாழன் அன்று டாடா மோட்டார்ஸின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த கார்கள் மற்றும் பஸ்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதிலிருந்த தொழிலாளர்களை மிரட்டவும் செய்தனர். இதனையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த இஞ்சினியர்கள், டெக்னிஷியன்கள், எக்ஸிகூடிவ்கள் சுமார் 800 பேரில் ஒருவர் கூட வேலைக்கு வரவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களும் வேலைக்கு வரவில்லை. சிங்கூரில் டாடா தொழிற்சாலை அமைக்க பெறப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில், 400 ஏக்கர் நிலம் வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அந்த 400 ஏக்கர் நிலத்தை, அதை கொடுத்த விவசாயிகளிடமே திருப்பி கொடுத்து விட வேண்டும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி தலைமையிலான தொண்டர்கள் கடந்த 24ம் தேதியில் இருந்து தொழிற்சாலை முன்பு அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் டாடா தொழிலாளர்களை நாங்கள் மிரட்டவில்லை என்று மம்தா பானர்ஜி மறுக்கிறார். டாடாவுக்கு அங்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால், அந்த தொழிற்சாலை அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுமா என்று டாடா உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்போது அந்த கேள்வி எழவில்லை; முதலில் அங்கு அமைதி திரும்ப வேண்டும். பின்னர்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றனர். எங்களது ஊழியர்கள் பயந்துபோய் இருக்கிறார்கள். எனவே எங்களது முதல் வேலை அவர்களது பயத்தை போக்குவதுதான் என்றனர்.
நன்றி : தினமலர்


8 சதவீத வளர்ச்சி சிதம்பரம் நம்பிக்கை

'நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் கண்டிப்பாக 8 சதவீதமாக இருக்கும்' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.மும்பை பங்குச் சந்தையில், 'கரன்சி பியூச்சர் டிரேடிங்'கை மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று துவக்கி வைத்தார். நேற்று வர்த்தகம் துவங்கிய முதல் நாளில் அமெரிக்க டாலர் ரூ.44.15 என்ற விலையில் வர்த்தகமாகியது. மொத்தம் ஐந்தாயிரம் வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் ஏற்பட்டன. இந்த வர்த்தகத்தில் பங்கேற்க 300 உறுப்பினர்கள், 11 வங்கிகள் பதிவு செய்துள்ளன. இதில், முதல் முறையாக வங்கிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டன. இருப்பினும், பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் அனைவரும் வர்த்தகத்தில் பங்கேற்கவில்லை.இந்த விழாவிற்கு பின், நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் என்ற அளவில் நிலை பெறும்.கடந்தாண்டு நான் சொன்னபடி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக இருந்தது. என்னுடைய கணிப்புப்படி, ஆண்டு வளர்ச்சியானது பெரும்பாலும் சரியாக இருக்கும்.கரன்சி பியூச்சர் டிரேடிங்கில் ஒரு முதலீட்டாளர், அன்னிய செலாவணி சந்தையில் ஏற்படும் அபாயங்களுக்கு இதை ஹெட்ஜிங் செய்து கொள்ளலாம். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், குடியுரிமை பெறாத இந்தியர்கள் ஆகியோர் பங்கேற்க முடியும்.ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு காலியிடம் ஏற்படும் சமயத்தில் அப்போது முடிவு செய்யப்படும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். கவர்னர் பதவியில் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், டில்லியில் மத்திய புள்ளியியல் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நடப்பு நிதியாண்டில், முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 9.2 சதவீதமாக இருந்தது.தயாரிப்பு பிரிவு மற்றும் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடைவால் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்தாண்டு பொருட்கள் தயாரிப்பு பிரிவில் வளர்ச்சி 10.9 சதவீதமாக இருந்தது. அது, தற்போது 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல் மின்சக்தி உற்பத்தியானது 7.9 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்