Saturday, August 30, 2008

சிங்கூர் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றியது டாடா மோட்டார்ஸ்

கோல்கட்டாவுக்கு 35 கி.மீ.,தூரத்தில் இருக்கும் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அதன் தொழிலாளர்களை, நிர்வாகம் வெளியேற்றி விட்டது. திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் டாடா மோட்டார்ஸ் தொழிலாளர்கள் மிரட்டப்படுவதால் டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நிலவி வரும் மோசமான நிகழ்ச்சிகளால் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று டாடாவின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வியாழன் அன்று டாடா மோட்டார்ஸின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த கார்கள் மற்றும் பஸ்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதிலிருந்த தொழிலாளர்களை மிரட்டவும் செய்தனர். இதனையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த இஞ்சினியர்கள், டெக்னிஷியன்கள், எக்ஸிகூடிவ்கள் சுமார் 800 பேரில் ஒருவர் கூட வேலைக்கு வரவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களும் வேலைக்கு வரவில்லை. சிங்கூரில் டாடா தொழிற்சாலை அமைக்க பெறப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில், 400 ஏக்கர் நிலம் வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அந்த 400 ஏக்கர் நிலத்தை, அதை கொடுத்த விவசாயிகளிடமே திருப்பி கொடுத்து விட வேண்டும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி தலைமையிலான தொண்டர்கள் கடந்த 24ம் தேதியில் இருந்து தொழிற்சாலை முன்பு அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் டாடா தொழிலாளர்களை நாங்கள் மிரட்டவில்லை என்று மம்தா பானர்ஜி மறுக்கிறார். டாடாவுக்கு அங்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால், அந்த தொழிற்சாலை அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுமா என்று டாடா உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்போது அந்த கேள்வி எழவில்லை; முதலில் அங்கு அமைதி திரும்ப வேண்டும். பின்னர்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றனர். எங்களது ஊழியர்கள் பயந்துபோய் இருக்கிறார்கள். எனவே எங்களது முதல் வேலை அவர்களது பயத்தை போக்குவதுதான் என்றனர்.
நன்றி : தினமலர்


No comments: