மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் இருந்து, தமிழகத்துக்கு மாறுமா டாடாவின் 'நானோ' கார் தொழிற் சாலை என்ற கேள்வி இப்போது பரபரப்பாக எழுந்துள்ளது. மற்ற எந்த நிறுவனமும் நிறைவேற்ற முயற்சிக்காத நிலையில், ஒரு லட்சம் ரூபாய் நானோ ரக கார்களை தயாரித்து விற்பனை செய்ய மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் தொழிற்சாலையை அமைத்தது டாடா நிறுவனம். விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெற்ற 400 ஏக்கர் நிலத்தை திரும்பத்தர வேண்டும் என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா போராடி வருகிறார். 'ஒரு நானோ காரை கூட வெளியே போக விடமாட்டோம்' என்று டாடா நிறுவனத்தைச் சுற்றி முற்றுகை போராட்டத்தை நடத்த தயாராகிவிட்டார்.'நானோ கார் திட்டத்துக்கு பிரச்னை வந்தால், நஷ்டத்தை நான் தாங்கிக் கொள்ளலாம்; ஆனால், தொழிலாளர்களுக்கு ஆபத்து வந்தால், நான் மேற்கு வங்கத்தை விட்டு தொழிற்சாலையை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை' என்று, டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்தார்.டாடாவுக்கு அளித்த நிலத்தை திரும்பப் பெற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் திட்டவட்டமாக கூறிவிட்டார். மம்தாவும், நிலத்தை திரும்பத் தராத வரை போராட்டம் ஓயாது என்று வெளிப்படையாக அறிவித்தும் விட்டார். இதனால், இழுபறி நீடிக்கிறது.நானோ கார் திட்டத்தை, திட்டமிட்டபடி அக்டோபர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.
ஒரு லட்சம் ரூபாய் காரை சந்தைக்கு கொண்டு போக வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் உள்ள பிரச்னையால் நானோ கார் அக்டோபருக்குள் வெளியில் வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா உட்பட சில மாநில அரசுகள் டாடாவுக்கு அழைப்பு விடுத்தாலும், மேற்கு வங்க மாநிலம் ஒத்துழைக்க முடியாத நிலை வரும் போது, நானோ கார் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க டாடா முன்வரும் என்று தெரிகிறது.இது தொடர்பாக தமிழக அரசு, டாடாவுக்கு அழைப்பு விடுத்து விட்டது.
தூத்துக்குடியில் டைட்டானியம் ஆலை அமைக்க டாடாவுக்கு நிலத்தை ஏற்கனவே அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், நானோ கார் தொழிற்சாலைக்கும் நிலம் ஒதுக்க தயாராக உள்ளது.'டாடா நிறுவனம் ஏற்க முன்வந்தால் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது. ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை' என்று, அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப் பட்டுள்ளது. டாடா தரப்பிலும் எந்த பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை.டாடா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'நானோ கார் திட்டம் வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டால், மூலதன செலவில் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்
Saturday, August 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment