Wednesday, November 18, 2009

பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்-பழ . நெடுமாறன்

முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்னையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது.

1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.

இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.

இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.

இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.

கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.

கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.

காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.

முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.

காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.

1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.

அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.

நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.

காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.

காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.

1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.

“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.

தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.

2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கட்டுரையாளர் : பழ . நெடுமாறன்
நன்றி : தினமணி

நாளை எந்தப் பக்கம்?

சென்றவாரம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் ஸ்டீபன் சூ, புதுதில்லியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) மாணவர்களிடையே பேசும்போது, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்: "கோபன்ஹேகன் மாநாட்டில் கரியமில வாயு குறைப்பு குறித்து அமெரிக்கா எந்த உறுதிமொழியையும் வழங்காது'

அதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, "இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.

அதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

சிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.

1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.

உலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.

ஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.

இதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே!

இதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது "பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது!

இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.
இருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்!
நன்றி: தினமணி

குர்கானில் ரூ.157 கோடியில் டெக்னாலஜி சென்டர் அமைக்கிறது ஹனிவெல்

குர்கானில் 157 கோடி ரூபாய் மதிப்பில் டெக்னாலஜி சென்டர் அமைக்க ஹனிவெல் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குளோபல் ரிசர்சை மேலும் விரிவுப் படுத்தும் விதமாக புதிய டெக்னாலஜி சென்டர் அமைக்க உள்ளோம். இதற்காக 34 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளோம். இந்திய ரூபாயின் மதிப்பில் இது 157 கோடி ரூபாயாகும். குர்கானில் அமைக்கப் பட உள்ள இந்த சென்டருக்காக அப்பகுதியில் சுமார் நான்கு லட்சம் ஸ்குயர் பீட் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கு அமைக்கப் பட உள்ள டெக்னாலஜி சென்டருக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


பி.எஸ்.இ., புதிய இணையத்தளம் அறிமுகம்

மும்பை பங்குச்சந்தையின்(பி.எஸ்.இ.,) புதிய இணையத்தளம் அறிமுகப் படுத்தப் பட்டது. பங்குச்சந்தை குறித்த விபரங்களையும், தங்களுக்கு தேவையான செய்திகளையும் முதலீட்டாளர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த இணையத் தளம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தில், அனைவருக்கும் தேவையான பங்குச்சந்தை விபரங்களும் வெளியிடப் படுகிறது. சென்செக்ஸ் கம்பெனிகளுக்கான ஸ்ட்டீமிங் கோட்ஸ், அட்வான்ஸ்டு ஸ்டாக் ரீச், சென்செக்ஸ் வியூ, மார்கெட் கேலக்சி மற்றும் உறுப்பினர் குறித்த விபரங்கள் இருக்கும்.

இந்த இணையத்தளத்தை கூட்டண்மை விவகார துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொடங்கி வைத்தார்.
நன்றி : தினமலர்