Wednesday, November 25, 2009

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.

இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.

தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.

அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.

2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.

இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.

நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.

தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.

திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.

திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.

நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.

கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.

இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.

இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.

நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.

(கட்டுரையாளர்: எம். பாண்டியன், மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).
நன்றி : தினமணி

குனியக் குனிய...

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?

இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!

உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?

சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.

அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.

கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.

சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?

அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!

குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி

சத்யம் மோசடி ரூ.14,000 கோடி: சிபிஐ அறிவிப்பு


சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மோசடி இத்தனை நாள் சொல்லப்பட்டது போல் ரூ.7800 இல்லை எனவும் உண்மையான தொகை ரூ.14000 கோடி என்கிறது சிபிஐ. நேற்று தாக்கல் செய்யப்பட்ட சத்யம் மோசடி குறித்த குற்றப் பத்திரிகையில் இதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு.
சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் உண்மையில் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி எத்தனை கோடி ரூபாய் என்ற விவரத்தை தனது குற்றப்பத்திரிகையில் வெளியிட்டுள்ளது சிபிஐ.
200 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரிகையில் சத்யம் நிறுவன நிதி எவ்வாறு மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்டதென்றும், போலியான வாடிக்கையாளர்கள் உருவாக்கப்பட்டதையும் அம்பலமாக்கியுள்ளது. மேலும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளது சிபிஐ. 1065 இடங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 6,000 ஏக்கர் நிலம், 40,000 ஸ்கொயர் யார்டு வீட்டு மனைகள், 90,000 சதுர அடி கட்டடங்கள் போன்றவை அடங்கும்.

நன்றி : தினமலர்


கோவையில் ரூ.50 கோடி முதலீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி


யுபிஎஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நியூமரிக் பவர் சிஸ்டம்ஸ், சூரிய ஒளியில் 1.5 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.25 கோடியை நியூமரிக் பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. எல்இடி தெருவிளக்குகளை தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது. தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பான எரிசக்தி கருவிகளை தயாரிக்கவும், காற்றாலை மின் உற்பத்திக் கருவிகள் தயாரிக்கவும் நியூமரிக் முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.50 கோடி முதலீட்டில் கோவையில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட உள்ளது.

நன்றி : தினமலர்