Wednesday, November 25, 2009

குனியக் குனிய...

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?

இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!

உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?

சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.

அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.

கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.

சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?

அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!

குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி

1 comment:

Raji said...

Arumaiyaana pathivu.