Saturday, November 7, 2009

வருமுன் காவாதான் வாழ்க்கை!

உலகின் 2-வது மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, 1962-ம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தில் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கு நேரிட்ட இந்த அவமானத்தால் இந்திய நாடு, தனக்குச் சொந்தமான 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை இழந்தது. மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான 90 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இன்றுவரை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இந்துக்களின் மிகப் புனித யாத்திரை தலமாகவும், சிவபெருமானின் உறைவிடமாகவும் கருதப்படும் கைலாச மலை மற்றும் புனித மானசரோவர் ஏரி ஆகியவை சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

1962-ம் ஆண்டு யுத்தத்துக்கு முன்பாகவே இந்தியாவின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க அனைத்து விதமான ராஜதந்திர நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டது. இந்தியாவாலும், சீனாவாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வரையறுக்கப்பட்ட இந்தியா - சீனா இடையேயான மக்-மோகன் எல்லைக்கோட்டைத் தாண்டி பல்வேறு விதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது.

திபெத்தை சட்டவிரோதமாக சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக ஆக்கிரமித்துக் கொண்டு திபெத்தியர்களை கொடுமைப்படுத்தியதோடு, திபெத்தியர்களின் மதத் தலைவர் தலாய்லாமாவை திபெத்தை விட்டு விரட்டியடித்தது. அப்போதைய சர்வதேசத் தலைவர்கள் இதுவிஷயத்தில் சீனாவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தபோதும் நேருவின் தலைமையிலான சுதந்திர இந்திய அரசு இதுவிஷயத்தில் வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருந்தது.

இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து, இந்திய மக்களிடம் வரி வசூலித்து வந்தது. இதுவிஷயம் இந்திய மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது. இதுகுறித்து பாரதிய ஜனசங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேருவிடம் கேள்வி எழுப்பினார். இந்திய எல்லையைத் தாண்டி இந்திய நிலப்பரப்பைச் சீனா ஆக்கிரமித்ததை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். அதற்குப் பதில் அளித்த நேரு, சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்லப்படும் பகுதி மனிதர்கள் வாழத் தகுந்த பூமி அல்ல என்றும், மண்ணும், கற்களும் நிறைந்த அப்பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது என்றும், இதற்காக நாம் சீனாவுடன் சச்சரவுகள் எதுவும் செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் பதிலளித்தது நாடாளுமன்றக் குறிப்பில் பதிவாகி இருக்கிறது. இந்தப் பதிலில் கோபம் கொண்ட ஜனசங்க உறுப்பினர் நாடாளுமன்ற அவையில் தனது வழுக்கைத்தலையைக் காட்டி, நேரு அவர்களே! என் தலையில்கூட புல் பூண்டு முளைப்பதில்லை, அதற்காக என் தலையை அன்னியன் ஆக்கிரமிக்க விடலாமா? புல் பூண்டு முளைக்காத பூமியானாலும் அதை அன்னியன் ஆக்கிரமிக்க விடலாமா? சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், "இந்தி - சீனி பாய் பாய்' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்தியா வந்த அப்போதைய சீன அதிபர் சூ யென் லாய்க்குச் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு நேரு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பஞ்சசீலக் கொள்கையை பெய்ஜிங்கில் அறிவித்தார். சீனாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். ஒருபுறத்தில் நேரு பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்ட மை காயும் முன்பே இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்து, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

சீனா, இந்தியாவின் மீது 1962-ம் ஆண்டு போர் தொடுக்கும் என முன்கூட்டியே இந்திய நல விரும்பிகள் சொன்னபோது, அதை நேரு காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதனால், இந்திய ராணுவத்தையும், அதற்குத் தேவையான போர் தளவாடங்களையும், இந்திய மக்களையும், இந்திய அரசையும் சீனாவின் ஆக்கிரமிப்புத் திட்டத்துக்கு எதிராகத் தயார்படுத்தி வைத்துக்கொள்ளும் நிலையில் நேருவின் அரசு இல்லை.

எனவே, உலகையே வென்ற அலெக்சாண்டரை விரட்டியடித்த இந்திய நாடு, 1962-ல் அவமானகரமான தோல்வியைத் தழுவியது. 3,800 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதோடு, 40 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை இந்தியா இழந்தது.

இருந்தபோதும், 1962-ல் இந்திய மக்கள் மத்தியில் ஏற்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு காரணமாகவும், தேசபக்த எழுச்சி காரணமாகவும், தேசபக்தி கொண்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களாலும் சீனா ஆக்கிரமிப்பு ஓரளவுக்கு முறியடிக்கப்பட்டது.

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நேரு கருத்துக் கூறும்போது, "சீனா என்னை ஏமாற்றி விட்டது, என் முதுகில் குத்திவிட்டது' என்று விரக்தியை வெளிப்படுத்தினார். கிருஷ்ணமேனன் ராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகுதான், இந்திய ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நேரு உணர்ந்து கொண்டார்.

1962-ம் ஆண்டுக்கு முன்பாக எத்தகைய சூழ்நிலை நிலவியதோ அதே நிலைதான் இன்றும் நிலவுகிறது. இப்போதும் சீனா நமது எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி ஆக்கிரமிப்பதோடு நமது நிலப்பரப்பில் உள்ள பாறைகளில் சிவப்பு எழுத்துகளில் சீனா என்ற பெயரை எழுதியுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தைக் கடுமையாக சீனா எதிர்க்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சுற்றுப்பயணத்தைக்கூட சீனா கடுமையாக எதிர்க்கிறது.

சீனா வெளியிடும் தேச வரைபடங்களில் அருணாசலப் பிரதேசத்தை தனக்குட்பட்ட பகுதியாகக் காட்டிக் கொள்கிறது. காஷ்மீரைத் தனி நாடாக அங்கீகரித்து, அதற்கு சிறப்புத் தூதரை நியமித்துள்ளது.

இந்தியா மீது சீனா மீண்டும் போர் தொடுப்பதற்குண்டான அனைத்து விதமான முன்தயாரிப்புகளையும் திட்டமிட்டுச் செய்து வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள்படி, இந்தியாவின் பெருநகரங்களைக் குறிவைத்து ஏவுகணைகளை சீனா நிறுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் மூலம் அணுகுண்டு தாக்குதலை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. ஹைனன் தீவில் அணுஆயுத நீர்முழ்கிக் கப்பல் தளத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது. இத் தளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட அணுஆயுதக் கப்பல்களை நிறுத்தி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது.

இந்தியாவின் விமானப்படை தலைமை மார்ஷல் பாலிஹோமி மேஜர், இந்திய அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "சீனா, இந்திய எல்லையில் ஏராளமான விமானப்படையைக் குவித்து வருகிறது. அதனால் நாமும் நம் விமானப்படையை சீனாவுக்கு நிகராக வலுப்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முப்படைத் தளபதிகளும் ராணுவ நிபுணர்களும் ராஜதந்திரிகளும் சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆதரங்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சரும், ராணுவ அமைச்சரும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இதுவிஷயத்தில் நேருவின் பாணியிலேயே செயல்பட்டு வருகின்றனர். இந்திய எல்லையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை சீனா நிறுத்தியுள்ளது. சீனா- இந்தியா இடையே 3,500 கி.மீ. வரை எல்லைக்கோடு உள்ளது. காஷ்மீர் பகுதியில் மட்டும் 36 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்துவிட்டது.

சமீபத்தில் சீனா வெளியுறவுத் துறை அதிகாரிகள் இந்தியாவை 36 துண்டாக உடைத்துப் பிரித்து பலவீனப்படுத்த வேண்டும் என பகிரங்கமாகப் பேசியுள்ளனர். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூலம் மறைமுகமாக ஆட்சியை தன் கையில் வைத்துள்ள சீன அரசு, இந்தியாவுக்கு எதிராக நேபாள நாட்டை உருவாக்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தியாவில் உள்ள நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், உல்பா தீவிரவாதிகள், மணிப்பூர் போர்க் குழுக்கள், நாகா தீவிரவாதிகள் ஆகிய பயங்கரவாதக் குழுக்களுக்கு மறைமுகமாக சீனா ஆயுத, பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது.

சமீபத்தில் அருணாசலப் பிரதேசத்தைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரி கணேஷ் கோயு, இந்தியாவின் சார்பில் சீனாவுக்குச் செல்லும் பயிற்சி அதிகாரிகளின் குழுவில் இடம்பெற்றிருந்தார். சீனா, அவருக்கு மட்டும் விசா வழங்க மறுத்தது. அருணாசலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி, அதனால், கணேஷ் கோயு சீன நாட்டு பிரஜை. அதனால் விசா வழங்கத் தேவையில்லை எனக் கூறிவிட்டது. இதன் காரணமாக, சீனாவுக்கு அனுப்ப இருந்த இந்தியக் குழுவின் பயணத்தையே இந்திய அரசு ரத்து செய்தது.

அருணாசலப் பிரதேசத்தில் இந்திய அரசு ரூ. 3,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியை அணுகியது. இதுவிஷயத்தில் சீனா தலையிட்டு, இந்திய அரசுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கொடுக்க வேண்டிய தொகையை வழங்கக் கூடாதென நிர்பந்தம் செய்தது. அருணாசலப் பிரதேசத்தில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை சீனா தடுக்கிறது.

இந்தியாவின் வற்றாத மிக நீளமான பிரம்மபுத்திரா இந்தியாவில் உற்பத்தியாகி சீனாவுக்குள் புகுந்து, மீண்டும் இந்தியாவுக்குப் பாயும் நதியை சர்வதேச நதி நீர் கொள்கைக்கு எதிராக சீன அரசு, அணை கட்டித் தடுப்பதன் மூலம் இந்தியாவின் நீர் திட்டம், நீர்மின் திட்டங்களை முடக்க நினைக்கிறது.

இந்தியாவைச் சுற்றியுள்ள சிறிய அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் இந்திய விரோத எண்ணங்களை வளர்ப்பதோடு, மேற்கண்ட நாடுகளுக்கு "எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கருத்துக்கேற்ப சீனா பல்லாயிரம் கோடி ரூபாயை மேற்கண்ட நாடுகளில் முதலீடு செய்து, போக்குவரத்து சாலைகள், துறைமுகங்கள் மின் உற்பத்தி நிலையங்கள், அணுஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து வருவதோடு ராணுவத் தடவாளங்களையும் ராணுவத் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்திய - சீனா போர் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வசதிகளை சீன ராணுவம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

பாகிஸ்தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்மன்தோட்டா ஆகிய இடங்களில் புதிய துறைமுகங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறைமுகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் திட்டத்துக்கு "ஆபரேஷன் முத்துமாலை'த் திட்டம் என்று பெயர்.

இந்த முத்துமாலைத் திட்டம் எப்போது வேண்டுமானாலும், ராணுவத் துறைமுகங்களாக மாற்றப்பட்டு, இந்தியாவின் குரல்வளையை நெரிக்கும் திட்டமாக மாறும்.

1950-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது, இந்தியா வாய்மூடி மெüனமாக இருந்த காரணத்தால் - சீனாவின் அடாவடித்தனத்தை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறிய காரணத்தால், இன்றுவரை திபெத் விஷயத்தில் சர்வதேச சமூகத்தின் கண்டனங்களில் இருந்து சீனா தப்பி வருகிறது. இதுவிஷயத்தில் சர்வதேச அரங்கில் இந்தியா, சீனாவுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு திபெத் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

அதேபோல், இலங்கை சிங்கள அரசுக்கு, சீனா கொடுக்கும் ஒத்துழைப்பு உதவிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உகந்த, இந்தியாவுக்கு விசுவாசமான தமிழ் ஈழ மக்களை ஆதரிக்க வேண்டும்.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்' என வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். ஏற்கெனவே, தனது பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் ஏராளமான நிலப்பரப்பை இந்தியா இழந்துள்ளது. அதைப் போரிட்டு மீட்காவிட்டாலும், இருக்கும் நிலப்பரப்பையாவது நேரு பாணியில் இருந்து விலகி, மன்மோகன் சிங் அரசு பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தேசபக்தர்களின் வேண்டுகோள்.
நன்றி : தினமணி

இந்தியாவின் 15 முக்கிய நகரங்களில் வீடு விலை உயர்வு

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 15 பெரிய நகரங்களில் வீடு விலை கடந்த ஜூன் வரை 15 சதவீதம் உயர்ந்ததாக தேசிய வீட்டு வசதி வங்கி (என்எச்பி) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வீடுகளின் விலை ஏற்றத் தாழ்வு குறித்த புதிய அட்டவணையை என்எச்பி வெளியிடத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், பணவீக்கம் போல அதற்கு ரெசிடெக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கியின் விலை புள்ளிவிவரப் பிரிவு திரட்டிய தகவல்கள் அடிப்படையில், 2008ம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை வீட்டு விலை ஏற்றத் தாழ்வு பற்றிய ரெசிடெக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை உட்பட 15 பெரிய நகரங்களில் வீடு விலை 5 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. சென்னையின் சில பகுதிகளில் 26 சதவீதம் வீட்டு விலை உயர்ந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வீடுகளின் விலை 27 சதவீத உயர்ந்தன. மும்பையில் 6 சதவீதமும், கோல்கத்தாவில் 13 சதவீதமும், டில்லியின் புறநகர் பகுதியான ஃபரிதாபாத்தில் குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 36 சதவீதம் அதிகரித்தது.
நன்றி : தினமலர்


அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலை இழப்புக்கள்

அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றம் பெற்று வருவதாக அதிபர் ஒபாமா சொல்லி சில நாட்களுக்கு உள்ளே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது. அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 1,90,000 பேர் வேலை இழந்துள்ளனர். இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம். 'நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்' என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.
நன்றி : தினமலர்


ஓடி விளையாடு பாப்பா...

""குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று'' என்று வாய் அளவில் வாழ்த்துகிறோம். ஆனால் செயல் அளவில் குழந்தைகளை வதைக்கிறோம். பெரியவர்கள் குழந்தைகளைத் துன்புறுத்துதல் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது.

சென்னையில் மனைவியுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கணவன், தன் மகனை அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை அக்கம்பக்கத்தவரது தகவலால் மாநகரப் போலீஸôர் தலையிட்டு குழந்தையை மீட்டுள்ளனர்.

கொடூரத் தந்தை மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது. எவ்வாறு இளம் பிஞ்சுகளை அதுவும் தன் குழந்தையை உடல்ரீதியாகச் சித்திரவதை செய்ய மனம் வருகிறது என்பது உளவியல் முறையில் ஆராய்ச்சிக்குரியது. இத்தகைய கல்நெஞ்சக்காரர்கள் "உறுப்பொத்தல் மக்களொப்பு' என்ற அளவில் மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்களாகத் திரிகிறார்களே என்று மனம் பதைபதைக்கிறது.

குழந்தைகள் முறைகேடாக நடத்தப்படுவது பற்றிய விழிப்புணர்வு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைவு. குழந்தைகளை வேலையில் அமர்த்தக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆயினும், குழந்தைத் தொழிலாளிகள் பரவலாகப் பணியில் இருக்கிறார்கள். கண்ணாடி, வெடிமருந்து, நச்சுப் பொருள்கள், ரசாயனம் போன்ற அபாயகரமான பொருள்களை வைத்து நடத்தப்படும் தொழிற்கூடங்களிலும் குழந்தைகள் வேலை செய்கிறார்கள். "பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கால்பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தைகள் பணிபுரிகிறார்கள் என்பதால் அங்கு தயாரிக்கப்படும் கால்பந்துகளை புறக்கணிக்கிறோம் என்று சர்வதேச கால்பந்துக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்தது.

1989-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நலனுக்கான கூட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. 54 பிரிவுகளைக் கொண்ட இத்தீர்மானத்தை இந்தியா உள்பட பல நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதன் அடிப்படையில்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எவை, குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகளைக் குற்றவாளிகளாகப் பார்க்கக்கூடாது, பாதிப்புக்கு உள்ளானவர்களாகக் கருத வேண்டும் என்ற வகையில் உலக நாடுகள் குழந்தைகள் நலனுக்காகச் சட்டங்கள் இயற்றியுள்ளன. இந்தியாவில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2000-வது ஆண்டில் கொண்டு வரப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய உடன்படிக்கையில் முக்கியமான அம்சங்களாவன:

பதினெட்டு வயதுக்கு உள்பட்டவர்களை குழந்தைகளாகக் கருத வேண்டும். குடியுரிமை, பெயர் சொல்வதற்கான உரிமை, இலவசக் கட்டாய ஆரம்பக்கல்வி, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளை கொடுமைப்படுத்துவது, கட்டாயக் கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுத்தல்.

குழந்தைகளை எந்தவிதத்திலும் மனம் மற்றும் உடல்ரீதியாக கொடுமைக்கு உள்ளாக்கக்கூடாது.

குழந்தைளை இனம், ஜாதி, நிறம், மதம், பொருளாதார நிலை போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்யாதிருத்தல்.

குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை.

பாதுகாப்பு நடவடிக்கைகளும், சட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பல நடத்தப்பட்டாலும், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்கின்றன. குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைத்தல், பள்ளிக்கு அனுப்பாமல் தொழிலில் ஈடுபடச் செய்வது, வீட்டில் வேலைக்கு வைப்பது மட்டுமல்லாமல் அவர்களை அடித்து வேலை வாங்குவது போன்ற அவலங்கள் எங்கும் உள்ளன. நகரில் வசிக்கும் பலர் வீட்டு வேலைக்குத் தனது ஊரிலிருந்து ஏழைக்குழந்தைகளை அழைத்துவந்து, ஏதோ அவர்களுக்கு உதவுவதுபோல் தனது வீட்டில் வேலைக்கு வைக்கிறார்கள். ஏழைக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றால் அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களது ஏழ்மை நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது சுரண்டிப் பிழைப்பதைத் தவிர வேறென்ன?

சமுதாயத்தில் எவ்வாறு குழந்தைகள் நடத்தப்படுகிறார்கள், எத்தகைய தீங்குகள் இழைக்கப்படுகின்றன என்பதைப் பற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சில ஆய்வு நடத்தின. குழந்தைகளைச் சீண்டுதல், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் சில்மிஷம் செய்வது போன்ற அவலங்கள், குழந்தைகளின் உற்றார் உறவினர்களாலேயே இழைக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இத்தகைய கொடுஞ்செயல்களை எவ்வாறு கையாள்வது என்பது அறியாமல் குழந்தைகள் மனத்தளவில் பாதிக்கப்படுகின்றனர். எதற்கெடுத்தாலும் குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, மற்றவர்களோடு ஒப்பிட்டுக் குறைசொல்வது அவர்களுக்கு விருப்பமானவற்றை மறுத்தல், தனி அறையில் வைத்துப் பூட்டுதல் போன்ற அநீதிகள் சாதாரணமாக பல இல்லங்களில் நடக்கின்றன.

மேற்கு வங்கத்தில் மிதுனபுரி என்ற கிராமத்தில் பாபர் அலி என்ற பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர் எவ்வாறு தனது சுயமுயற்சியால் தனது கிராமத்தில் அக்கம் பக்கத்து வசதியில்லாக் குழந்தைகளுக்கு தான் கற்றதைப் பகிர்ந்து கொள்கிறார் என்பது நெகிழ வைக்கும் செய்தி. அந்தக் கிராமத்திலிருந்து அரசு பள்ளிக்கூடம் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள குழந்தைகள் வயிற்றைக் கழுவ வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். பாபர்அலி தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று படித்துத் திரும்பி வந்த கையோடு, சிரமத்தைப் பாராமல் கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்குத் தினப்பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இவரது தன்னலமற்ற செயலால் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகள் இவரது வீட்டைச் சுற்றி உட்கார்ந்து பயில்கின்றனர். மிக இளமையான தலைமையாசிரியர் என்ற சிறப்பு 16 வயதான பாபர் அலிக்கு உண்டு. அந்தச் சிறுவனுக்கு உள்ள சமுதாய உணர்வு எவ்வளவு பேருக்கு வருகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விசேஷ சட்டங்களில் குழந்தைகளுக்கு எதிராகப் பல குற்றங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. கட்டாயக் கருக்கலைப்பு, சிசுக்கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல், குழந்தைகளைப் பரிதவிக்க விடுதல், குழந்தைகளைக் கடத்தல், விபசாரத்தில் ஈடுபடுத்துதல், கற்பழிப்பு, இயற்கைக்கு மாறாகப் புணர்தல், பால்ய விவாகம், குழந்தைகளை வேலையில் அமர்த்துதல் போன்ற பல குற்றங்கள் இதில் அடங்கும். இந்தியாவில் 42 சதவிகித மக்கள்தொகையினர் 18 வயதுக்கு உள்பட்டவர்கள். இது உலகில் உள்ள குழந்தைகளின் மக்கள்தொகையில் 20 சதவிகிதமாகும். இவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க வேண்டியது நமது கடமை. தில்லிக்கு அருகில் இந்த ஆண்டு நிகழ்ந்த நித்தாரி தொடர் கொலை, குழந்தைகளின் உடல் உறுப்பு அறுவடைக்காகச் செய்யப்பட்டது போன்ற கொடுஞ்செயல் மீண்டும் நிகழக்கூடாது. குழந்தைகளைக் கடத்தி இழிவணிகமுறை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தொழிலில் ஈடுபடுத்துவதற்காக "குழந்தைகள் வணிகம்' சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படுவது இந்தியாவில் அதிகமாகியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நலப்பிரிவு கவலை தெரிவித்துள்ளது. சுமார் 4 லட்சம் குழந்தைகள் பருத்தி ஆலைகளில் பணிபுரிகின்றனர்.

குஜராத்தில் சூரத் நகரம் வைரம் அறுக்கும் தொழில்களுக்கு உறைவிடம். ஆனால் இந்த அபாயகரமான தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று பல குழந்தைகள் நல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.

முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு சுமார் 1000 குழந்தைகள் காணாமல் போகின்றனர். தங்கச் சங்கிலி பறிபோனாலோ, பொருள் திருடப்பட்டாலோ மக்கள் கூக்குரலிடுகின்றனர். ஆனால் குழந்தைகள் காணாமல் போவதைப் பற்றிப் பேசுவதில்லை. காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வானொலி, தொலைக்காட்சியில் காணாமல் போனவர்களைப் பற்றி தகவல் கொடுப்பதோடு முடித்துவிடுகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் குழந்தைகள் காணாமல்போன வழக்குகளைக் குற்றப் புலனாய்வுத்துறை பிரத்யேகமாகக் கவனித்து, காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க முனைப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணித்துள்ளது. தமிழ்நாட்டில் 2008-ம் ஆண்டு 117 குழந்தைகளும், இந்த ஆண்டு இதுவரை 75 குழந்தைகளும் காணாமல் போய் உள்ளனர்.

குழந்தைகள் உதவி மையங்கள் முக்கிய நகரங்களில் இயங்குகின்றன. உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1098. குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் புகார் கொடுக்கலாம். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.

சென்னை நகரில் குழந்தைகள் நட்பக காவல்நிலையம் அமைக்கத் திட்டம் இருந்தது. இத்தகைய காவல் நிலையங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட வேண்டும். ஓடி விளையாடு பாப்பா என்று சொல்வது போய் குழந்தைகளை ஓட ஓட விரட்டுகிறோம். "பிள்ளைப் பிராயத்தை இழந்தோமே' என்று ஒவ்வொருவரும் ஏங்கும் நாள் உண்டு. அந்தப் பிள்ளைப் பிராயத்தைக் குழந்தைகளிடமிருந்து பிடுங்காமல் அவர்களிடமே கொடுப்போம். குழந்தைகளைப் போற்றும் நாடு தான் வளம் பெறும் என்பதை மறந்துவிடக் கூடாது.
கட்டுரையாளர் :ஆர். நடராஜ்
நன்றி : தினமணி

பஞ்சம் போக்கும் புன்செய் தானியங்கள்

வீரத்தமிழனை எடுத்துக்காட்டும் புறநானூறு பாடல்களில் சிறப்பாகப் போற்றப்பட்ட வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு, கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேப்பை, வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற தானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள். நன்மை என்றால் சிறந்தவை. புன்மை என்றால் அற்பம், சிறுமை, இழிவு என்று பொருள் உண்டு. நெல், வாழை, கரும்பு எல்லாம் நன்செய். மற்றவை புன்செய். நல்ல சுவையான உணவு தானியங்களுக்கு ""புன்மை'' என்று பட்டம் கட்டினர்.

உண்மையில் அரிசிச் சோறு உண்டவர்கள் தாம் பூஞ்சையாக இருந்தனர். புஞ்சை உணவாகிய கம்பு உருண்டையையும், உளுத்தங்களியையும், கேப்பைக் களியையும் உண்டவர்கள் நோய்நொடியின்றி வலுவாக இருந்தனர். வீரம் விளைத்தனர்.

எட்டாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு மாபெரும் இயற்கை விவசாயக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டிருந்தேன். நான் பேச வேண்டிய ""பசுமைப்புரட்சி'' என்ற தலைப்பு எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையில் பணிபுரிந்த முன்னாள் கோவை விவசாயப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கப்பட்டது. பேச்சு ஒருகட்டத்தில் நான் ஏற்கெனவே தொட்டிருந்த புன்செய் தானிய விஷயத்துக்கு வந்தது. அப்போது அவர் எனது புள்ளிவிவரங்களை அள்ளித் தந்தார். அதாவது 1950 - 51 புள்ளிவிவரத்துடன், 2000 - 01 புள்ளிவிவரத்தை (2009 - 10 - புள்ளிவிவரமானாலும்) ஒப்பிட்டால் அரிசி உற்பத்தி 400 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் பெருவகை புன்செய் தானியங்களான சோளம், கம்பு, கேப்பை சுமார் 300 சதவீதம் உற்பத்தி குறைந்துவிட்டதுடன், தினை, சாமை, வரகு முதலிய சிறு தானியங்கள் காணாமல் போய்விட்டன என்றும் குறிப்பிட்டு, உணவு தானியங்கள் உற்பத்தியில் உள்ள சமனற்ற போக்கை வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் எழுந்து சில கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்பட்டேன். ""புன்செய் தானிய உற்பத்தி குறைந்தது தெரிந்த விஷயம். அதற்குக் காரணமானவரே நீங்கள்தானே? புன்செய் தானிய உற்பத்தியை உயர்த்தும் முயற்சிகளைச் செய்வதில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பு இல்லையா?'' என்று கேட்டேன்.

""பஞ்சத்தையும் பசியையும் போக்குவதற்கு அரிசி உற்பத்தி மட்டுமே வழிவகுக்கும் என்று நெல் சாகுபடிக்கு மட்டுமே பேக்கேஜ் திட்டம், மானியம் வழங்கப்பட்டது'' என்று அவர் கூறிய விளக்கம் யாரையும் கவரவில்லை. மீண்டும் நான் எழுந்து, ""புஞ்சை தானியங்களுக்குத்தான் பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு. அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5,6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். ஆகவே ஆண்டுதோறும் பல்லாயிரம் டன்கள் அளவில் வீணான அரிசி சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் ஏலம் விடப்பட்டு பசை உற்பத்தி நிறுவனங்களுக்குச் செல்கிறது. வீணாகி விஷமான ரேஷன் அரிசி ஏழை மக்களின் வயிற்றுக்கும் செல்வதால், வீரத்தமிழன் நோய் தொற்றி நோஞ்சானாகி விட்டான் என்றேன்.

அதை அவர் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; எவ்வாறு அந்த மாஜி துணைவேந்தரின் பாட்டி அவர் கிராமத்தில் கம்பைக் குத்திப் புடைத்துக் குடித்ததை ஒரு மலரும் நினைவாக எடுத்துக் கூறினார்.

இந்தியாவிலேயே புன்செய் தானிய உணவை கிராமங்களில் இன்னமும் விட்டுக் கொடுக்காதவர்கள் வீரமராட்டியர்களே. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே மானாவாரி புன்செய் தானிய சாகுபடி விரிந்த அளவில் எஞ்சியுள்ளதுடன் அவ்வளவையும் சொந்த உணவு உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் காணாமல்போன பல வகையான சாமை, குதிரை வாலி, தினை வகைகள், வரகு எல்லாவற்றையும் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடித்து விடலாம். கிருஷ்ணராஜசாகரம், கபினி அணைகள் கட்டி, புஞ்சை நிலங்கள் சதுப்பு நிலமாக மாற்றப்பட்டு, கர்நாடகத்தில் நெல்லும் கரும்பும் ஆக்கிரமித்துக் கொண்டன.

இதனால் புன்செய் தானியம் உண்டு வீரமாக வாழ்ந்த திப்புசுல்தான் படைவீரர்களின் வாரிசுகள் இன்று கர்நாடகத்தில் நோயாளிகளாகிவிட்டனர். ஏனெனில் புன்செய் தானிய சாகுபடியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடமாகவும் கர்நாடக மாநிலம் இரண்டாவது இடமாகவும் விளங்கி வந்தது.

கர்நாடக மாநிலச் சூழ்நிலை எல்லா மாநிலங்களிலுமே ஏற்பட்டுள்ளதால் இந்திய அளவிலும் எந்த வளர்ச்சி வீதத்தில் நெல், கோதுமை சாகுபடி உயர்ந்துள்ளதோ அந்த வளர்ச்சி வீதத்துக்குமேல் பன்மடங்காக புன்செய் தானிய சாகுபடி குறைந்துவிட்டது. மராட்டிய மாநிலம் மட்டுமே சற்று விதிவிலக்கு.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் "பழைய குருடி கதவைத் திறடி' என்ற பழமொழிக்கு ஏற்ப ஹரியாணா, மேற்கு உ.பி. பஞ்சாப் பகுதியில் சில விவசாயிகளும் ஆந்திரப் பிரதேசத்திலும் அரிசி, கோதுமையை விதைக்காமல் புன்செய் தானியங்களையும், பருப்புவகைப் பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நெல் சாகுபடி 1960-க்குப் பின் அறிமுகமானது. அதற்கு முன்பு, கரீஃப் பருவத்தில் புன்செய் தானியங்களுடன் மக்காச்சோளம், பருப்பு வகை, கரும்பு, எண்ணெய்வித்து சாகுபடி செய்வர். பிறகு ரஃபி பருவத்தில் கோதுமை சாகுபடி செய்வது மரபு. நிலத்தடி நீர் கீழே செல்லச் செல்ல நெல் சாகுபடி செலவுமிக்கதாகவும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக நெற்பயிர் காய்ந்துவிடும் அபாயமும் உள்ளதால், சில விவசாயிகள் பழைய நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்புவதாகத் தகவல்.

ஆந்திர மாநிலத்திலும் இம்மாற்றம் தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் கடற்கரை மாவட்டங்கள் தவிர மையப்பகுதி மாவட்டங்களில் மழைப்பொழிவும் குறைவு. நிலத்தடி நீரும் வற்றிவிட்ட சூழ்நிலையில் பழையபடி புன்செய் தானியம் மற்றும் துவரை சாகுபடி துளிர்விடுகிறது.

இரண்டாவது போகமாக உளுந்து, பாசிப்பயறு, கொண்டைக்கடலை சாகுபடி செய்யவும் அம்மாநில அரசு, மத்திய அரசின் வறட்சிப் பயிர் சாகுபடித் திட்டம் மூலமும் தக்காண சமூக வளர்ச்சி மையம் போன்ற சில தொண்டு நிறுவனங்கள் மூலமும் ஊக்கம் அளித்தாலும்கூட, அடிப்படையான கொள்கை மாற்றம் இல்லாத ஒரு சூழ்நிலையில் புன்செய் தானியம் - பருப்பு வகை சாகுபடி உகந்த அளவில் வளர்ச்சி பெறுமா என்பது ஒரு கேள்விக்குறி.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் வறட்சிப் பயிர் சாகுபடி முயற்சியில் ஒரு துரும்புகூட அசைவு இல்லை. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கும்போது 12 ரூபாய்க்கு யார் சோளமோ கம்போ வாங்கி உண்பார்கள்? இதர மாநிலங்களில் இரண்டு ரூபாய் அரிசித் திட்டம் உள்ளது. தமிழ்நாட்டைவிட இதர மாநிலங்களில் புன்செய் தானிய விலை சற்று மலிவாக இருந்தாலும், மகாராஷ்டிர மாநில மக்களைத் தவிர இதர மாநிலங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் புன்செய் தானியங்களுக்கு உகந்த கிராக்கி வருமா என்பது ஒரு கேள்விக்குறி.

எனினும் இந்த விஷயத்தில் உணவு அமைச்சரகத்தைச் சார்ந்த ஊட்ட உணவுக் குழுமம் செய்ய வேண்டிய விழிப்புணர்வுப் பிரசாரமும் பொது விநியோகத்தில் சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு போன்றவை வழங்குதலும் விவசாயிகளுக்கு நல்ல விலையும், தாராளமான அளவில் புன்செய் தானிய உற்பத்திக்கு மானியமும் வழங்க வேண்டும். புன்செய் தானியங்களை நன்கு சுத்தப்படுத்தி ரவாவாகவும், மாவாகவும் நல்ல முறையில் பேக் செய்து வழங்கலாம்.

தமிழ்நாட்டில் ஒரு தனிநபராக புன்செய் தானியங்களிலிருந்து விதம்விதமான உணவுகளை இன்சுவையுடன் ராமசுப்பிரமணியம் என்பவர் வழங்குகிறார். வறட்சி நிலப் பயிர்களான தானியங்களில் குறிப்பாக அழிந்து வரும் வரகு, தினை, பனிவரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றைத் தேடிப்பிடித்து அவற்றைக் கொள்முதல் செய்வதுடன் அவற்றிலிருந்து நறுமணமுள்ள உணவுகளைச் சமைக்கவும் காலத்துக்கு ஏற்ப புதுமையாகவும் வழங்குகிறார்.

பல்வேறு கண்காட்சிகளில் உணவகங்களை நடத்தித் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைப் புதுமையான முறையில் அவர் மீட்டுயிர்த்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த அவர் புன்செய் தானியங்களை இன்சுவை உணவாகப் படைத்து வழங்கிய காட்சிகளை ""கைமணம்'' என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி மதியப் பொழுதில் தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளுக்குப் பின் மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்று நிலவிவரும் நீர்ப்பற்றாக்குறையை அனுசரித்து முன்போல் மானாவாரி - வறட்சி நில சாகுபடிக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். புன்செய் தானியங்களையும் பருப்பு வகைகளையும் முன்பு கலப்புப் பயிர்களாக சாகுபடி செய்த மரபு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். இவ்வாறு கலப்புப் பயிர் செய்வதன் மூலம் மண்ணும் வளம் பெறும். நீர்ச் செலவும் குறையும்.

புறநானூறு பாடல்களில் விவரிக்கப்பட்ட வீர ரத்தமுள்ள தமிழர்களை மீண்டும் உருவாக்க புன்செய் தானிய உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தி, அவற்றைத் தமிழர்களுக்கு ஊட்ட வேண்டும். புன்செய் தானியங்களில் சோளம், கம்பு, கேப்பை, துவரை, உளுந்து பயிரிடுவோருக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 மானியமும் அழிந்து வரும் சிறுதானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி பயிரிடுவோருக்கு ரூ. 2,000 மானியமும் வழங்க வேண்டும். அவற்றை அரசு கொள்முதல் செய்து, பொதுவிநியோகத்தில் அரிசியுடன் புன்செய் தானியங்களையும் மாதம் 5 கிலோ வீதம் ரேஷன் வழங்கலாமே.

வீரமராட்டியர்களைப் போல் ஊட்டம்மிக்க புன்செய் தானியங்களால் வீரத்தமிழர்களை உருவாக்கும் ஒரு கடமையை நமது முதல்வரும், முத்தமிழ் வித்தகருமான கலைஞரைத் தவிர வேறு யாரால்தான் நிறைவேற்ற முடியும்?
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி