Monday, March 9, 2009

சரிவை சந்தித்த பங்கு சந்தை

இன்று முழுவதும் பங்குகளை விற்கும் போக்கு அதிகம் காணப்பட்டதால் பங்கு சந்தை சரிவில் முடிந்தது. ஹெச்.டி.எப்.சி, எம் அண்ட் எம், மாருதி, மற்றும் பேங்கிங், பவர், டெக்னாலஜி, கேப்பிடல் குட்ஸ் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவு நிலையும் இந்திய சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஐ.டி.சி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எஸ்.பி.ஐ.,இன்போசிஸ், எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஓ.என்.ஜி.சி., டாடா பவர் ஆகிய நிறுவன பங்குகளின் விலை அதிகம் சரிந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று முழுவதும் சரிந்திந்த குறியீட்டு எண் சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 165.42 புள்ளிகள் ( 1.99 சதவீதம் ) குறைந்து 8,160.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 47 புள்ளிகள் ( 1.27 சதவீதம் ) குறைந்து 2,573.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கோ ஏர் நிறுவனத்துடன் இணைப்பா : ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸின் பங்குகள் 19 சதவீதம் உயர்வு

குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் பங்குகள் இன்று மதியம் வர்த்தகத்தின் போது 19 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. காரணம் என்னவென்றால் அது, இன்னொரு ஏர்லைன்ஸான வாடியா குரூப்பிற்கு சொந்தமான கோ ஏர் உடன் இணையப்போகிறது, அல்லது அதன் பெருமாபான்மை பங்குகளை வாங்கப்போகிறது என்று வெளியான தகவலால்தான். மும்பை பங்கு சந்தையில் கடந்த வெள்ளி அன்று இருந்த அதன் முடிவு விலையில் இருந்து இன்று மதிய வேளையில் அதன் பங்கு மதிப்பு 19.08 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. அதன் 12.05 லட்சம் பங்குகளை இன்று மதியம் வரை கைமாறியிருந்தன. இதற்கு காரணம் கோ ஏர் உடன் அது இணைய போகிறது அல்லது கோ ஏரின் பெரும்பான்மை பங்குகளை வாங்கப்போகிறது என்று வெளியான தகவலால்தான் என்கின்றனர் வர்த்தகர்கள். கோ ஏர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜே வாடியாவை, ஸ்பைஸ் ஜெட்டின் சி.இ.ஓ.,சஞ்சய் அகர்வால் கடந்த மாதம் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்


அபுதாபியின் தங்கம் விற்பனை 70 சதவீதம் வரை குறைந்தது

அதிக விலை, பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் அபுதாபியின் தங்கம் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 70 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. ஐக்கிய அரபு குடியரசின் தங்கம் மற்றும் தங்க நகை விற்பனையாளர்கள சங்க தலைவர் இதனை தெரிவித்தார். பொருளாதார மந்த நிலை காரணமாக, பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் முதலீட்டார்கள் பங்கு சந்தையிலோ அல்லது வேறு பொருட்கள் மீதோ முதலீடு செய்வதற்கு பதிலாக இப்போது தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள். இதனால் தங்கத்திற்கு டிமாண்ட் ஏற்பட்டு அதன் விலை உயர்ந்து விட்டது என்கிறார்கள். இதன் காரணமாக, சாதாரண மக்களுக்கு, தங்கம் ஒரு வாங்க முடியாத பொருளாக ஆகி விட்டது. தங்கத்தின் விலை முதலில் மோசமாகி, இப்போது மிக மோசமாகி விட்டது என்கிறார் துஷார் பட்னி என்ற வர்த்தகர். தங்கம் வாங்குவதை விட்டு மக்கள் தள்ளி போய் விட்டதால், பிப்ரவரி மாதத்தில் மட்டும் அபுதாபியில் தங்கத்தின் விற்பனை 70 சதவீதம் வரை குறைந்திருக்கிறது என்றார் அவர்.
நன்றி : தினமலர்


51 சதவீத பங்குகளை விற்பதற்கான ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தது சத்யம்

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அதனை விற்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டது. அதனை வாங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பத்தை சத்யம் எதிர்பார்க்கிறது. அதிலிருந்து ஒரு நிறுவனத்தை சத்யம் தேர்ந்தெடுக்கும். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அதன் 51 சதவீத பங்குகளை விற்பதற்கு சமீபத்தில் செபியிடம் அனுமதி வாங்கியது. இதற்கான விலை எதையும் அது நிர்ணயம் செய்யவில்லை என்றாலும், வாங்க விரும்புபவர்கள் மார்ச் 12 ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லிருக்கிறது. மேலும் சத்யத்தை வாங்க விருப்பம் செய்து பதிவு செய்திருப்பவர்கள் வரும் 20ம் தேதிக்குள் குறைந்தது ரூ.1,500 கோடி பணம் வைத்திருப்பதற்கான ஆதாரம், மற்ற விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் விபரங்கள் அடிப்படையில் ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 51 சதவீத பங்குகள் விற்கப்படும். அவர்களுக்கு 31 சதவீத பங்குகளை புதிய பங்குகளாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கொடுக்கும். மீதம் 21 சதவீத பங்குகளை அவர்கள் வெளி சந்தையில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்


அமெரிக்காவில் ஆட்குறைப்பு: இந்தியாவில் ஆட்கள் தேர்வு

அமெரிக்காவில் உள்ள தன் ஊழியர்கள் 10 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பி, இந்தியாவில் தன் பணிகளை செய்து கொள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் 'வார்னர் பிரதர்ஸ்' திட்டமிட்டுள்ளது. ஹாலிவுட் உட்பட சர்வதேச அளவில் சினிமா படங்கள் தயாரிப்பில் பிரபலமான நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். நிதி நெருக்கடியில் இருந்து இந்த நிறுவனமும் தப்பவில்லை. இதனால், அமெரிக்காவில் பணியாற்றி வரும் தன் எட்டாயிரம் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை வேலை நீக்கம் செய்ய தீவிரமாக யோசித்து வருகிறது. விரைவில் இது ö தாடர்பாக இறுதி முடிவெடுக்க உள்ளது. அமெரிக்காவில் ஆளை குறைக்கும் அதே நேரத்தில், தன் பணிகளை இந்தியாவில் அமர்த்தும் ஊழியர்களை கொண்டு செய்து கொள்ளும் 'அவுட்சோர்சிங்' முறையை அமல்படுத்தவும் வார்னர் பிரதர்ஸ் எண்ணியுள்ளது. முதல் கட்டமாக, இந்தியாவில் 200 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் , நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க உள்ளது. அதே சமயம், இந்தியாவில் ஊழியர்கள் சம்பளம் மட்டுமின்றி, மொத்த செலவும் மிக குறைவு தான். நிறுவன தலைவர் பேர்ரி மேயர் கடந்த மாதம் ஏற்கனவே, ஆட் குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 'எங்கள் சினிமா வர்த்தகத்தை பொறுத்தவரை, காலத்துக்கேற்ப முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் எங்கள் பணிகளை செய்து கொள்வதால், பல வகையில் செலவை குறைக்க முடிகிறது. அதனால், எங்கள் பணிகளை அவுட்சோர்சிங் முறையில், இந்தியாவில் செய்து கொள்வதில் தவறில்லை' என்று தெரிவித்தார். அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டவர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று புதிய அதிபர் பராக் ஒபாமா பிடிவாதமாக இருக்கிறார்; அதற்காகவே, வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த வழி செய்யும் எச் 1 பி விசாவில் கைவைத்துள்ளார். இந்நிலையில், வார்னர் பிரதர்சை தொடர்ந்து, பல அமெரிக்க நிறுவனங்களும், தொடர்ந்து இந்தியாவில் தங்கள் பணிகளை செய்து கொள்ள தயங்காது என்றே தோன்றுகிறது.
நன்றி : தினமலர்


சுபிக்ஷாவை 'நிமிர்த்த' வங்கிகள் முயற்சி

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பல்பொருள் அங்காடித்தொடர் 'சுபிக்ஷா' வை மீண்டும் நிலை நிறுத்த வங்கிகள், முதலீட்டாளர் கள் மூலம் தீவிர முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி 'சுபிக்ஷா' கடந்தாண்டு வரை மொத்த வர்த்தகம் நான்காயிரம் கோடி ரூபாய்; இதற்கு நாடு முழுவதும் 1,600 கிளைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இதன் வர்த்தகம் பெருமளவில் குறைந்தது; ஊழியர்களுக்கு சம்பளமும் தரப்படவில்லை. இந்த நிலையில், பல கடைகளில் விற்பனை படுமந்தமாகவே இருந்தது. இப்போது, இதன் நிலை மோசமாகி விட்டது. சம்பளம் தரப்படவில்லை என்பதை காரணம் காட்டி அதன் பிரதான அதிகாரிகள் பணியில் இருந்து வெளியேறி வருகின்றனர்; கிளைகளும் தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுபிக்ஷா நிறுவனம் விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது என்று பரபரப்பான தகவல் பரவியது. ஆனால்'சுபிக்ஷா , எக்காரணம் கொண்டும் விற்கப்படமாட்டாது; அதை மீண்டும் நிலை நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று இதை நிறுவிய தலைவர் சுப்ரமணியம் கூறியுள்ளார். சுபிக்ஷாவில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் சாப்ட்வேர் நிறுவனம் விப்ரோவுக்கு கூட்டாக 33 சதவீத பங்குகள் உள்ளன. இவர்கள் தலைமையில், சில வங்கிகளும், முதலீட்டாளர்களும் சேர்ந்து, சுபிக்ஷாவை மீண்டும் புதுப்பித்து நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுபிக்ஷாவுக்கு ஏற்கனவே 700 கோடி ரூபாய் கடன் தொகையை ஐ.சி.ஐ.சி.ஐ.,உட்பட சில வங்கிகள் தந்துள்ளன. அவற்றின் அசல், வட்டியை கட்டும் கால அவகாசத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல, நிதி நெருக்கடியை தீர்க்கவும் கடன்பத்திரங்கள் வெளியிடும் யோசனையும் பரிசீலீக்கப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்