Monday, March 9, 2009

அமெரிக்காவில் ஆட்குறைப்பு: இந்தியாவில் ஆட்கள் தேர்வு

அமெரிக்காவில் உள்ள தன் ஊழியர்கள் 10 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பி, இந்தியாவில் தன் பணிகளை செய்து கொள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் 'வார்னர் பிரதர்ஸ்' திட்டமிட்டுள்ளது. ஹாலிவுட் உட்பட சர்வதேச அளவில் சினிமா படங்கள் தயாரிப்பில் பிரபலமான நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். நிதி நெருக்கடியில் இருந்து இந்த நிறுவனமும் தப்பவில்லை. இதனால், அமெரிக்காவில் பணியாற்றி வரும் தன் எட்டாயிரம் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை வேலை நீக்கம் செய்ய தீவிரமாக யோசித்து வருகிறது. விரைவில் இது ö தாடர்பாக இறுதி முடிவெடுக்க உள்ளது. அமெரிக்காவில் ஆளை குறைக்கும் அதே நேரத்தில், தன் பணிகளை இந்தியாவில் அமர்த்தும் ஊழியர்களை கொண்டு செய்து கொள்ளும் 'அவுட்சோர்சிங்' முறையை அமல்படுத்தவும் வார்னர் பிரதர்ஸ் எண்ணியுள்ளது. முதல் கட்டமாக, இந்தியாவில் 200 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் , நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க உள்ளது. அதே சமயம், இந்தியாவில் ஊழியர்கள் சம்பளம் மட்டுமின்றி, மொத்த செலவும் மிக குறைவு தான். நிறுவன தலைவர் பேர்ரி மேயர் கடந்த மாதம் ஏற்கனவே, ஆட் குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 'எங்கள் சினிமா வர்த்தகத்தை பொறுத்தவரை, காலத்துக்கேற்ப முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் எங்கள் பணிகளை செய்து கொள்வதால், பல வகையில் செலவை குறைக்க முடிகிறது. அதனால், எங்கள் பணிகளை அவுட்சோர்சிங் முறையில், இந்தியாவில் செய்து கொள்வதில் தவறில்லை' என்று தெரிவித்தார். அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டவர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று புதிய அதிபர் பராக் ஒபாமா பிடிவாதமாக இருக்கிறார்; அதற்காகவே, வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த வழி செய்யும் எச் 1 பி விசாவில் கைவைத்துள்ளார். இந்நிலையில், வார்னர் பிரதர்சை தொடர்ந்து, பல அமெரிக்க நிறுவனங்களும், தொடர்ந்து இந்தியாவில் தங்கள் பணிகளை செய்து கொள்ள தயங்காது என்றே தோன்றுகிறது.
நன்றி : தினமலர்


No comments: