Friday, September 26, 2008

கார்கள் விற்பனை சரிவு : டூ வீலர்கள் அதிகரிப்பு


புதுடில்லி: கார்கள் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால், மக்களில் பலர், கார் வாங்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை தள்ளிப் போட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார்கள் விற்பனை 4.35 சதவீதம் குறைந்துள்ளது. 2008 ஆகஸ்டில் 94 ஆயிரத்து 584 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டில் இதே மாதத்தில், 98 ஆயிரத்து 893 கார்கள் விற்பனையாயின. அதேபோல், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 6.33 சதவீதம் சரிந்துள்ளது. 2008 ஆகஸ்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 34 ஆயிரத்து 294. ஆனால், 2007 ஆகஸ்டில் 36 ஆயிரத்து 615 வாகனங்கள் விற்றன. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.19 சதவீதம் குறைந்துள்ளது. 2007 ஆகஸ்டில் 32 ஆயிரத்து 973 மூன்று சக்கர வாகனங்கள் விற்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31 ஆயிரத்து 920 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2007 ஆகஸ்டில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 504 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதே மாதத்தில், 6 லட்சத்து 20 ஆயிரத்து 927 வாகனங்கள் விற்றுள்ளன. அதாவது, 14 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

நன்றி : தினமலர்

ஏ.டி.எம்., மையங்கள் மூலமாக தினமும் ரூ.1,000 கோடி பரிமாற்றம்


புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, தினமும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்கிறது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், 22,500 மையங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமானவை. 10,500 மையங்கள் தனியார் வங்கிகளுக்கு சொந்தமானவை. 1,050 மையங்கள் வெளிநாட்டு வங்கிகளால் அமைக்கப் பட்டுள்ளன. பழைய பொதுத்துறை வங்கிகள் 2,190 மையங்களை அமைத்துள் ளன. இந்த மையங்களில் இருந்து சராசரியாக தினமும் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் இருந்து சராசரியாக தினமும் 760 கோடி ரூபாயும், தனியார் வங்கிகளின் மையங்களில் இருந்து தினமும் 355 கோடி ரூபாயும் வாடிக்கையாளர்களால் எடுக்கப்படுகின்றன. 2008-09ம் ஆண்டு இறுதியில் நாட்டில் மேலும் 10,500 ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

ரூ.10 ஆயிரம் கோடி மானநஷ்டம் கோரி முகேஷ் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கு



மும்பை: முகேஷ் அம்பானி மீது, அவரது தம்பி அனில் அம்பானி குழுமம், 10 ஆயிரம் கோடி ரூபாய் கோரி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முகேஷ் - அம்பானி மோதல், மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக, முகேஷ் மற்றும் அனில் இடையே 2004ம் ஆண்டு, கடும் மோதல் ஏற்பட்டது. குடும்பத்தாரின் சமரசத்தை தொடர்ந்து, 2005ம் ஆண்டு நிறுவனங்கள் பிரித்துக் கொள்ளப் பட்டாலும், இன்னும் பிரச்னைகள் தொடர்கின்றன. பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில், காஸ் சப்ளை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வழக்கு தொடரப்பட்டது. இதை பேசித் தீர்த்துக் கொள்ளவும், தாயின் உதவியை நாடவும் கோர்ட் அறிவுரை கூறியது. ஆனால், முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், காஸ் சப்ளை ஒப்பந்தத்தை மறுப்பதாக, அனில் அம்பானி குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, 'இப் பிரச்னையில் கோர்ட்டில் தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று, முகேஷ் அம்பானி திட்டவட்டமாக கூறினார். இதற்கிடையே, அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி பத்திரிகை, 'நியூயார்க் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, முகேஷ் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில். அந்தப் பேட்டியில், பாகப் பிரிவினைக்கு முன்பாக, அனில் அம்பானியின் நண்பர்களும், கூட்டாளிகளும், உளவு பார்த்ததாகவும், இது அனிலின் மேற்பார்வையில் நடந்ததாகவும் முகேஷ் குறிப்பிட்டு இருந்தார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி, முகேஷ் மீது 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில் அம்பானி. மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 200 பக்க மனுவில் கூறியிருப்பது என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து கேட்ட போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பதில் அளிக்க மறுத்துவிட்டார். பல முறை முயன்றும், அனில் தரப்பு தகவலை அறியமுடியவில்லை.

நன்றி : தினமலர்