Friday, September 26, 2008

கார்கள் விற்பனை சரிவு : டூ வீலர்கள் அதிகரிப்பு


புதுடில்லி: கார்கள் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால், மக்களில் பலர், கார் வாங்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை தள்ளிப் போட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார்கள் விற்பனை 4.35 சதவீதம் குறைந்துள்ளது. 2008 ஆகஸ்டில் 94 ஆயிரத்து 584 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டில் இதே மாதத்தில், 98 ஆயிரத்து 893 கார்கள் விற்பனையாயின. அதேபோல், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 6.33 சதவீதம் சரிந்துள்ளது. 2008 ஆகஸ்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 34 ஆயிரத்து 294. ஆனால், 2007 ஆகஸ்டில் 36 ஆயிரத்து 615 வாகனங்கள் விற்றன. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.19 சதவீதம் குறைந்துள்ளது. 2007 ஆகஸ்டில் 32 ஆயிரத்து 973 மூன்று சக்கர வாகனங்கள் விற்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31 ஆயிரத்து 920 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2007 ஆகஸ்டில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 504 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதே மாதத்தில், 6 லட்சத்து 20 ஆயிரத்து 927 வாகனங்கள் விற்றுள்ளன. அதாவது, 14 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

நன்றி : தினமலர்

No comments: