Friday, September 26, 2008
ரூ.10 ஆயிரம் கோடி மானநஷ்டம் கோரி முகேஷ் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கு
மும்பை: முகேஷ் அம்பானி மீது, அவரது தம்பி அனில் அம்பானி குழுமம், 10 ஆயிரம் கோடி ரூபாய் கோரி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முகேஷ் - அம்பானி மோதல், மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக, முகேஷ் மற்றும் அனில் இடையே 2004ம் ஆண்டு, கடும் மோதல் ஏற்பட்டது. குடும்பத்தாரின் சமரசத்தை தொடர்ந்து, 2005ம் ஆண்டு நிறுவனங்கள் பிரித்துக் கொள்ளப் பட்டாலும், இன்னும் பிரச்னைகள் தொடர்கின்றன. பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில், காஸ் சப்ளை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வழக்கு தொடரப்பட்டது. இதை பேசித் தீர்த்துக் கொள்ளவும், தாயின் உதவியை நாடவும் கோர்ட் அறிவுரை கூறியது. ஆனால், முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், காஸ் சப்ளை ஒப்பந்தத்தை மறுப்பதாக, அனில் அம்பானி குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, 'இப் பிரச்னையில் கோர்ட்டில் தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று, முகேஷ் அம்பானி திட்டவட்டமாக கூறினார். இதற்கிடையே, அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி பத்திரிகை, 'நியூயார்க் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, முகேஷ் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில். அந்தப் பேட்டியில், பாகப் பிரிவினைக்கு முன்பாக, அனில் அம்பானியின் நண்பர்களும், கூட்டாளிகளும், உளவு பார்த்ததாகவும், இது அனிலின் மேற்பார்வையில் நடந்ததாகவும் முகேஷ் குறிப்பிட்டு இருந்தார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி, முகேஷ் மீது 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில் அம்பானி. மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 200 பக்க மனுவில் கூறியிருப்பது என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து கேட்ட போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பதில் அளிக்க மறுத்துவிட்டார். பல முறை முயன்றும், அனில் தரப்பு தகவலை அறியமுடியவில்லை.
நன்றி : தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment