Thursday, July 24, 2008

இந்தியாவில் 17 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது இன்டெல்

கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பாளரான இன்டெல் கார்பரேஷனின் ஒரு அங்கமாக இன்டெல் கேப்பிடல், மூன்று இந்திய கம்பெனிகளில் 17 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது என்று, இன்டெல் கார்பரேஷனில் எக்ஸிகூடிவ் வைஸ் பிரசிடென்ட் ஆகவும் இன்டெல் கேப்பிட்டலின் தலைவராகவும் இருக்கும் அர்விந்த் சோதானி தெரிவித்தார். இரண்டு இன்டர்நெட் நிறுவனங்களிலும் ஒரு விளம்பர நிறுவனத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படும் என்று அவர் புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆன்லைன் டிராவல் நிறுவனமான யாத்ரா டாட் காம், நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமான பஷ்ஷின் டவுன் டாட் காம், மற்றும் எம்னெட் சம்சாரா மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இந்த தொகை முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் 1998ல் துவங்கப்பட்ட இன்டெல் கேப்பிடல் நிறுவனம், இதுவரை எட்டு நகரங்களில் சுமார் 50 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. டிசம்பர் 2005ல் 250 மில்லியன் டாலர் முதலீட்டில் துவங்கப்பட்ட இன்டெல் கேப்பிடல் இந்தியா டெக்னாலஜி ஃபண்ட்டிலிருந்து இந்த தொகை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


கீழே இறங்கிய இன்றைய பங்கு சந்தை


கடந்த ஐந்து நாட்களாக ஏறி இருந்த பங்கு சந்தை இன்று கீழே இறங்கி விட்டது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 2,300 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் இன்று இறக்கத்தில் முடிந்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்ட சரிவு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. 11.91 சதவீதமாக இருக்கும் பணவீக்கம் 12 சதவீதத்தை தாண்டி விடும் என்ற எதிர்பாõர்ப்பு இருந்ததும் பங்கு சந்தை சரிவுக்கு காரணம் என்கிறார்கள். மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 165.27 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) குறைந்து 14,777.01 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 43.25 புள்ளிகள் ( 0.97 சதவீதம் ) குறைந்து 4,433.55 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது டி சி எஸ், டாடா ஸ்டீல், ஏ சி சி, டாடா பவர் நிறுவனங்கள்தான். இந்நிலையிலும் நால்கோ, ஜீ என்டெர்டெய்ன், ஓ என் ஜி சி, டி எல் எஃப், ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்திருந்தன.

நன்றி :தினமலர்

ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயரத்தும் ?


பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம் என்று ராய்ட்டர் செய்தி நிறுவன கணிப்பு தெரிவிக்கிறது. தற்போது 12 சதவீதத்தை ஒட்டி இருக்கும் பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை சீரமைப்பு கூட்டத்தில் ரெபோ ரேட் 0.25 முதல் 0.5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் டபுள் டிஜிட்டுக்கு சென்றதை அடுத்து ரிசர்வ் வங்கி சமீபத்தில்தான் ரெபோ ரேட்டை உயர்த்தியது. சமீபத்தில் பணவீக்கம் உயர்ந்ததற்கு பெரிதும் காரணமாக இருந்தது, உற்பத்தி துறையில் ஏற்பட்ட பணவீக்க உயர்வுதான் என்கிறார் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் பொருளாதார நிபுணர் சோனல் வர்மா. உற்பத்தியாளர்கள் அவர்களுக்கு ஏற்படும் உற்பத்தி செலவை நுகர்வோரிடம் திணிப்பதாலும், ஊழியர்கள் அதிகம் சம்பளம் கேட்பதும் பணவீக்க உயர்வுக்கு காரணம் என்கிறார் அவர். பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் அடுத்த வாரத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை உயர்த்தும் என்றும், இன்னும் ஒரு 0.5 சதவீத ரேட்டை இந்த வருட இறுதிக்குள் உயர்த்தும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது. பேரலுக்கு 124 டாலர்


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து வருகிறது. நேற்று நியுயார்க் சந்தையில் லைட் ஸ்வீட் குரூட் விலை பேரல் ஒன்றுக்கு 3.98 டாலர் குறைந்து 124.44 டாலராக இருந்தது. ஜூலை 11ம் தேதி 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 124 டாலருக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் கல்ஃப் ஆப் மெக்ஸிகோவில் மையம் கொண்டிருக்கும் டாலி என்ற சூறாவளியால் அங்கிருக்கும் எண்ணெய் கிணறுகள் சேதமாகி அதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் என்ற பயம் முதலில் இருந்தது இப்போது அந்த பயம் நீங்கி இருப்பதால் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 4.26 டாலர் குறைந்து 125.29 டாலராக இருந்தது. அமெரிக்க எரிசக்தி துறை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு காரணம் என்கிறார்கள்.


நன்றி :தினமலர்


பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது அரசுக்கு கிடைத்த வெற்றி


வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போஸ்டர் அடிக்கும் அளவிற்கு தொடர்ந்து மேலேயே சென்று கொண்டிருக்கிறது பங்குச் சந்தை. கடந்த வியாழன் முதல் நேற்று வரை 2,300 புள்ளிகளுக்கு மேல் கூடி முதலீட்டாளர்களை மறுபடியும் சந்தை பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பங்குச் சந்தை, அரசியலில் ஜெயித்து பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் மட்டும் ஒதுங்கி இருக்கிறோமே, நாமும் கலந்து கொள்ளலாமே என்று கச்சா எண்ணெயும் விலை குறைந்து பங்குச் சந்தை பார்ட்டியில் கலந்து கொண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலர் வரை குறைந்தது. சமீபத்திய அதிகபட்ச விலையான பேரலுக்கு 147 டாலரிலிருந்து, 126 டாலர் வரை வந்துள்ளது. இது, 14 சதவீதம் குறைவு. திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று தினங்களுமே அரசியலால் பங்குகளின் விலை ஏறியது என்று தான் கூறவேண்டும். அரசியலில் எம்.பி.,க்களின் விலை ஏறியது போல, பங்குச் சந்தையிலும் ஒரு ஏற்றம் இருந்தது ஒரு ஆறுதல் தான். சமீபகாலமாக ஏற்பட்ட பங்குச் சந்தை புண்களுக்கு இந்த ஏற்றம் ஒரு மருந்தானது. சிறிய, நடுத்தர, பெரிய கம்பெனி ஆகிய அனைத்து பங்குகளும் மேலே சென்றன. நேற்று பல பங்குகள் 10 சதவீதத்திற்கு மேலே கூடிச் சென்றது. குறிப்பாக ஆர்.என்.ஆர்.எல். (அனில் அம்பானியின் கம்பெனி) 24 சதவீதம் மேலே சென்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு விலைகள் கூடின. அதே சமயம் ஆயில் தயாரிக்கும் கம்பெனியான கெய்ர்ன் இந்தியாவின் விலை குறைந்தது. கடந்த 15 தினங்களாக இந்தக் கம்பெனியின் பங்கு விலை குறைந்து வருவது குறிப்பிடத் தக்கது. அணு உலைகள் அமைப்பதிலும், அதற்கான இயந்திரங்களை வடிவமைப்பதிலும், செய்வதிலும் முன்பே அனுபவம் வாய்ந்த கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றது. குறிப்பாக லார்சன் அண்டு டர்போ, என்.டி.பி.சி., பி.எச். இ.எல்., அல்ஸ்டம் புராஜெக்ட்ஸ், டாடா பவர், வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ், அரிவா, ஏ.பி.பி., ரோல்டா இந்தியா ஆகியவை. வங்கித்துறை, கட்டுமானத்துறை, மின்சாரத்துறை பங்குகள் மேலே சென்றன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 838 புள்ளிகள் கூடி 14,942 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 236 புள்ளிகள் கூடி 4,476 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. என்ன நடக்கலாம்? : இன்சூரன்ஸ் சீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். இது, இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகளில் இன்னும் போட்டிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் கொண்டு வரும். வெளிநாட்டு வங்கிகள், இந்திய வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். உலகளவில் இந்திய வங்கிகளின் மதிப்பை உயர்த்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு பற்றி மறுபடி பேசப்படலாம். பொறுமை காத்தவர்களுக்கும், சரிவில் வாங்கியவர்களுக்கும் பங்குச் சந்தை சிறிது லாபத்தை கடந்த ஐந்து நாட்களில் கொடுத்திருக்கும். வரும் நாட்களிலும் சந்தையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம். அதே சமயம் சந்தையில் கையை பெரிதாகச் சுட்டுக் கொண்டு அதிலிருந்து வெளிவரத் துடித்து கொண்டு இருப்பவர்கள் பலர். அவர்கள் எல்லா ஏற்றத்திலும் விற்று வெளியே வரவேண்டும் என்று நினைப்பதால் சந்தை அதையும் தாங்கி மேலே செல்ல வேண்டும். சந்தைக்கு சிறிய முதலீட்டாளர்கள் வந்தால் தான் சந்தை பரிணமிக்கும். அதே சமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இனி சிறிது திரும்பிப் பார்ப்பர். அந்தப் பணம் உள்ளே வந்தால் பங்குச் சந்தை ஏறும். அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்புள்ளது.
- சேதுராமன் சாத்தப்பன்

நன்றி :தினமலர்