Thursday, July 24, 2008

பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது அரசுக்கு கிடைத்த வெற்றி


வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போஸ்டர் அடிக்கும் அளவிற்கு தொடர்ந்து மேலேயே சென்று கொண்டிருக்கிறது பங்குச் சந்தை. கடந்த வியாழன் முதல் நேற்று வரை 2,300 புள்ளிகளுக்கு மேல் கூடி முதலீட்டாளர்களை மறுபடியும் சந்தை பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பங்குச் சந்தை, அரசியலில் ஜெயித்து பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் மட்டும் ஒதுங்கி இருக்கிறோமே, நாமும் கலந்து கொள்ளலாமே என்று கச்சா எண்ணெயும் விலை குறைந்து பங்குச் சந்தை பார்ட்டியில் கலந்து கொண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலர் வரை குறைந்தது. சமீபத்திய அதிகபட்ச விலையான பேரலுக்கு 147 டாலரிலிருந்து, 126 டாலர் வரை வந்துள்ளது. இது, 14 சதவீதம் குறைவு. திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று தினங்களுமே அரசியலால் பங்குகளின் விலை ஏறியது என்று தான் கூறவேண்டும். அரசியலில் எம்.பி.,க்களின் விலை ஏறியது போல, பங்குச் சந்தையிலும் ஒரு ஏற்றம் இருந்தது ஒரு ஆறுதல் தான். சமீபகாலமாக ஏற்பட்ட பங்குச் சந்தை புண்களுக்கு இந்த ஏற்றம் ஒரு மருந்தானது. சிறிய, நடுத்தர, பெரிய கம்பெனி ஆகிய அனைத்து பங்குகளும் மேலே சென்றன. நேற்று பல பங்குகள் 10 சதவீதத்திற்கு மேலே கூடிச் சென்றது. குறிப்பாக ஆர்.என்.ஆர்.எல். (அனில் அம்பானியின் கம்பெனி) 24 சதவீதம் மேலே சென்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு விலைகள் கூடின. அதே சமயம் ஆயில் தயாரிக்கும் கம்பெனியான கெய்ர்ன் இந்தியாவின் விலை குறைந்தது. கடந்த 15 தினங்களாக இந்தக் கம்பெனியின் பங்கு விலை குறைந்து வருவது குறிப்பிடத் தக்கது. அணு உலைகள் அமைப்பதிலும், அதற்கான இயந்திரங்களை வடிவமைப்பதிலும், செய்வதிலும் முன்பே அனுபவம் வாய்ந்த கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றது. குறிப்பாக லார்சன் அண்டு டர்போ, என்.டி.பி.சி., பி.எச். இ.எல்., அல்ஸ்டம் புராஜெக்ட்ஸ், டாடா பவர், வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ், அரிவா, ஏ.பி.பி., ரோல்டா இந்தியா ஆகியவை. வங்கித்துறை, கட்டுமானத்துறை, மின்சாரத்துறை பங்குகள் மேலே சென்றன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 838 புள்ளிகள் கூடி 14,942 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 236 புள்ளிகள் கூடி 4,476 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. என்ன நடக்கலாம்? : இன்சூரன்ஸ் சீர்திருத்தம், வங்கி சீர்திருத்தம் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம். இது, இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகளில் இன்னும் போட்டிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களையும் கொண்டு வரும். வெளிநாட்டு வங்கிகள், இந்திய வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டலாம். உலகளவில் இந்திய வங்கிகளின் மதிப்பை உயர்த்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு பற்றி மறுபடி பேசப்படலாம். பொறுமை காத்தவர்களுக்கும், சரிவில் வாங்கியவர்களுக்கும் பங்குச் சந்தை சிறிது லாபத்தை கடந்த ஐந்து நாட்களில் கொடுத்திருக்கும். வரும் நாட்களிலும் சந்தையில் சிறிது முன்னேற்றம் இருக்கலாம். அதே சமயம் சந்தையில் கையை பெரிதாகச் சுட்டுக் கொண்டு அதிலிருந்து வெளிவரத் துடித்து கொண்டு இருப்பவர்கள் பலர். அவர்கள் எல்லா ஏற்றத்திலும் விற்று வெளியே வரவேண்டும் என்று நினைப்பதால் சந்தை அதையும் தாங்கி மேலே செல்ல வேண்டும். சந்தைக்கு சிறிய முதலீட்டாளர்கள் வந்தால் தான் சந்தை பரிணமிக்கும். அதே சமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இனி சிறிது திரும்பிப் பார்ப்பர். அந்தப் பணம் உள்ளே வந்தால் பங்குச் சந்தை ஏறும். அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்புள்ளது.
- சேதுராமன் சாத்தப்பன்

நன்றி :தினமலர்


No comments: