Wednesday, July 23, 2008

பங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் : பேங்கிங் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தன


இந்திய பங்கு சந்தையில் இன்று ஒரு மகத்தான் நாளாக இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் ( ஆதரவு - 275, எதிர்ப்பு - 256 ) வெற்றி பெற்றதை அடுத்து, இன்று பங்கு சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. 2008 மார்ச் 25ம் தேதிக்குப்பின் இன்றுதான் ஒரே நாளில் சென்செக்ஸ் இவ்வளவு அதிகம் புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. ஜூலை 16,2008ல் 12,576 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் எல்லா பங்குகளுமே ஏறி இருந்தது. பெரும்பாலானவர்கள் பேங்கிங், ரியல் எஸ்டேட், உற்பத்தி பொருட்கள், பவர், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் துறை சார்ந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காண்பித்தனர். இவைகள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் மிட் கேப் 5 சதவீதமும், ஸ்மால் கேப் 4 சதவீதமும் உயர்ந்திருந்தது. கடந்த சில காலமாகவே இந்திய அரசியல் ஏற்பட்ட குழப்பம், கச்சா எண்ணெய்யின் கடுமையான விலை உயர்வு, பணவீக்க உயர்வு, ரூபாயின் மதிப்பு மாற்றத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவைகளால் இந்திய சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இப்போது இந்திய அரசியலில் நீடித்த குழப்பம் தீர்ந்து போனது. கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. எனவே இனிமேல் பங்கு சந்தையில் நல்ல ஏற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். இன்றைய பங்கு சந்தையின் வர்த்தக முடிவில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 838.08 புள்ளிகள் ( 5.94 சதவீதம் ) உயர்ந்து 14,942.28 புள்ளிகளில் முடிந்துள்ளது.( 15 ஆயிரம் புள்ளிகளை எட்ட இன்னும் கொஞ்சம் புள்ளிகளே இருக்கின்றன ). தேசிய பங்கு சந்தையில் நிப்டி 236.70 புள்ளிகள் ( 5.58 சதவீதம் ) உயர்ந்து 4,476.80 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ஹெச் டி எஃப் சி வங்கி, டி எல் எஃப், செய்ல், பி என் பி ஆகியவை நல்ல லாபம் பார்த்தன.

நன்றி : தினமலர்


No comments: