Friday, March 13, 2009

கலால் வரி செலுத்துவோருக்கு ஏ.சி.இ.எஸ்., திட்டம் அறிமுகம்

கலால் மற்றும் சேவை வரி செலுத்துவோர் தங்களது கணக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்யும் ஏ.சி.இ.எஸ்., திட்டம் சென்னையில் நேற்று துவக்கப்பட்டது. மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை, வரி செலுத்துவோர் மின்னணு முறையில் கணக்குகளை பதிவு செய்யவும், அறிவிப்பு மற்றும் ஆவணங்களை பெறவும், பதிவின் அன்றைய நிலையை அறியவும் ஏ.சி.இ.எஸ்., (ஆட்டோமேஷன் ஆப் சென்ட்ரல் எக்சைஸ் அண்ட் சர்வீஸ் டேக்ஸ்) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் சோதனை முயற்சியாக பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்னையில் சேவை வரி மையம் மற்றும் அதிகளவில் வரி செலுத்துவோர் மையம் ஆகிய இரு மையங்களில் இத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஸ்ரீதர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஸ்ரீதர், 'சிஸ்டம்ஸ்' பிரிவு பொது இயக்குனர் பரண்டே, சென்னை மண்டல மத்திய கலால் துறை முதன்மை கமிஷனர் விட்டல் தாஸ் ஆகியோர் கூறியதாவது: வரி செலுத்துவோர், அலுவலகத்திற்கு நேரில் வராமல் மின்னணு முறையில் தனது கணக்குகளை பதிவு செய்ய முடியும். வரி செலுத்தியதில் மீதத்தொகையை திரும்பப் பெறும் கோரிக்கையையும் மின்னணு முறையில் பதிவு செய்யலாம். மேலும் தங்களது பதிவின் நிலையையும் உடனுக்குடன் கம்ப்யூட்டர் மூலம் அறியலாம். இத்திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பெங்களூரில் தற்போது 100 சதவீதம் பேர் இம்முறையிலேயே தங்களது கணக்கை பதிவு செய்கின்றனர். தற்போது சென்னையில் இரு மையங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நாளை கோவையிலும், இம்மாத இறுதிக்குள் பெலாபூர், புவனேஷ்வரிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கொள்கைகளை உருவாக்குவதற்கான எம்.ஐ.எஸ்., அறிக்கைகளையும் உருவாக்க முடியும். நாடு முழுவதும் உள்ள 580 மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகங்களை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கும் 'வைட் ஏரியா நெட்வொர்க்' திட்டம் 580 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் டில்லியில் தகவல் மையமும், சென்னையில் பேரிடர் சமயங்களில் தகவல் மீட்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


வீடியோ கால் வசதியுடன் 3ஜி சேவை எப்போது?

சென்னையில், 'வீடியோ கால்' வசதியுடன் கூடிய 3ஜி சேவை வர்த்தக ரீதியாக மக்களுக்கு கிடைக்க ஆகஸ்ட் மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன் துறையில் புதிய புரட்சி மூன்றாம் தலைமுறை, '3ஜி' சேவை. இதில், பேசுபவரும் எதிர்முனையில் இருப்பவரும் முகங்களை பார்த்துக்கொள்ளும் வீடியோ கால் வசதி, வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக துவக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் சென்னையில் முதல்வர் கருணாநிதியால், '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.எஸ்.என்.எல்., தலைவர் குல்தீப்கோயல், ஏப்ரல் இறுதியில் இச்சேவை வர்த்தக ரீதியாக அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார். ஆனாலும், '3ஜி' சேவை சென்னையில் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''3 ஜி சேவை துவக்குவதற்கு சென்னையில் 600 '3ஜி' பி.டி.எஸ்., கருவிகள் டவர்களில் பொருத்தப்பட வேண்டும். இதற்காக புதிய டவர்கள் அமைக்கப்பட வேண்டியதில்லை; ஏற்கனவே உள்ள டவர்களிலும் அமைக்கலாம். இந்த வகையில் தற்போது 25 மட்டுமே பொருத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் நடந்து வருகின்றன. முழுமையாக சென்னையில் 3 ஜி சேவை வர்த்தக ரீதியாக பயன் பாட்டிற்கு வர ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் ஆகலாம். மேலும், சென்னைக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் இணைப்புகள் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
'3ஜி' கட்டண விவரம்: பி.எஸ். என்.எல்., நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு எல்.ஜி., நிறுவனத்துடன் இணைந்து 3ஜி மொபைல் போனை 7000 ரூபாயிலும், 3 ஜி சிம்கார்டை 300 ரூபாயிலும் வழங்குகிறது. இதில் போஸ்ட் பெய்டு மற்றும் பிரீபெய்டு என இரண்டு திட்டங்களும் உள்ளன. குறிப்பாக போஸ்ட் பெய்டு திட்டத்தில் மாத வாடகை 1000 ரூபாய். வாய்ஸ் காலுக்கு நிமிடத்திற்கு 10 காசுகள், உள்ளூர் வீடியோ காலுக்கு நிமிடத்திற்கு 2 ரூபாய், எஸ்.டி.டி., வீடியோ காலுக்கு நிமிடத்திற்கு 3 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இதில், 1600 இலவச கால்களும், 75 இலவச வீடியோ கால்களும் அளிக்கப்படுகிறது. இரண்டாவது திட்டத்திற்கு 2500 ரூபாய் மாத வாடகை. இதில் உள்ளூர் வீடியோ காலுக்கு ஒரு ரூபாயும், எஸ்.டி.டி.,க்கு 2 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற சலுகைகள் இதற்கும் பொருந்தும்.
நன்றி : தினமலர்


கோடீஸ்வர அந்தஸ்தை இழந்த 29 இந்திய தொழிலதிபர்கள்: லட்சுமி மிட்டலை முந்தினார் முகேஷ் அம்பானி

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவின் லட்சுமி மிட்டலை விட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலில் உள்ளதாக, அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 97 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவருக்கு அடுத்த இடத் தில் இந்தியாவின் லட்சுமி மிட் டல் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய். கடந்தாண்டு பணக்காரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் நான்காவது இடத்திலும், முகேஷ் அம் பானி ஐந்தாவது இடத்திலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் பொருளாதார மந்த நிலையால் அதிகளவு நஷ்டமடைந்ததால், கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்தாண்டு ஆறாவது இடம் பெற்ற அனில் அம்பானி, இந் தாண்டு 34வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் மூன்றில் இரண்டு பங்கு ஷேர்கள் சரிந்ததால், இந்தாண்டு மிக அதிகளவில் நஷ்டமடைந்தார்.
போன் பேச்சு குறைவு: தொலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பொரு ளாதார நெருக்கடியால், மக்கள் குறைந்த நிமிடங்களே பேசுகின்றனர். மேலும், இந்தியாவின் பொரு ளாதார வீழ்ச்சி, பங்குச் சந்தை நெருக்கடி, அதிகரித்து வரும் போட்டி போன்றவற்றால் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு, கடந் தாண்டை விட கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் கே.பி.சிங், தற் போது 98வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். கடந்தாண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இவரின் சொத்து மதிப்பு இந்தாண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் கிளப்பிலிருந்து விஜய் மல்லையா, துளசி தாண்டி, ஆனந்த் ஜெயின் உட்பட 29 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு 'போர்ப்ஸ்' பத்திரி கை செய்தியில் கூறப் பட் டுள் ளது.
இந்நிலையில், கடந்த மாதம் இந்திய அரசு, 9 லட்சத்து 53 ஆயிரத்து 231 கோடி ரூபாய்க்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இது, நாட்டின் கோடீஸ் வரர்களின் மொத்த சொத்து மதிப் பில் இரண்டு மடங்கு குறைவு. ஆனால், அமெரிக்க பெடரல் அரசு கடந்த மாதம் 2010ம் ஆண் டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பு, அமெரிக்க கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த இழப்பு எவ்வளவு?
* உலகில் உள்ள அனைத்து கோடீஸ்வரர்களுக்கும் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 100 லட்சம் கோடி ரூபாய்.
* கடந்த ஆண்டு 1,125 ஆக இருந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை, தற்போது 793 ஆகக் குறைந்துள்ளது.
* கடந்த 2003ம் ஆண்டுக்கு பின், தற்போது முதல் முறையாக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
* உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பில்கேட்சின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய்.
* முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கேட்ஸ் உள்ளார். அவரது சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய். இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வாரன் பபெட் சொத்து மதிப்பு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய்.
நன்றி : தினமலர்