Saturday, October 17, 2009

உல்லாசம் பொங்கும் தீபாவளி

தீபாவளி நமது கலாசாரத்தோடு ஒன்றி தொன்றுதொட்டு வரும் பண்டிகை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் ஆத்ம பலம். எந்தச் சமயத்தவரது பண்டிகை என்றாலும் அந்நாளில் மற்றவரும் வாழ்த்துகள் தெரிவித்து சமுதாயத்தில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே கொள்ள வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, பரஸ்பரம் சுற்றமும் நட்பும் கூடிமகிழ்தல், விருந்து, கேளிக்கை விளையாட்டு என்று இன்பமாகக் கழியும் நாள்கள்.

வாணவேடிக்கை, பட்டாசு வகைகள் இல்லாமல் தீபாவளி நிறைவு பெறுவது இல்லை. பெரியவர்களும் குழந்தைகளோடு பட்டாசு வெடிப்பதில் கலந்து கொள்வதைக் காணலாம்.

தொலைக்காட்சி மற்றும் நவீன கேளிக்கைகள் தோன்றாத காலத்தில் தீபாவளி மிக விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது. பெற்றோரோடு சென்று துணி எடுப்பது, நாள்கணக்கில் தையல்காரரிடம் அலைவது, கூட்டுச்சேர்ந்து இனிப்பு, காரம் செய்வது, தந்தையோடு சென்று பட்டியல்படி பட்டாசு வாங்குவது, மழையிலிருந்து அதைக் காப்பாற்றி வெதுவெதுப்பாகப் பாதுகாப்பது, விடியற்காலை குளித்து முதலில் யார் பட்டாசு விடுவது என்று போட்டி போடுவது, சூடாக சிற்றுண்டி அருந்தி தீபாவளி மருந்து மயக்கத்தில் சந்தோஷத்தில் திளைப்பது. இவையெல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்னால். இப்போது தொலைக்காட்சிப் பெட்டி முன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பதில் கழிகிறது. "இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே' என்று ஏங்கத் தோன்றும்.

தீபாவளியோடு சேர்ந்து வருவது பட்டாசு வெடிகளால் ஏற்படும் விபத்துகள். மாறிவரும் சமுதாயச் சூழலில் முன்பு இருந்ததுபோல் இல்லாமல் பெரியவர்களுடைய கவனம் பல திசைகளில் ஈர்க்கப்படுகிறது.

குழந்தைகள் மீது செலுத்த வேண்டிய மேற்பார்வையின் அளவும் தேய்ந்துவிட்ட நிலையில் இத்தகைய பட்டாசு சம்பந்தப்பட்ட தீ விபத்துகள் குறைவில்லாமல் தொடர்கின்றன.

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20,000 தீ விபத்து சம்பந்தப்பட்ட அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வருகின்றன. 2008-ம் ஆண்டு 17,433 தீ அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பட்டாசு சம்பந்தப்பட்ட தீ விபத்துகள் 393. சென்னையில் மட்டும் 102 பட்டாசு தீ விபத்து அழைப்புகள் பெறப்பட்டன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பிரிவு இயங்குகிறது. இந்தப் பிரிவில் 2008-ம் ஆண்டு பட்டாசு வெடி தீ விபத்தால் 56 நபர்கள் காயமுற்று அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 19 பேர் உள்நோயாளிகள். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேர் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுள்ளனர். சந்தோஷமாகக் கழிக்க வேண்டிய நாளில், வேதனையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை. இது நாமே வரவழைத்துக் கொண்டதைத் தவிர வேறில்லை.
விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டியது. முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விதிகளையும் மீறாமல் மதித்து நடந்தால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். தீயணைப்புத் துறை பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குத் தீ பாதுகாப்புத் தணிக்கை செய்து தடையின்மைச் சான்றிதழ் வழங்குகிறது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிமங்கள் வழங்குகின்றனர். மாவட்டங்களில் வருவாய்த்துறையும், 15 கிலோவிலிருந்து 200 கிலோ வரை பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்துக்கு வெடிபொருள் சட்டப்படி மத்திய அரசின் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து உரிமம் பெற வேண்டும்.

200 கிலோவுக்கு மேற்பட்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள முதன்மை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்திய வெடிமருந்துச் சட்டம் மற்றும் வெடிமருந்து விதிகள் அடிப்படையில் இத்தகைய உரிமங்கள் வழங்கப்படுகின்றன. விதிமீறல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக பட்டாசுப் பொருள்கள் தயாரித்தலுக்கும் 5,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்.

அதிக அளவில் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் பெற்ற 590 நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெடிமருந்து மற்றும் பட்டாசு வைத்துக் கொள்வதற்கென 29 உரிமதாரர்கள் உள்ளனர்.

பட்டாசுத் தொழிற்சாலையிலும், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத ரசாயனப் பொருள்களை உயயோகிக்கக் கூடாது.

ரசாயனக் கலவைகளைத் தேவையான அளவு தயார் செய்ய வேண்டும். மிதக்கலவைகளை ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக வைத்தல் கூடாது. ஒவ்வொரு ரசாயனப் பொருளையும் தனித்தனி அறையில் வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேலை தொடங்குவதற்கு முன் மேற்பார்வையாளர் சேமிப்புக் கிடங்கு, தயாரிக்கும் அறைகளைப் பார்வையிட வேண்டும். வேண்டாத பொருள்களும், விநோதமான வாசமும் இருந்தால் பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருந்தாலோ, காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தாலோ வேலையைத் தொடங்கக்கூடாது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களையே வேலையில் அமர்த்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தொழிற்சாலைகளுக்குள் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.

ஓர் அறையில் நிர்ணயிக்கப்பட்ட பணியாளர்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாசுப் பொருள்களை அனுமதிக்கப்பட்ட உலர்மேடையில் மட்டுமே உலர வைக்க வேண்டும். இரும்புப் பட்டைகள் பொருத்திய பெட்டிகள், முக்காலிகள், இரும்பு ஆணிகள் கொண்ட பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.

இடி மின்னல் ஏற்படும் சூழலில் வேலையை நிறுத்தி பாதுகாப்பு இடங்களுக்கு வரவேண்டும். பட்டாசு வெடிச்சோதனையை திறந்த வெளியில் செய்ய வேண்டும்.

2004-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு செப்டம்பர் வரை பட்டாசுத் தொழிற்சாலைகளில் 28 பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 106 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 225 பேர் காயமடைந்துள்ளனர். சேதாரம் ரூ.68.60 லட்சம். இந்த எல்லா விபத்துகளும் கவனக்குறைவாலும் விதிகளைப் பின்பற்றாததாலும் ஏற்பட்டவை.

பட்டாசு வைக்கும் இடங்களிலும் பாதுகாப்பு அவசியம். குறைந்தபட்ச தீயணைப்பு சாதனங்களான வாளி தண்ணீர், மண், தீயணைப்பான்கள் வைத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 24-9-09 அன்று பாதுகாப்பு உணர்வில்லாமல் மற்றவர்களுடைய நலனையும் பாராமல் குடியிருப்புப் பகுதியில் பட்டாசுகளை விற்பனைக்கு முடக்கி வைத்ததால் அவை வெடித்து கட்டடமும் இடிந்து 10 பேர் உயிரிழந்தனர்.

தீயணைப்பு காவல் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகள், பட்டாசுக் கிடங்குகள், விற்பனை மையங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கொடுத்துள்ளது. அவை: கடைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆயிரம் கிலோவுக்கு மிகாமல் கடையில் பட்டாசு வைக்க வேண்டும். தாற்காலிகக் கடைகள் தீப்பிடிக்காத பொருள்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

1998-ல் மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவில் அதிக ஓசையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஒலி அலை 125 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது.

மேலும் இத்தகைய ஒலி, மருத்துவமனை, கல்விமையங்கள், நீதிமன்றங்களுக்கு அருகில் எழுப்பக்கூடாது. இந்த விதிப்படி ஆட்டம்பாம், அதிக ஒலி எழுப்பும் சரவெடி மேலே குறிப்பிட்ட மையங்களுக்கு அருகிலோ வேறு எங்குமோ வெடிக்கக்கூடாது.

பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் மேற்பார்வை தேவை. கையில் வைத்து வெடித்து சூரத்தனத்தைக் காட்டக்கூடாது.

ஒரு வாளி தண்ணீர் வைத்து வெடித்த கம்பிகள், குச்சிகளைப் போட வேண்டும். அடுக்கு மாடிக் கட்டடத்தில் ராக்கெட் போன்றவற்றைக் கொளுத்தக்கூடாது. குடிசைப்பகுதி அருகில் பட்டாசு கொளுத்தக்கூடாது. காலணி மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தால் நலம்.

பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படுவது குழந்தைகள். தீக்காயங்களைவிடக் கொடியது வேறொன்றுமில்லை. காயம் ஆறுவதற்கு நாளாகும். பட்ட இடம் விகாரம் அடையும்.

எனவே, பாதுகாப்பு நமது கையில்தான் இருக்கிறது. பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு நிமிடமும் வேண்டும். சாலை விதிகளை மதிப்பது, தலைக்கவசம் அணிவது. வாகன இருக்கை பெல்ட் போடுவது, வீட்டைப் பாதுகாப்பாக வைப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, தீ விபத்துகளைத் தவிர்ப்பது இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

உல்லாசமான தீபாவளி துன்பமில்லாத இன்பம் பொங்கும் தீபாவளியாக அமைய வேண்டும்.

கட்டுரையாளர் : ஆர். நடராஜ்
நன்றி : தினமணி

நோக்கியாவின் காலாண்டு நஷ்டம் 556 மில்லியன் யூரோ

உலகின் முன்னனி செல்போன் நிறுவனமான நோக்கியா, தனது காலாண்டு நஷ்டம் சுமார் 556 மில்லியன் என அறிவித்துள்ளது. உலகின் பொருளாதார பின்னடைவு மற்றும் சாம்சங், ஐ-போன் போன்ற நிறுவனங்களின் போட்டியால் தனது விற்பனை குறைந்துள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை சம்பாதித்த நோக்கியா நிறுவனம், செல்போன் பயன்படுத்துவோரின் ரசனைக்கு ஏற்ப தனது மாடல்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோக்கியா நிறுவனம் செய்போன்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


ஹாங்காங்கில் ஒரு பிளாட்டின் விலை ரூ.268 கோடி

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு பிளாட் ரூ.268 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட பிளாட் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங் துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ள தீவுப் பகுதியில் இந்த அழகிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹெண்டர்சன் லேண்ட் டெவலப்மென்ட் இந்த குடியிருப்பை கட்டியது.அதில் உள்ள 5 படுக்கை அறைகளைக் கொண்ட டூப்ளக்ஸ் பிளாட் விற்பனை கடந்த வாரம் நடந்தது. 6,158 சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டை ரூ.267 கோடியே 90 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்த ஒருவர், ஒப்பந்தமும் செய்து விட்டார். இந்த வீட்டின் ஒரு சதுர அடியின் விலை ரூ.4.35 லட்சம். இந்த குடியிருப்பில் அதிநவீனமான சகல வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், இந்த வீட்டை வாங்குவதற்கும் போட்டி அதிகரித்து வருகிறது.
நன்றி :தினமலர்


நோய் நாடி நோய் முதல் நாடி...

மேலைநாட்டுப் பொருளாதார சிந்தனைகளின்படி, நகர்ப்புற மேம்பாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கு நேரெதிரான சிந்தனையை முன்வைத்தவர் அண்ணல் காந்தியடிகள். வளமான கிராமப்புறம் அமைந்தால் மட்டுமே நிலையான முறையான நகர்ப்புரம் செயல்பட முடியும் என்பதை மனதில்கொண்டு மகாத்மா காந்தி வெளிட்ட திட்டம்தான் 'கிராம ஸ்வராஜ்' என்பது.

அதேபோல சந்தைப்பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட முதலாளித்துவமும், தனிமனித ஊக்கத்துக்கு மரியாதை தராத பொதுவுடைமை சித்தாந்தமும் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று கருதி, 'கலப்புப் பொருளாதாரம்' என்ற பெயரில் ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து அதன்மூலம் ஏழை, பணக்கார இடைவெளியை குறைக்கும் முயற்சிக்கு முன்னுரிமை அளித்தார் பண்டித ஜவாஹர்லால் நேரு.

இப்போது 'கிராம ஸ்வராஜ்' என்பது அண்ணல் காந்தியடிகள் விரும்பியதுபோல அமையாமல் அதன் சிதைந்த பதிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கலப்புப் பொருளாதாரம் என்பது ஒட்டுமொத்தமாக கைகழுவப்பட்டு, சந்தைப்பொருளாதாரம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகளை சமீப காலமாக இந்தியா சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

கிராமப்புறங்களில் கல்வியறிவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம், ஆனால், விவசாயிகளும் சரி, விவசாயத்தொழிலாளர்களும் சரி தங்களது குழந்தைகளை படித்து பட்டணம் செல்லவேண்டும் என்று விரும்பிகிறார்களே தவிர, அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தத் தயாராக இல்லை. படித்த இளைஞர்களும் சரி, சட்டையின் மடிப்புர் கலையாமல் மின்விசிறிக்குக் கிழே அமர்ந்து வேலை பார்ப்பதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள்.

விளைவு? விவசாயம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. கிராமப்புற மக்கள் பட்டணம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். நகரங்கள் நிரம்பி வழிகின்றன. பலதடவை தயைங்கத்தில் தெரிவித்திருப்பதைப்போல முன்பெல்லாம் பெருநகரங்களான மும்பை, தில்லி, கோல்கத்தா மற்றும் சென்னையில் மட்டும் காணப்பட்ட குடிசைப்பகுதிகள் இப்போது தாலுகா தலைநகரம் வரை காளன்கள்போல உருவாகியிருகின்றன. பெருநகரங்களின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம்.

வேலைத்தேடிப் பெருநகரங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலோர் பள்ளிப்படிப்பை முடித்தவர்களாகவும் கல்லூரியில் கலை இலக்கியப் பட்டத்தாரிகளாகவும்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நகரங்களில் என்த அளவுக்கு வேலை கிடைத்துவிடும்? கணவனும், மனைவியும் வேலைக்குப் போனாலும் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தைத் தாண்டாதவர்கள்தான் இந்தியாவில் 60 சதவீதம் குடும்பங்கள்.

ஆங்காங்கே அரசியல் தாதாக்களின் ஆசீர்வாதத்துடன் உருவாகும் குடிசைப்பகுதிகளில்கூட ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறதே தவிர சுகாதார நிலைமை அவலத்திலும் அவலம். குறிப்பாக, சென்னையில் கூவத்தின் கரைகளிலும், பக்கிங்ஹாம் கால்வாய் ஒரமாகவும் அமைந்த குடிசைப்பகுதிகளிலும் வாழும் மனிதர்களின் நிலைமையை மனித உரிமை ஆணையம் ஏன் பொருட்படுத்துவதில்லை என்று தெரியவில்லை.

ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தை மத்திய வாட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் அடிப்படை நோக்கம் குடிசைவாழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அழர்களுக்கு நிரந்தரமான சிகாதார வசதிகளுடன் கூடிய வீட்டு வசதி செய்து கொடுப்பது.

முதலில், அமைச்சகத்திடம் குடிசைப்பகுதிகளைப் பற்றிய முறையான புள்ளிவிபரம் இருக்கிறதா என்பதேகூட சந்தேகம்தான். இப்போதுதான் பெரு நகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகள் பற்றிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சகத்தின் செயல்பாட்டு அறிக்கையின்படி, ஜவாஹர்லால் நேருõ தேசிய நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்பகீழ் 4.5 லட்சம் வீடுகள் குடிசைப்பகுதியில் வாழ்வோருக்காக 2012-க்குள் கட்டத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதில் 1.03 லட்சம் வீடுகள் கட்டப்பட்டடுள்ளதாக அந்த செயல்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. காலம் தாழ்த்தப்பட்டால் கட்டுமானச் செலவு அதிகரித்து, உத்தேசித்த இலக்கை அடையமுடியாது என்ரும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

குடிசைவாழ் மக்களுக்கு வீட்டு வசதி என்பது நல்ல விழயம். தேவையான விழயம். பணக்கார மற்றும் உயர் மத்திய தர வகுப்பினர் அவர்களே தங்களது வாட்டு வசதித் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு விடுகிறார்கள். கீழ் மத்திய தர வகுப்பினருக்கு வீடு கட்டித்தர அரசின் வீட்டு வசதி வாரியங்களுக்கும் கடன் தந்து உதவ வங்கிகளுக்கும் தனியார் நிறுவனங்களும் முன்வருகின்றன. குடிசைவாழ் மக்களின் கதிதான் என்ன?

இந்த பிரச்சனையில் நகர்ப்புற குடிசைப்பகுதியில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்துவம் கிராமப்புற வளர்ச்சியிலும் விவசாய முன்னேற்றத்திலும் காட்டாமல் போனால் நகர்ப்புறம் நோக்கி நகரும் கிராமவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கும். எத்தனை வீடுகள் கட்டினாலும் தேவை அதிகரிக்குமே தவிர குறையாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் அதேநேரத்தில் விவசாயத் தொழிலாளிகளுக்கும் அதிகரித்த கூலியும், விவசாயிகளுக்கு அதிக லாபமும் அடைய வழி காண்பது மட்டுமே உழைப்பின் மரியாதையை உயர வைத்து கிராமப்புற வளர்ச்சியை உறுதிப்படுத்தும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க நினைக்கிறார்களே..!.
நன்றி : தினமணி

சீன பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிப்பு

சீனாவிலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் தான் நாட்டிலேயே அதிக அளவிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் ரூ. 3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இது இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் ஆகும். இவற்றில் 5 முதல் 10 சதவீத பட்டாசுகள் ஏற்றுமதி செய்யபடுகின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்டு விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்திய-சீன எல்லை மற்றும் நேபாளம், பங்களாதேஷ் எல்லைகள் வழியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் சீன பட்டாசுகள், வட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் பட்டாசுக் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி : தினமலர்


ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்தாலும் மாற்றலாம் : விதிமுறைகளை எளிதாக்கி ஆர்.பி.ஐ., அறிவிப்பு


ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்ட விதிமுறைகள், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்திருந்தாலும், அது அழுக்கடைந்த நோட்டுகளாக கருதி, வேறு ரூபாய் நோட்டு மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அழுக்கான மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள், ரிசர்வ் வங்கியால் 1975ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட இவ்விதிமுறைகள், பொதுமக்களின் வசதிக்காக தற்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் துறையின் துணைப் பொது மேலாளர் ரங்கநாதன் கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் பகுதியில் கிழிந்திருந்தால், முன்பு அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படும். இவற்றை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப் பட்ட, பண கருவூலங்கள் உள்ள வங்கிகளின் கிளைகளில் மட்டும் தான் மாற்ற முடியும்.தற்போதைய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகளின் எந்த பகுதியிலும் (வரிசை எண் பகுதி உட்பட) இரு துண்டுகளாக கிழிந்திருக்கும் பட்சத்தில், அவை அழுக்கடைந்த நோட்டுகளாகவே கருதப்படும். இவற்றை இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும், அவற்றின் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, புதிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டில், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டு 50 சதவீத பரப்பளவிற்கு மேல் இருந்தால், அதற்கு முழுத்தொகை வழங்கப்படும்.இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு ஒரு ரூபாய்க்கு 31 ச.செமீ, இரண்டு ரூபாய்க்கு 34 ச.செ.மீ., ஐந்து ரூபாய்க்கு 38 ச.செ.மீ., 10 ரூபாய்க்கு 44 ச.செ.மீ., மற்றும் 20 ரூபாய்க்கு 47 ச.செ.மீ., ஆகவும் இருக்க வேண்டும்.கிழிந்த நோட்டின்,கிழியாத மிகப்பெரிய துண்டின் பரப்பளவு 50 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அதன் மதிப்பு முழுவதும் நிராகரிக்கப்படும்.பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின் (50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை), கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 65 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அதற்கு முழுதொகை தரப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 70 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 75 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 80 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 84 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 40 சதவீதத்திற்கு மேலும், 65 சதவீதம் வரையிலும் இருந்தால், அவற்றுக்கு பாதி தொகை வழங்கப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 43 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 46 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 49 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 52 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.கிழியாத மிகப்பெரிய ரூபாய் துண்டின் பரப்பளவு 40 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அவற்றின் மதிப்பு முழுவதுமாக நிராகரிக்கப்படும். இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிலும், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இதர வணிக வங்கிகளின் 303 பண கருவூலங்கள் உள்ள கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.
நன்றி : தினமலர்