நன்றி : தினமலர்
Friday, August 22, 2008
அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோன் விலை மிக அதிகமாக இருப்பது ஏன் ?
கடந்த ஜூன் மாதமே அமெரிக்காவில் வந்து விட்ட ஐபோன், இன்றுதான் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இவ்வளவு காலதாமதமாக இந்தியாவுக்கு வந்திருந்தாலும், அமெரிக்காவில் 199 டாலருக்கு ( சுமார் ரூ.8,300 ) விற்கப்படும் ஐபோன் இந்தியாவில் மட்டும் ஏன் ரூ.31,000 க்கு விற்கப்படுகிறது?. ஏன் இவ்வளவு விலை வித்தியாசம் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கைதான். இதற்கு பதிலளித்த ஏர்டெல் மொபிலிட்டியின் தலைவர் சஞ்சய் கபூர், இது விஷயத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது. அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 3 வருட லாக் இன் பீரியட்டில் வருகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. அமெரிக்காவில் ஒருவர் 199 டாலர் கொடுத்து ஐபோன் ஒன்றை வாங்குகிறார் என்றால் அவர் அதன் ஹார்ட்வேரை ( ஹேண்ட்செட் ) மட்டுமே வாங்கி இருக்கிறார் என்று அர்த்தம். பின்னர் அந்த ஹேண்ட்செட்டை ஆக்டிவேட் செய்ய அவர் 150 டாலர் செலுத்த வேண்டும். அத்துடன் முடிந்து விடாது. பின்னர் அவர் வருடா வருடம் அதன் ஏதாவது ஒரு பிளானை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த கட்டணம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சென்று விடும். ஆனால் இந்தியாவில் ரூ.31,000 க்கு விற்கப்படும் ஐபோனில் எல்லாமே அடங்கி விடுகிறது. இன்னொரு விஷயத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விற்பனை மூலம் ஏர்டெல்லுக்கோ வோடபோனுக்கோ எந்த வித லாபமும் கிடைக்கப்போவது இல்லை என்றார் அவர். இந்தியாவில் ஏர்டெல் மட்டும் வோடபோன் நிறுவனங்கள், 8 ஜிபி ஐபோனை ரூ.31,000 க்கும் 16 ஜிபி ஐபோனை ரூ.36,000 க்கும் விற்பனை செய்கிறது.
பங்கு சந்தையில் முன்னேற்றம் : ஒரு சதவீதம் உயர்ந்தது
மும்பை பங்கு சந்தை இன்று முன்னேறி இருந்தது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சம் உயர்ந்தும் கொஞ்சம் குறைந்தும் தள்ளாடிக் கொண்டு இருந்த பங்கு சந்தை, மதியத்திற்குப்பின் உயர்ந்த நிலையிலேயே இருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 157.76 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) உயர்ந்து 14,401.49 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 43.60 புள்ளிகள் ( 1.02 சதவீதம் ) உயர்ந்து 4,327.45 புள்ளிகளில் முடிந்தது. 4300 புள்ளிகளுக்கும் கீழே போயிருந்த நிப்டி இன்று மீண்டும் 4300க்கு மேல் சென்று விட்டது. பணவீக்கம் 12.44 சதவீதத்தில் இருந்து 12.63 சதவீதமாக உயர்ந்திருந்தது சிறிது பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ஐரோப்பிய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் அது மதியத்திற்கு மேல் இந்திய பங்கு சந்தையிலும் ஏற்ற நிலையை கொண்டு வந்தது.
நன்றி : தினமலர்
இனி தவனை முறையிலும் ஐபோன் வாங்கலாம் : வோடபோன் ஏற்பாடு
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் நிறுவனம், இந்தியாவில் இன்று ஆப்பிள் ஐபோன் விற்பனையை துவங்கி இருக்கிறது. வோடபோன் விற்பனை செய்யும் ஐபோன் ரூ.31,000 மற்றும் ரூ.36,000 விலையில் இருப்பதால், அவ்வளவு தொகை கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கான தவனை முறையில் ஐபோன் வாங்கவும் அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்காக வோடபோன் நிறுவனம், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் பார்க்ளேஸ் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆறு அல்லது 12 மாத தவனையில் ஐபோனை விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது. அதாவது ஐபோனை தவனை முறையில் வாங்க விரும்புபவர்கள் இந்த மூன்று பேங்க்களில் ஏதாவது ஒன்றின் கிரிடிட் கார்டு மூலமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கான தொகையை 6 அல்லது 12 மாத தவனைகளில் ( இ எம் ஐ ) செலுத்த வேண்டும். இதற்கான வட்டி, மற்ற கடனுக்கு விதிக்கப்படும் வட்டியை விட குறைவாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஐ சி ஐ சி ஐ வங்கியுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து நாட்டின் மிகப்பெரிய கிரிடிட் கார்டு நிறுவனமான சிட்டி பேங்க்குடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. வோடபோனை பொருத்தவரை நாட்டின் 50 முக்கிய நகரங்களில் 250 கடைகளில் ஐபோன் விற்கப்படுகிறது. இது தவிர ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் இருக்கும் அதன் ஸ்டோர்களில் ஐபோனை வைத்திருக்கிறது. டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் பெங்களுருவில் இருக்கும் வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வைத்தால் அவர்களுக்கு இன்றிரவு ஐபோன் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இம்மாதிரி இதுவரை 2,000 பேர் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்களாம். ஏர்டெல் நிறுவனமோ இதுவரை 2,00,000 பேரிடமிருந்து ஆர்டர் வாங்கி வைத்திருப்பதாக சொல்கிறது. அவர்கள் நாளைதான் ஐபோனை விற்பனை செய்கிறார்கள். இந்தியாவில் 65 நகரங்களில் ஏர்டெல் ஐபோனை விற்பனை செய்கிறது. இது தவிர ஐபோன் வாங்குபவர்களுக்கு 50 எம்பி வரை இலவசமாக டவுன்லோட் செய்து கொடுக்கிறார்கள்.இது தவிர வேறு சில சலுகைகளையும் அது அதன் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. ஆனால் வோடபோனை போல ஏர்டெல் நிறுவனத்திற்கு இ எம் ஐ மூலம் ஐபோனை விற்பனை செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை மிக அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் 199 டாலருக்கு ( சுமார் ரூ.8,300 ) ஐபோன் கிடைக்கிறது. இது தவிர வருடத்திற்கு 99 டாலரும் ( சுமார் ரூ.4,200 ) சேவை கட்டணம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் விலை குறைவாக இருக்கிறதே என்று அங்கு ஐபோனை வாங்கி அதை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. எனென்றால் அங்கு வாங்கும் ஐபோன்கள் இங்கு வேலை செய்யாது. இங்கு வேலை செய்யாதவாறு அது லாக் செய்யப்பட்டிருக்கும்.
நன்றி : தினமலர்
பணவீக்கம் 12.63 சதவீதமாக உயர்ந்தது
ஆகஸ்ட் 9ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 12.63 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 12.44 சதவீதமாக இருந்தது. பழங்கள், காய்கறிகள், பால், டீ, பருப்பு வகைகள் போன்ற உணவுப்பொருட்கள் மற்றும் காட்டர் யார்ன், சிமென்ட் போன்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பணவீக்கம், கடந்த வாரத்தை விட 0.19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் 4.24 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது. ஆகஸ்ட 9ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் காட்டன் யார்ன் விலை 8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பாலியஸ்டர் விலை 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது.உணவுப்பொருட்கள் விஷயத்தில் டீ விலை 2 சதவீதம், பால் விலை ஒரு சதவீதம்,பருப்பு விலை ஒரு சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே நேரம் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 6 சதவீதம், சூரியகாந்தி எண்ணெய் விலை 2 சதவீதம் குறைந்திருந்தது. இது தவிர முட்டை, கடல் உணவு மற்றும் இறைச்சி விலையும் குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்
புதிதாக மூலதனம் அதிகரித்தால் வரி தொழிலதிபர்கள் பெரும் அதிருப்தி
வருமான வரித்துறையினரின் புதிய கெடுபிடி, கம்பெனிகளை கலக்கம் அடையச் செய்திருக்கிறது. கடந்த நிதியாண்டில், ரூ.50 லட்சத்திற்கு அதிகமாக கம்பெனியின் மூலதன முதலீடு அதிகரித்திருக்கும் பட்சத்தில், அதற்கு வரி உண்டு. மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பு குழுமம் (சி.பி.டி.டி.,) வெளியிட்ட இந்த ஆணை, தகவல் கேட்டுப் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்பது சிறப்பம்சமாகும். இப்புதிய நெருக்கடி கண்டு தொழிலதிபர்கள் அதிர்ந்துள்ளனர்.பொதுவாக, வரிவசூலில் ஆய்வுகளுக் கான நடைமுறைகள் ஆண்டு தோறும் விளக்க அறிக்கையாக வெளிவரும். ஆனால், இந்த ஆண்டு இப்புதிய வரிவிதிப்பு திட்டம் பற்றி வெளியில் தகவல் கசிய முடியாதபடி செய்திருக்கின்றனர். அப்படிப் பார்த்தால், இப்புதிய திட்டத்தில், பொருட்களை சப்ளை செய்தவர்களுக்கு ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக கம்பெனி தர நேரிட்ட போதும் அல்லது விற்றுமுதல் 30 சதவீதம் அதிகரித்தாலோ இந்த கெடுபிடி பாயும். கடந்த நிதியாண்டில் ரூ.50 லட்சத்திற்கு மேல் மூலதனம் அதிகரிக் கும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தாலோ அல்லது 2008-2009ம் ஆண்டில் சம்பந்தப் பட்டிருந்தாலோ, வரித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.அது மட்டுமல்ல, சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக வைத்திருந்தாலும், அசையாச் சொத்து ரூ.30 லட்சம் வரை வாங்கியதாக ஆண்டு தகவல் அறிக்கையில் காட்டும் போதும் வந்துவிடும் ஆபத்து. அதே சமயம் வரி கட்டும் போது, காட்டப்படும் கணக்குகளில் இவை இருந்தால் தப்பிக்கலாம்.எல்லாவற்றையும் விட, வரி செலுத்துவோரின் கணக்குகளை இப்புதிய சட்டப்படி பரிசீலிக்க, வரித்துறை களப்பணி அதிகாரிகளுக்கு அதிகாரம் தந்திருப்பது, அதிகார துஷ்பிரயோகத்திற்கு நிச்சயம் வழிவகுக்கும். மேலும், விவசாயம் மூலம் வருமானம் பெறுபவர் யாரேனும் இருந்தால், அவர்களும் இதில் சிக்குவர். விவசாய வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் வந்தால், இப்புதிய சட்டப்படி ஆய்வு நடக்கும்.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்
Subscribe to:
Posts (Atom)