Friday, August 22, 2008

புதிதாக மூலதனம் அதிகரித்தால் வரி தொழிலதிபர்கள் பெரும் அதிருப்தி

வருமான வரித்துறையினரின் புதிய கெடுபிடி, கம்பெனிகளை கலக்கம் அடையச் செய்திருக்கிறது. கடந்த நிதியாண்டில், ரூ.50 லட்சத்திற்கு அதிகமாக கம்பெனியின் மூலதன முதலீடு அதிகரித்திருக்கும் பட்சத்தில், அதற்கு வரி உண்டு. மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பு குழுமம் (சி.பி.டி.டி.,) வெளியிட்ட இந்த ஆணை, தகவல் கேட்டுப் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்பது சிறப்பம்சமாகும். இப்புதிய நெருக்கடி கண்டு தொழிலதிபர்கள் அதிர்ந்துள்ளனர்.பொதுவாக, வரிவசூலில் ஆய்வுகளுக் கான நடைமுறைகள் ஆண்டு தோறும் விளக்க அறிக்கையாக வெளிவரும். ஆனால், இந்த ஆண்டு இப்புதிய வரிவிதிப்பு திட்டம் பற்றி வெளியில் தகவல் கசிய முடியாதபடி செய்திருக்கின்றனர். அப்படிப் பார்த்தால், இப்புதிய திட்டத்தில், பொருட்களை சப்ளை செய்தவர்களுக்கு ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக கம்பெனி தர நேரிட்ட போதும் அல்லது விற்றுமுதல் 30 சதவீதம் அதிகரித்தாலோ இந்த கெடுபிடி பாயும். கடந்த நிதியாண்டில் ரூ.50 லட்சத்திற்கு மேல் மூலதனம் அதிகரிக் கும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தாலோ அல்லது 2008-2009ம் ஆண்டில் சம்பந்தப் பட்டிருந்தாலோ, வரித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.அது மட்டுமல்ல, சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக வைத்திருந்தாலும், அசையாச் சொத்து ரூ.30 லட்சம் வரை வாங்கியதாக ஆண்டு தகவல் அறிக்கையில் காட்டும் போதும் வந்துவிடும் ஆபத்து. அதே சமயம் வரி கட்டும் போது, காட்டப்படும் கணக்குகளில் இவை இருந்தால் தப்பிக்கலாம்.எல்லாவற்றையும் விட, வரி செலுத்துவோரின் கணக்குகளை இப்புதிய சட்டப்படி பரிசீலிக்க, வரித்துறை களப்பணி அதிகாரிகளுக்கு அதிகாரம் தந்திருப்பது, அதிகார துஷ்பிரயோகத்திற்கு நிச்சயம் வழிவகுக்கும். மேலும், விவசாயம் மூலம் வருமானம் பெறுபவர் யாரேனும் இருந்தால், அவர்களும் இதில் சிக்குவர். விவசாய வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் வந்தால், இப்புதிய சட்டப்படி ஆய்வு நடக்கும்.
நன்றி : தினமலர்


No comments: