நன்றி : தினமலர்
Friday, March 20, 2009
லேசான இறக்கத்துடன் முடிந்தது பங்கு சந்தை
இன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்திருக்கிறது. இன்று பெரும்பாலான நேரங்களில் குறியீட்டு எண்கள் குறைந்தேதான் இருந்தன. இருந்தாலும் நிப்டி 2,800 புள்ளிகளுக்கு மேலேயே இருந்து முடிந்திருக்கிறது. மெட்டல், ஓ என் ஜி சி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.யு.எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், அம்புஜா சிமென்ட்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐடியா செல்லுலார், விப்ரோ, டாடா பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் மதியத்திற்கு மேல் கொஞ்சம் உயர்ந்திருந்ததால் ஆரம்பத்தில் அதிகம் சரிந்திருந்த சந்தை, பின்னர் கொஞ்சம் மேலே வந்தது. இருந்தாலும் கேப்பிடல் குட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ் பி ஐ, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி, டி சி எஸ், டி எல் எஃப், மற்றும் ஐ டி சி பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 35.07 புள்ளிகள் ( 0.39 சதவீதம் ) குறைந்து 8,966.68 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 0.10 புள்ளிகள் மட்டும் குறைந்து 2,807.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
Labels:
பங்கு சந்தை
காரை பறிமுதல் செய்த வங்கி ரூ.35,000 நஷ்டஈடு கொடுக்க வேண்டும்
கார் லோன் வாங்கி, இரண்டு தவணைகள் பணம் கட்ட தவறிய ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து காரை பறிமுதல் செய்த ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.35,000 கொடுக்க வேண்டும் என்று டில்லி கன்சூமர் கமிஷன் தீர்ப்பளித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும், பணம் கட்ட தவறிய வாடிக்கையாள ரிடமிருந்து காரை பறிமுதல் செய்திருந்தால் அது வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய செயலாகத்தான் கருதப்படும் என்றும், அதற்கு வங்கி நஷ்டஈடு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றும் நீதிபதி ஜே.டி.கபூர் தலைமையிலான கன்சூமர் கமிஷன் தெரிவித்திருக்கிறது. கட்டாத தவணைக்கு அபராதம் வேண்டுமானால் வங்கி விதித்துக்கொள்ளலாம் என்றும் அதற்காகவெல்லாம் காரை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் அது தெரிவித்திருக்கிறது. டில்லியில் இருக்கும் ரிலையபிள் எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போஷிசன்ஸ் என்ற நிறுவனம், 2006 ஜனவரி மாதத்தில் மாருதி எஸ்டீம் கார் வாங்குவதற்காக ஹெச்.டி.எஃப்.சி., வங்கியில் ரூ.4.56 லட்சம் கடன் வாங்கியிருந்தது. அதற்கான கடன் தொகையில் இரண்டு தவணைகளை அந்த நிறுவனம் செலுத்தவில்லை. இதனால் 2006 ஜூலை மாதத்தில் அந்த காரை ஹெச்.டி.எஃப்.சி.,வங்கி பறிமுதல் செய்து விட்டது. மேலும் இது குறித்து நடந்து வந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பு சொல்வதற்கு முந்தின நாள் அந்த காரையும் வங்கி வேறு நபருக்கு விற்று விட்டது.
நன்றி : தினமலர்
மேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் : முதலீட்டாளர் வில்பர் ராஸ்
மேலும் 800 அமெரிக்க வங்கிகள் வீழ்ந்து விடும் என்று முதலீட்டாளர் வில்பர் ராஸ் தெரிவித்தார். நியுயார்க்கில் இன்சூரன்ஸ் குறித்து நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட ராஸ் இவ்வாறு தெரிவித்தார். மொத்தம் 1,000 வங்கிகள் வீழும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதில் ஏற்கனவே 200 வங்கிகள் வீழ்ந்து விட்டது என்றும், இன்னும் 800 வங்கிகள் விரைவில் வீழ்ந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். கடும் நிதி சிக்கலில் இருக்கும் 250 வங்கிகள் இப்போது பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷனின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் முடிய உள்ள காலாண்டு நிதி அறிக்கை வெளியானதும் இன்னும் நிறைய வங்கிகள் அதன் கண்காணிப்புக்குள் வந்து விடும் என்றார் அவர். இந்த வருட துவக்கத்தில்தான், புளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபர்ஸ்ட் பேங்க் அண்ட் டிரஸ்ட் கம்பெனி என்ற நலிவடைந்த வங்கியின் 68 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை அவர் வாங்கியிருந்தார். வில்பர் ராஸ் க்கு நியுயார்க்கில், டபிள்யூ எல் ராஸ் அண்ட் கோ என்ற முதலீட்டு நிறுவனம் இருக்கிறது. இதன் மூலம் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.
நன்றி : தினமலர்
Labels:
வங்கி
கச்சா எண்ணெய் விலை குறைந்தது
நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 61 சென்ட் குறைந்திருக்கிறது. தொடர்ந்து சில நாட்களாக அது தொடர்ந்து பேரலுக்கு 51 டாலரை ஒட்டியே இருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி, ஒரு லட்சம் கோடி டாலரை புழக்கத்தில் விட முன்வந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நியுயார்க் சந்தையில் ஏப்ரல் டெலிவரிக்கான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 61 சென்ட் குறைந்து 51 டாலராக இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதில் அதிக பட்சமாக நேற்று அதன் விலை 52.25 டாலராக இருந்தது. இது கடந்த நவம்பர் 28ம் தேதிக்குப்பிறகு இருந்த அதிக பட்ச விலை. மே டெவிவரிக்கான லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 41 சென்ட் குறைந்து 50.26 டாலராக இருக்கிறது. நலிவடைந்து போயிருக்கும் உலகின் மிகப்பெரிய அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க பெடரல் வங்கி, ஒரு லட்சம் கோடி டாலரை புழக்கத்தில் விடுவதாக புதன்கிழமை அன்று அறிவித்தது. இதனையடுத்து பெரும்பாலான கரன்சிக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து போனது. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடப்பதால், அதன் மதிப்பு குறைந்து போனதையடுத்து, மற்ற கரன்சி வைத்திருக்கும் நாடுகளில் கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு கிடைக்கிறது.
நன்றி : தினமலர்
Labels:
கச்சா எண்ணெய் விலை
சத்யம் போர்டு இன்று கூடுகிறது
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நியமித்த போர்டு, இன்று கூடி, சத்யத்தின் 51 சதவீ பங்குகளை கேட்டு வந்த விண்ணப்பங்களை பரீசிலிப்ப்து குறித்து ஒரு திட்டம் வகுக்கும் என்று சொல்லப்படுகிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அதன் 51 சதவீத பங்குகளை விற்க முன்வந்து, ஆர்வம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லியிருந்தது. மார்ச் 9ம் தேதியில் இருந்து மார்ச் 20 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தது. இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. குறைந்த பட்சம் ரூ.1,500 கோடி வைத்திருப்பவர்கள் மட்டும் ( அதற்கான சான்றுதழ்களுடன் ) விண்ணப்பிக்குமாறு கேட்டிருந்தது. தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூஷா நியமிக்கப்பட்டிருப்பதாக மார்ச் 13ம் தேதி சத்யம் போர்டு தெரிவித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகளை வாங்க, இஞ்சினியரிங் நிறுவனமான எல் அண்ட் டி ( ஏற்கனவே இதற்கு சத்யத்தில் 12 சதவீத பங்குகள் இருக்கின்றன ), டெக் மகேந்திரா, பி.கே. மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் குரூப், ஐகேட் கார்பரேஷன், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம். ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
நன்றி : தினமலர்
Labels:
சத்யம்
ராகு கால நேரத்தில் நிறத்தை மாற்றும் வாட்ச்கள் பெங்களுருவில் அறிமுகம்
இனி ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ராகு காலம் வருகிறது என்பதை உங்களின் வாட்சை (கைக்கடிகாரத்தை) பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இப்படிப் பட்ட சிறப்பு அம்சம் கொண்ட வாட்சை சுவிட்சர்லாந்தை சேர்ந்த, 'போர்கியால்' நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த வகை வாட்சுகள் 150 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. வரவேற்பை பொறுத்து, அதிக அளவில் தயாரிக்கப்படும். இந்த புதிய ரக வாட்ச்சின் அறிமுக விழாவில் பேசிய, 'போர்கியால்' நிறுவனர் சித்ரா சுப்பிரமணியம் கூறுகையில், ''ஒவ்வொரு நாளும் 90 நிமிடங்கள் அளவுக்கு ராகு காலம் உள்ளது. கெட்ட நேரமாக கருதப்படும் அந்தக் கால கட்டத்தில் நல்ல காரியங்களைச் செய்வதில்லை. அதனால், அந்த நேரத்தை தெரிந்து கொள்ளும் வகையில், அவற்றை தெரிவிக்கும் வகையிலான சிறப்பு அம்சம் கொண்ட, வாட்ச் தயாரிக்கப் பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என, தனித்தனி மாடல்களில் இந்த வாட்ச்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற வாட்ச்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை,'' என்றார். ஒவ்வொரு நாளும் ராகு காலம் துவங்கும் போது, வாட்ச்சின் டயல் பகுதியில், புதுவிதமான கலர் தோன்றும். அந்த 90 நிமிடங்கள் முடிந்தவுடன் மீண்டும் பழைய நிறத்திற்கே டயல் வந்து விடும். கலர் தோன்றும் போது, ராகு காலம் நடப்பில் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்
பொருளாதார பாதிப்பு தொடர்கிறது: பணவீக்கம் இப்போது பெரிய செய்தி
வரலாறு காணாத வகையில் பணவீக்கம் 0.44 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கம் குறைந்திருப்பதால், இனி அடுத்த கட்டமாக 'பணச்சுருக்கம்' வந்து விடுமோ என்ற கருத்து எழுந்திருக்கிறது. உணவுப்பொருட்களில், தேயிலை, காய்கறி விலை குறைந்திருக்கிறது. ஆனால், வாங்கும் சக்தி மக்களிடம் குறைந்திருக்கிறது என்பதே அதிர்ச்சித் தகவலாகும். பணவீக்கம் என்ற தகவல் வழக்கமாக வரும் தகவல் என்பதை விட அடுத்ததாக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை பேச வைக்கும் அளவுக்கு முக்கியத் தகவலாக மாறியிருக்கிறது. கடந்த வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் கடந்த 7 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.44 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது வரலாற்றுப்புதுமையாகும். ஏனெனில் கடந்த ஆண்டில், இதே காலத்தில் இருந்த பணவீக்க அளவு 7.78 சதவீதமாகும். இந்த அளவு பணவீக்கம் குறைந்ததால், இனி குறைந்தது மூன்று மாதங்களுக்கு பணவீக்க அளவு கண்டு நிதியமைச்சகமோ மத்திய அரசோ கவலைப்பட வேண்டாம். இந்த அளவு பணவீக்கம் குறைந்தது குறித்து வர்த்தக செயலர் ஜி.கே.பிள்ளை கூறும் போது, 1 சதவீதத்திற்கும் குறைவாக வந்தால், அது தேவையை பலவீனப்படுத்தும் என்று அச்சப்பட வேண்டாம், 'பணச்சுருக்கம்' வரும் போது அது பாதிப்பைத் தராது' என்றிருக்கிறார். பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுரேஷ் டெண்டுல்கர் கூறுகையில், 'வரும் வாரத்தில் மைனஸ் பாயிண்டில் பணவீக்கம் செல்லும், அதில் ஒன்றும் பாதிப்பு ஏற்படாது' என்றிருக்கிறார். அடிப்படை விலைவாசிப் புள்ளி விவரத்தில் சேகரிக்கப்படும் தகவலில் கணக்கிடப்படுவதே பணவீக்கம் என்பதால் பாதிப்பு வராது என்பது அரசின் கருத்தாகும். தேர்தல் சமயத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு, பணவீக்கம் வரலாறு காணாத சரிவு கைகொடுக்கும். ஆனால், தொழில் வர்த்தக அமைப்பின் டைரக்டர் ஜெனரல் சந்திரஜீத் பானர்ஜி கூறுகையில், ' பெரிய அளவில் தேவை சுருங்கியதால் ஏற்படும் பாதிப்பில் ஏற்பட்டதே இச்சரிவு, பொருளாதார மந்த நிலையை அகற்ற இன்னமும் ஊக்குவிப்பு நிதிவசதியை அரசு ஏற்படுத்த வேண்டும்' என்றிருக்கிறார். வட்டிவிகிதம் குறையும்: அப்படி என்றால், இன்னமும் வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டும். அதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆமதாபாத்தில் இந்தியப் பொருளாதார நிலைமை பற்றி பேசுகையில், 'பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருப்பதால், வாக்குறுதி அளித்தபடி அரசு செலவினம் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் அதிகரிக்க வேண்டும்' என்றிருக்கிறார். அதே போல, வங்கிவட்டி விகிதங்களும் மேலும் குறையும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆறுமாதங்களில் பொருளாதார நிலை ஓரளவு சீராகும் என்றும், வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின் ஏற்றுமதி சற்று அதிகரிக்கும் என்றும் பொருளாதார வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்
Labels:
பணவீக்கம்
வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவாக பணவீக்கம் குறைந்தது
வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவாறு இந்தியாவின் பணவீக்கம் 0.44 சதவீதமாக குறைந்து விட்டது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம் மார்ச் 7ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 0.44 சதவீதமாக இருக்கிறது. பெரும்பாலான உணவுப்பொருட்கள், எரிபொருள் மற்றும் சில உற்பத்தி பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒரே வாரத்தில் 1.99 சதவீதம் குறைந்திருக்கிறது. பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதை அடுத்து ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவித்தபோது, இனிவரும் வாரங்களில் பணவீக்கம் 0 சதவீதத்திற்கும் கீழே சென்று விடும் என்பதைத்தான் இது காட்டுகிறது என்றனர். கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 7.78 சதவீதமாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்
Labels:
பணவீக்கம்
Subscribe to:
Posts (Atom)