நன்றி : தினமலர்
Friday, March 20, 2009
பொருளாதார பாதிப்பு தொடர்கிறது: பணவீக்கம் இப்போது பெரிய செய்தி
வரலாறு காணாத வகையில் பணவீக்கம் 0.44 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கம் குறைந்திருப்பதால், இனி அடுத்த கட்டமாக 'பணச்சுருக்கம்' வந்து விடுமோ என்ற கருத்து எழுந்திருக்கிறது. உணவுப்பொருட்களில், தேயிலை, காய்கறி விலை குறைந்திருக்கிறது. ஆனால், வாங்கும் சக்தி மக்களிடம் குறைந்திருக்கிறது என்பதே அதிர்ச்சித் தகவலாகும். பணவீக்கம் என்ற தகவல் வழக்கமாக வரும் தகவல் என்பதை விட அடுத்ததாக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை பேச வைக்கும் அளவுக்கு முக்கியத் தகவலாக மாறியிருக்கிறது. கடந்த வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் கடந்த 7 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.44 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது வரலாற்றுப்புதுமையாகும். ஏனெனில் கடந்த ஆண்டில், இதே காலத்தில் இருந்த பணவீக்க அளவு 7.78 சதவீதமாகும். இந்த அளவு பணவீக்கம் குறைந்ததால், இனி குறைந்தது மூன்று மாதங்களுக்கு பணவீக்க அளவு கண்டு நிதியமைச்சகமோ மத்திய அரசோ கவலைப்பட வேண்டாம். இந்த அளவு பணவீக்கம் குறைந்தது குறித்து வர்த்தக செயலர் ஜி.கே.பிள்ளை கூறும் போது, 1 சதவீதத்திற்கும் குறைவாக வந்தால், அது தேவையை பலவீனப்படுத்தும் என்று அச்சப்பட வேண்டாம், 'பணச்சுருக்கம்' வரும் போது அது பாதிப்பைத் தராது' என்றிருக்கிறார். பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுரேஷ் டெண்டுல்கர் கூறுகையில், 'வரும் வாரத்தில் மைனஸ் பாயிண்டில் பணவீக்கம் செல்லும், அதில் ஒன்றும் பாதிப்பு ஏற்படாது' என்றிருக்கிறார். அடிப்படை விலைவாசிப் புள்ளி விவரத்தில் சேகரிக்கப்படும் தகவலில் கணக்கிடப்படுவதே பணவீக்கம் என்பதால் பாதிப்பு வராது என்பது அரசின் கருத்தாகும். தேர்தல் சமயத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு, பணவீக்கம் வரலாறு காணாத சரிவு கைகொடுக்கும். ஆனால், தொழில் வர்த்தக அமைப்பின் டைரக்டர் ஜெனரல் சந்திரஜீத் பானர்ஜி கூறுகையில், ' பெரிய அளவில் தேவை சுருங்கியதால் ஏற்படும் பாதிப்பில் ஏற்பட்டதே இச்சரிவு, பொருளாதார மந்த நிலையை அகற்ற இன்னமும் ஊக்குவிப்பு நிதிவசதியை அரசு ஏற்படுத்த வேண்டும்' என்றிருக்கிறார். வட்டிவிகிதம் குறையும்: அப்படி என்றால், இன்னமும் வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டும். அதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆமதாபாத்தில் இந்தியப் பொருளாதார நிலைமை பற்றி பேசுகையில், 'பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருப்பதால், வாக்குறுதி அளித்தபடி அரசு செலவினம் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் அதிகரிக்க வேண்டும்' என்றிருக்கிறார். அதே போல, வங்கிவட்டி விகிதங்களும் மேலும் குறையும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆறுமாதங்களில் பொருளாதார நிலை ஓரளவு சீராகும் என்றும், வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின் ஏற்றுமதி சற்று அதிகரிக்கும் என்றும் பொருளாதார வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment