Friday, March 20, 2009

ராகு கால நேரத்தில் நிறத்தை மாற்றும் வாட்ச்கள் பெங்களுருவில் அறிமுகம்

இனி ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ராகு காலம் வருகிறது என்பதை உங்களின் வாட்சை (கைக்கடிகாரத்தை) பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இப்படிப் பட்ட சிறப்பு அம்சம் கொண்ட வாட்சை சுவிட்சர்லாந்தை சேர்ந்த, 'போர்கியால்' நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த வகை வாட்சுகள் 150 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. வரவேற்பை பொறுத்து, அதிக அளவில் தயாரிக்கப்படும். இந்த புதிய ரக வாட்ச்சின் அறிமுக விழாவில் பேசிய, 'போர்கியால்' நிறுவனர் சித்ரா சுப்பிரமணியம் கூறுகையில், ''ஒவ்வொரு நாளும் 90 நிமிடங்கள் அளவுக்கு ராகு காலம் உள்ளது. கெட்ட நேரமாக கருதப்படும் அந்தக் கால கட்டத்தில் நல்ல காரியங்களைச் செய்வதில்லை. அதனால், அந்த நேரத்தை தெரிந்து கொள்ளும் வகையில், அவற்றை தெரிவிக்கும் வகையிலான சிறப்பு அம்சம் கொண்ட, வாட்ச் தயாரிக்கப் பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என, தனித்தனி மாடல்களில் இந்த வாட்ச்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற வாட்ச்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை,'' என்றார். ஒவ்வொரு நாளும் ராகு காலம் துவங்கும் போது, வாட்ச்சின் டயல் பகுதியில், புதுவிதமான கலர் தோன்றும். அந்த 90 நிமிடங்கள் முடிந்தவுடன் மீண்டும் பழைய நிறத்திற்கே டயல் வந்து விடும். கலர் தோன்றும் போது, ராகு காலம் நடப்பில் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமலர்


No comments: