பொருளாதார மந்த நிலை காரணமாகவும், கடுமையான விலை ஏற்றத்தாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருந்ததாலும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் 83 சதவீதம் குறைந்திருக்கிறது. வேர்ல்டு கோல்ட் கவுன்சில் ( டபிள்யூ.சி.சி.,) இந்த தகவலை தெரிவித்திருக்கிறது. உலகில் அதிகம் தங்கத்தை பயன்படுத்தும் நாடான இந்தியாவில், 2009 ஜனவரி - மார்ச் காலத்தில், தங்கத்தின் விலை 11 சதவீதம் உயர்ந்திருக் கிறது. அதிகபட்சமாக பிப்ரவரி 20 ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.16,040 ஆக இருந்தது. இதன் காரணமாக அந்த மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 83 சதவீதம் குறைந்து 17.7 டன்னாகி விட்டது. இதனால் அந்த மூன்று மாத காலத்தில் 1.7 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக் கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 62 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இப்போதுள்ள நிலையில் தங்கத்திற்கான டிமாண்ட் இன்னும் சாதகமான நிலைக்கு வரவில்லை என்றாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஆசை போகவில்லை என்று சொன்ன வேர்ல்டு கோல்ட் கவுன்சிலின் சி.இ.ஓ.,அரம் சிஸ்மணியன், மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிக்க அதிகரிக்க மீண்டும் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் தங்கத்தின் தேவை 83 சதவீதம் குறைந்திருந்த அதே மூன்று மாத காலத்தில், உலக அளவில் தங்கத்திற்கான தேவை 38 சதவீதம் அதிகரித்து 1,016 டன் ஆகி இருக்கிறது. எளிதில் மாற்றத்தக்க முதலீடு என்பதால் தங்கத்தின் மீது அவர்களது முதலீடு அதிகரித்ததே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்