Friday, September 4, 2009

காக்க.. காக்க..

அமெரிக்க நாட்டின் பல்வேறு கலைக்கூடங்களில் உள்ள இந்திய பஞ்சலோகச் சிலைகளை மீட்பதற்கு மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடியுள்ளதாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து திருடப்பட்டு தற்போது நியூயார்க் நகரின் கலைக்கூடத்தில் இருக்கும் 12 நடராஜர் சிலைகளை இன்டர்போல் அமைப்பின் மூலமாக மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய புலனாய்வுத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் காவல்துறைத் தலைவர் (பொருளாதார குற்றப் பிரிவு) எஸ். ராஜேந்திரன் அண்மையில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் அரசு மட்டுமே கலைக்கூடங்கள் வைத்திருப்பதில்லை. தனியார் அமைப்புகளும் கலைக்கூடங்களை நிர்வகிக்கின்றன. பெரும்பாலும் இக் கலைக்கூடங்களில்தான் இந்தியாவிலிருந்து கடத்தப்படும் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய மண்ணை விட்டு வெளியேறிய கலைச் செல்வங்களை மீட்டுவருவது அத்தனை எளிதாக இருக்கவில்லை என்பதைத்தான் கடந்தகால அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மாபெரும் போராட்டத்துக்குப் பின்னர்தான் பத்தூர் நடராஜர் சிலையை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவர முடிந்தது. தமிழகத் தொல்லியல் துறையின் அன்றைய இயக்குநர் நாகசாமி மற்றும் அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் இருவரும் காட்டிய ஆர்வம்தான் காரணம் என்று கலைப்பொருள் ஆர்வலர்கள் இன்றும் மெச்சுகிறார்கள்.

ஆனால், அந்த ஒரு சிலையைத் தவிர குறிப்பிடும்படியாக இந்தியக் கலைப்பொருள் எதையும் நாம் மீட்டுக் கொண்டு வரவில்லை. இந்தியக் கலைச்செல்வம் என்று அனைவருக்கும் தெரிந்த கோகினூர் வைரத்தைக்கூட நம்மால் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

இதற்குக் காரணம், இந்திய தெய்வச் சிலைகள் மற்றும் கலைப் பொருள்கள் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டவை என்று தெரிந்திருந்தாலும்கூட சர்வதேச நீதிமன்றங்களில் வழக்காடும்போது அவர்கள் கேட்கும் அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் காட்ட முடிவதில்லை என்பதுதான். வெளிநாட்டுக் கலைக்கூடங்களில் இருக்கும் இந்தியச் சிலைகள் நம் நாட்டுத் தொல்லியல் துறையின் பதிவு பெற்ற சிலையாக இருந்தால் மட்டுமே நம்மால் வழக்காடவும் ஆதாரத்தைக் காட்டவும் இயலும்.

தற்போது நம்மிடம் உள்ள பஞ்சலோகச் சிலைகள் மற்றும் தெய்வச் சிலைகளை "காமா ரேய்ஸ் ஃபிங்கர் பிரிண்ட்' போன்ற நவீன தொழில்நுட்ப உதவியுடன் பதிவு செய்கிறார்கள். அனைத்துக் கோணங்களிலும் சிலையைப் படம் எடுத்து, சிலையின் எடையை மிகத் துல்லியமாகக் கணிக்கிறார்கள்.

ஆனால், அரசு கலைக்கூடங்களில் உள்ள சிலைகள் நீங்கலாக, தற்போது கோயில்களில் உற்சவமூர்த்திகளாக இருக்கும் அனைத்துப் பஞ்சலோகச் சிலைகளும் தொல்லியல் துறையிடம் பதிவு பெற்றவையாக இருப்பதில்லை. ஏற்கெனவே பதிவுபெற்ற சிலைகளாக இருந்தாலும்கூட, தற்போதைய நவீன தொழில்நுட்ப முறைகளில் அவற்றை மறுபதிவு செய்து சான்றுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.

இத்தகைய பதிவுகளை முறையாகவும் முழுமையாகவும் செய்தால் மட்டுமே நம்மால் இன்றைய நவீன உலகில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மீட்க முடியும். இதில் அரசு மற்றும் கோயில்களின் பஞ்சலோகச் சிலைகள் மட்டுமல்ல, தனியார் தங்கள் வீடுகளில், மடங்களில் வைத்து பல தலைமுறையாக வழிபடும் பஞ்சலோகச் சிலைகளையும்கூட பதிவு செய்துகொள்ள முடியும்.

பழைய நடைமுறைப்படி, பஞ்சலோகச் சிலைகளின் உள்ளீடற்ற பகுதியில் இருக்கும் வார்ப்பட மண் மட்டுமே "தெய்வசாட்சியாக' நீதிமன்றத்தில் நிற்க முடிந்தது. பத்தூர் நடராஜரை இந்திய மண்ணுக்கு மீட்டுவர உதவியது இந்த மண்தான். ஆனால் இப்போது அறிவியல் முறைப்படி மேலும் பல சான்றுகள் தேவைப்படுகின்றன.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் அனைத்திலும் உள்ள பஞ்சலோகச் சிலைகளை, சர்வதேச நீதிமன்றத்தின் தேவைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப முறையில் பதிவு செய்து வைக்க முன்வர வேண்டும். தனது கட்டுப்பாட்டில் இல்லாத சிறிய கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளையும் நவீன முறைப்படி பதிவு செய்ய நிதியுதவி அளிப்பதும் அறநிலையத் துறையின் கடமையாகும்.

ஒவ்வொரு சிலையும் வெளிநாடுகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலைபோகிறது என்பதால்தான் இந்தியச் சிலைகள், குறிப்பாக தமிழகக் கோயில்களில் உள்ள சிலைகள் திருடு போகின்றன. அனைத்துக் கோயில்களிலும் சிலைகளை வைக்கும் பாதுகாப்பு அறைகளை "கைரேகைத் திறவுகோல்' போன்ற நவீன முறைகளால் பலப்படுத்த வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி, சிலைகளை மீட்பதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் சிலைகளை இந்திய மண்ணில் பாதுகாக்கும் செலவு மிகக் குறைவாகவே இருக்கும்.

நன்றி : தினமணி

சர்க்கரை விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

சர்க்கரை விலை உயர்வை தடுக்கும் விதமாக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 20.45 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கி வைக்க மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் மாதங்கள் அதிகம் பண்டிகைகள் நிறைந்த மாதங்கள் என்பதால், சர்க்கரையின் தேவை அதிகம் ஏற்படும். கரும்பை விட கோதுமை உள்ளிட்டவைகளுக்கு அதிக கொள்முதல் விலை கொடுக்கப் படுவதால், விவசாயிகள் அதிகமாக கரும்பு பயிரிடுவதை நிறுத்தி உள்ளனர். இதனால் இந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கியூபா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் இருந்து ‌சர்க்கரை இறக்குமதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், சர்க்கரை விலை அதிகளவு உயர வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு விற்பனைக்காக செப்டம்பர் மாதத்திற்கு 20.45 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 18.34 லட்சம் டன் வெளி சந்தையிலும், 2.11 லட்சம் டன் ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யப் படும்.
நன்றி : தினமலர்


6 வாரங்களுக்குள் 2.5 பில்லியன் டாலர் ஆடர் பெறுவோம்: பெல் நிறுவனம்

இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடேட்(பெல்) வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 4 முதல் 6 வாரங்களுக்குள் 2.5 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆடர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன சேர்மன் தெரிவிக்கும் போது, அதிக ஆடர்களை பெற பெல் நிறுவனம் போதுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே பல்வேறு திட்டங்களை வகுத்து விட்டோம். தற்போது முதல் காலாண்டு நிதியறிக்கை முடிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் 150 பில்லியன் ரூபாய் உட்பட 1.3 டிரிலியன் ரூபாய் அளவிற்கான ஆடர்களில் கையெழுத்திடப் பட்டுள்ளது. இன்னும் 4 முதல் 6 வாரங்களில் 2.5 பில்லியன் டாலர் வரையிலான ஆடர்களை பெறுவோம் என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


விபத்தில்லா தமிழகம் எப்போது?

உலக அளவில் சாலை விபத்துகளில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ள நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 2007-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 94,985 பேர் இறந்துள்ளதாக டபுள்யு.ஆர்.எஸ். தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை இரண்டாவதாகும்.

இது இவ்வாறு இருக்க தமிழகத்திலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

2006-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற சாலை விபத்துகளின் எண்ணிக்கை 3,94,432. இதில் தமிழகத்தில் மட்டும் 55,145 விபத்துகள் நடந்துள்ளன. இந்தியாவின் மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இது 14 சதவீதமாகும் என என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.

2007-ல் தமிழகத்தில் 59,140 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 12,036 பேர் இறந்துள்ளனர். 2006-ல் நடந்த 55,145 சாலை விபத்துகளில் 11,009 பேர் மரணமடைந்துள்ளனர். 2005-ல் நடைபெற்ற 51,152 சாலை விபத்துகளில் 9,216 பேர் இறந்துள்ளனர்.

2007-ம் ஆண்டில் நடைபெற்ற 59,140 விபத்துகளில் 5,557 விபத்துகள் அரசு பஸ்கள் மூலம் நிகழ்ந்துள்ளன. இதில் 1,543 பேர் இறந்துள்ளனர். தனியார் பஸ்கள் மூலம் நடந்த 4,029 விபத்துகளில் 832 பேர் இறந்துள்ளனர்.

லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் ஏற்பட்ட 10,355 விபத்துகளில் 2,851 பேர் இறந்துள்ளனர். கார், டாக்சி உள்ளிட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து 14,908. இதில் 2,574 பேர் பலியாகியுள்ளனர்.

அதுபோல் இரு சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 16,070 விபத்துகளில் 2,451 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 4,857 விபத்துகளில் 1,187 பேரும் மரணமடைந்துள்ளனர்.

இவ்வளவு விபத்துகளும் சாலைப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் இன்றைய வேளையிலும் தொடர்வதுதான் வேதனை.

விபத்தைக் குறைக்கும் நோக்கோடு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் செயல்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

இதற்காக கடந்த 2000-01-ம் ஆண்டில் ரூ. 2 கோடியும், 2001-02-ல் ரூ. 3.75 கோடியும், 2002-03-ல் ரூ. 5 கோடியும், 2003-04-ல் ரூ. 5 கோடியும், 2004-05-ல் ரூ. 5 கோடியும், 2005-06-ல் ரூ. 6 கோடியும், 2006-07-ம் ஆண்டு ரூ. 6 கோடியும், 2007-08-ல் ரூ. 6 கோடியும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மேலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்காக தமிழக அரசு ரூ. 65 லட்சம் வழங்கியுள்ளது.

இப்படி நிதி ஒதுக்கப்பட்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சாலை விதிகளை நாம் மதிக்காததையே காட்டுகிறது. விபத்து ஏற்படாமல் தவிர்க்க ஒவ்வொரு தனிமனிதனும் சபதம் எடுத்தால்தான் முடியும் என்றபோதிலும், இவ்வளவு நிதி ஒதுக்கும் அரசு சாலைப் பாதுகாப்புக் குறித்து இன்னும் முனைப்புக் காட்ட வேண்டும் என்கின்றனர் மக்கள்.

தற்போது விபத்தை ஏற்படுத்தும் நபருக்கு அதிக அளவு தண்டனை தருவது குறித்து அரசு பரிசீலித்து வரும் நிலையில் முதற்கட்டமாக பாமரன் முதல் படித்தவர்வரை அனைவருக்கும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

இதைக் கடமையாக மட்டும் செய்ய நினைக்காமல், உயிர் காக்கும் சமூகசேவைபோல செய்ய அரசு முனைப்புக் காட்ட வேண்டும். இதற்காக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து பயிற்சி அளித்து, பின்னர் அவர்கள் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தினால் சாலை விதிகளை மக்கள் அறிந்து செயல்பட முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் என்சிசி, என்எஸ்எஸ், பசுமைப்படை, இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள், சாரண மாணவர்கள், போலீஸ் நண்பர்கள் குழுவினர் உள்ளிட்டோருக்கு சாலைப் பாதுகாப்புக் குறித்த பயிற்சியை அளித்து அவர்களைக் கொண்டு ""சாலைப் பாதுகாப்புப் படை'' என பள்ளிகளில் புதிய அமைப்பை ஏற்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்கின்றனர் போக்குவரத்து காவல்துறையினர்.

அதுபோல், விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு உணர்ந்தவர்கள் பெண்கள் என்கிற நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கும் இத்தகைய பயிற்சிகளை வழங்கிப் பிரசாரம் செய்தால் விபத்துகள் இல்லா தமிழகம் உருவாவது நிச்சயம் சாத்தியமாகும்.

கட்டுரையாளர் : வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி

முடிவு முதல்வரிடம்!

விவசாயம் செய்பவர்கள் பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளிடம் மட்டுமே தங்களுக்கு வேண்டிய அறிவை இனிமேல் பெற வேண்டும். தந்தையின் அனுபவ அறிவைப் பெறுவதுகூட சட்டவிரோதம். அதற்கு அத் தந்தை இனி தண்டிக்கப்படுவார்.

""இனி இவர்கள் சொல்வதை மட்டுமே தமிழக விவசாயிகள் கேட்க வேண்டும்...'' என்ற சட்ட மசோதாவை முதலமைச்சர் எப்படி அனுமதித்தார் என்பது இன்னமும் வியப்பாகவே உள்ளது.

தாத்தாவின் விரல் பிடித்து, தந்தையுடன் வயலில் நடந்து சென்று, விவசாய அறிவை சிறுவயது முதல் சுவீகரித்து வளர்ந்தது தான் விவசாய சமூகம். முன்னோர்களிடமிருந்து, பெற்ற அறிவை தலைமுறைக்குத் தலைமுறை மேம்படுத்தி வந்ததன் விளைவே நிலவள மேம்பாடு, கால்நடைகள் மேம்பாடு, விதை உற்பத்தி, புதிய ரகங்களை உருவாக்குதல், பூச்சிக் கட்டுப்பாடு, பருவத்திற்கேற்ற, மண்ணின் தன்மைக்கேற்ற ரகங்கள் உருவாக்கம் எனப் பலதும் நடந்தது. பச்சைப் புரட்(டு)சிக்கு முன் இந்தியாவில் இருந்த 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் ரகங்கள் எல்லாம் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பயிலாத "பாமர' விவசாயிகள் இப்படி மேம்படுத்திய அறிவின் விளைவால் உருவானதே.

பல்கலைக்கழகங்கள், பச்சைப்புரட்சி என்றுகூறி இந்த விதைவளத்தையும், விவசாயியின் அறிவையும் சிதைத்து, பண்ணையில் பயிரிடப்பட்ட பயிர்களின் வகைகளைக் குறைத்தது. ஒவ்வொரு பயிரிலும் இருந்த ரகங்களின் எண்ணிக்கையையும் அழித்தது. 10,000 ஆண்டுகள் சிதையாதிருந்த இந்திய வேளாண்மையை தனது உலக வணிக மேலாதிக்கத்துக்காக ஆங்கில அரசு சிதைத்திருந்தது. அமெரிக்காவின் ரசாயன விவசாய மாதிரியை விவசாயக் கல்வியாக்கிக் கொண்ட விவசாயப் பல்கலைக்கழகங்கள் மூலம் ஏற்கெனவே சிதைவுற்றிருந்தது, மேலும் சிதிலம் அடைந்தது. கடன் வாங்குவதே கேவலம் என்றிருந்த சமூகத்தை ""கடன் தள்ளுபடி செய், இல்லாவிடில் வாழ முடியாது'' என்ற நிலைக்குத் தள்ளி மானமிழக்கச் செய்தது இந்த விவசாயமுறை.

அறுபதுகளின் கடைசிவரையில், ஆங்கிலேயரின் கொள்கைகளால் சிதைவுற்றிருந்த பின்னரும், ஒரு விவசாயி தன் மகனுக்குப் படிப்பு ஏறாவிட்டாலும் "மாடும் காடும் உள்ளது, பிழைத்துக் கொள்வான்' என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், இன்றோ எல்லா தந்தையருமே விவசாயத்தை விட்டு ஓடிவிட முயல்கின்றனர். ""எங்கள் கிராமம் விற்பனைக்கு'' என்று வார்தா அருகே டோர்லி கிராமம் தன்னையே விற்க விளம்பரம் செய்த அவலம், திணிக்கப்பட்ட விவசாய முறையின் விளைவு. அரசின் கொள்கைகள் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் விதமாகவே உள்ளது. கம்பெனிகள் ஆயிரமாயிரம் ஏக்கர்களில் நிலம் வாங்குகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியக் கம்பெனிகள் விவசாயக் கம்பெனிகள் தொடங்கி பல்லாயிரம் ஏக்கர்களை வளைத்துப் புதிய காலனி ஆதிக்கத்துக்கு இந்திய அரசின் உதவியோடு அச்சாரம் போடுகின்றன.

நிறைய விளைந்து தள்ளிய விவசாயம் இங்கிருந்தது என்பதற்கும், ஆங்கிலேய அரசால் அது சிதைக்கப்பட்டது என்பதற்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவுகள் பல இன்னமும் அழியாமல் உள்ளன.

பச்சைப் புரட்சியையும் அமெரிக்க மாதிரி விவசாய முறையையும் ஆதரிப்பவர்கள் 1940-களில் நிகழ்ந்த வங்க பஞ்சத்தையே காரணம் காட்டுகின்றனர், ஓர் உண்மையை மறைத்து. 30 லட்சம் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த அதே காலத்தில் கோல்கத்தா துறைமுகத்திலிருந்து உலக வர்க்கத்துக்காக கப்பல் கப்பலாக அரிசியையும், சர்க்கரையையும் ஏற்றுமதி செய்தது ஆங்கில அரசு. பஞ்சத்துக்கான உண்மையான காரணம் விளையாததல்ல, விளைந்ததைப் பிடுங்கியதும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததுமே.

விவசாயம் என்பது வெறும் பயிர் வளர்ப்பதல்ல. அற்புதமான வாழ்வு முறை. எந்தவொரு அரசனின், அரசின் கையையும் எதிர்பார்க்காது வாழ்ந்த உன்னத வாழ்வு முறை. அதை கம்பெனிகள் நலனுக்காக வளர்த்தெடுக்கப்பட்டு இந்திய விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட இரவல் அறிவு வெறும் வணிகத்திற்கு சுருக்கியது.

இதனுடைய விளைவு 10,000 ஆண்டுகால நம்பிக்கை சிதைந்தது மட்டுமன்றி நீர் கெட்டது, கிணறுகள் வறண்டன, நிலம் மலடானது.

இந்தச் சிதைவையும் இதற்கான காரணத்தையும் அறிந்த சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகிழ்த்தனர். கிராமத்து மக்களின் கதைகளிலும், பழமொழிகளிலும் விடுகதைகளிலும், நாட்டுப்புற இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் விவசாய அறிவை மீட்டெடுத்து அதை அறிவியல் விளக்கங்களுக்கு உட்படுத்தி விவசாயிகளிடமே திரும்பத் தந்தனர். இது அவர்களுக்கு புதிய அறிவைக் கொடுப்பதாக அல்லாமல் அவர்தம் அறிவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் "விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக' இயக்கமாகத் தொடங்கியது இன்று தமிழகத்தின் எல்லா வட்டங்களுக்குமாகப் பரவியுள்ளது. இவர்கள் இத்துடன் நிற்கவில்லை. உலகில் உள்ள பலவகையான இயற்கை விவசாய முறைகளையும் அறிந்து தத்தமது பண்ணைச் சூழலுக்கும், கிராமச் சூழலுக்கும் ஏற்ப தன்மயப்படுத்தி பரப்பினர். வேளாண் பல்கலைக்கழகம் அறிவதற்கு முன்பே முதலமைச்சர் கருணாநிதி செம்மை நெல் சாகுபடி என்று பெயரிடப்பட்ட சாகுபடி முறையை 1999-லேயே தமிழக விவசாயிகள் கடைப்பிடித்து ஒற்றை நாற்று நடவு என்று பெயரிட்டுப் பரப்பினர். இவையனைத்தும் அரசின் உதவியோ, வேறு வெளி உதவிகளோ இன்றி நடந்தேறியது.

இயற்கை வழியில் விவசாயிகள் பெற்ற தன்னம்பிக்கையும், சுயசார்பையும் கண்ணுற்ற பிற விவசாயிகளும் பல்கலை அறிவியல் மீது நம்பிக்கையற்றுப் போயினர். இவ்விரு பிரிவினரும் பல்கலைக்கழகத்தின் அறிவைக் கேள்விக்குறியாக்குகின்றனர். பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைக்கின்றனர். கம்பெனிகளுக்குத் தன்னை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மரபணு மாற்றுப் பருத்தியை ஆதரிக்கத் தொடங்கிய பின் வேளாண்மைப் பல்கலை எத்தனை பருத்தி ரகங்களை வெளியிட்டுள்ளது என்று வினா தொடுக்கின்றனர். செலவுமிக்க பி.டி. பருத்தி மூலம் அதிகம் விளைகிறதா, புழு கட்டுப்படுகிறதா அல்லது பல்கலைக்கழகமே பாராட்டிப் பரப்பிய எளிய ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் அதிகம் விளைகிறதா, புழுக்கள் கட்டுப்படுகிறதா என்று ஒப்பீட்டாய்வை ஏன் செய்யவில்லை என்கின்றனர். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் எல்லா வணிகப் பயிர்களிலும் 30 - 50 சதவீதம்வரை விளைச்சலை அதிகப்படுத்த முடியும் என்று சொன்ன பல்கலைக்கழகம் இப்போது ஏன் அம்முறைகளைப் பற்றிப் பேசுவதில்லை, அதை ஏன் அமுக்கிவிட்டது என்று கேட்கின்றனர்.

இப்படி விவசாயிகளும், விவசாய சங்கத் தலைவர்களும் கேள்விகள் கேட்பது பல்கலைக்கழகத்திற்கு மட்டும் நெருடலாக இருக்கவில்லை. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையை 70 சதத்திலிருந்து 20 - 25 சதமாகக் குறைக்க வேண்டும், கம்பெனிகள் விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற உலகமய, உலக வங்கிப் போக்குகளுக்கு எதிராக இருக்கிறது.

ஒவ்வொரு விவசாயியும் நடமாடும் விவசாயக் களஞ்சியமாக மாறுவதும் இரவல் அறிவின் அர்ச்சகர்களுக்கு நெருடலாக இருக்கிறது. இவை அடுத்த 10 - 20 ஆண்டுகளில் நடந்தேற வேண்டிய "சில' திட்டங்களை நடந்திடாது தடுத்துவிடும் என்பதால் தமிழக அரசைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் வெளிப்பாடே பட்ஜெட் தொடரின் கடைசி நாளன்று எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்ட 30 சட்ட மசோதாக்களில் ஒன்றான இச்சட்டம். தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் - 2009 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட இம் மசோதாவை ஆதரித்து வாக்களித்த உறுப்பினர்கள் ஆற அமர அதைப் படிக்கும்போது, ஓர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிக்கக்கூடிய ஒரு மோசமான சட்டத்திற்கு வாக்களித்தோம் என்பதை உணர்வார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் முன் இப்போது இரு வழிகள் உள்ளன. தனக்கும் தம் ஆட்சிக்கும் பழியைச் சேர்க்க இருக்கும் இந்தச் சட்டத்தை முற்றாக ரத்து செய்வது. ஏனெனில் இத்தகு மன்றத்திற்கு எவ்விதத் தேவையும் இல்லை. மற்றொன்று தமது அரசு கம்பெனிகளின் போக்கில் போகிறது என்பதைக் காட்டும்விதமாக இம்மசோதாவை உடனே சட்டமாக்குவது.

முடிவு முதல்வரிடம்!


கட்டுரையாளர் : ஆர். செல்வம்

நன்றி : தினமணி


விதி வலியது...

ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் அந்த மாநில அரசியல் சரித்திரத்தில் ஒரு மிகப்பெரிய துயரமாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. என்னதான் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டாலும் அதையும்மீறி விதி விளையாடி விடுகிறது என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

மருத்துவத்துக்குப் படித்துப் பட்டம் பெற்ற ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம் முதலே கரடு முரடானதாக இருந்தாலும், அதிர்ஷ்டக் காற்றும் அவருக்குச் சாதகமாக வீசி வந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். தனது 29-வது வயதில் 1978-ல் ராஜசேகர ரெட்டி சட்டப்பேரவை உறுப்பினரானதும் அடுத்த இரண்டே ஆண்டுகளில் துணையமைச்சராகப் பதவி ஏற்றதும் வெறும் தொடக்கமாக மட்டுமே இருந்தன. அவருடைய மிகப்பெரிய அரசியல் சாகசங்கள் கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் அரங்கேற்றப்பட்டன.

2003-ல் ராஜசேகர ரெட்டியின் பாதயாத்திரை ஏற்படுத்திய அதிர்வு அடுத்த ஆண்டே, ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. 2004 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜசேகர ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்தபோது, இந்த மனிதர் அசைக்கவே முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தொடர்ந்து எந்த ஒரு காங்கிரஸ் முதல்வராலும் பதவிக் காலம் முழுவதும் ஆட்சி செய்ய முடியாது என்கிற சரித்திரத்தைத் திருத்தி எழுதிய பெருமையும், இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் முதல்வர் என்கிற பெருமையும் நீலம் சஞ்சீவ ரெட்டிக்கும், காசா பிரம்மானந்த ரெட்டிக்கும் பிறகு ராஜசேகர ரெட்டியைத்தான் சாரும். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கும் ராஜசேகர ரெட்டியின் அரசியல் சாதுர்யமும், மக்கள் செல்வாக்கும்தான் காரணம் என்பதை எதிர்க்கட்சியினரேகூட ஒத்துக் கொள்வார்கள்.

ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலம் பற்றிய கணிப்பு எழுதப்படுமானால், இரண்டு விஷயங்களைத் தவிர்க்க இயலாது. முதலாவது, அவரது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அளவுக்கு இலவசத் திட்டங்கள் வேறு எந்த ஆட்சியிலும், எந்த அரசாலும் நிறைவேற்றப்பட்டதில்லை. அந்த இலவசத் திட்டங்களிலும் சரி, ஏழை எளியவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உண்மையிலேயே உபயோகமான குறைந்த விலையில் உணவுப் பொருள்கள், மருத்துவ வசதி, மின்சாரம் போன்றவைதான் வழங்கப்பட்டதே தவிர, ஊதாரித்தனமாக அரசு கஜானா சொந்த லாபத்துக்காக வீணடிக்கப்படவில்லை.
இரண்டாவதாக, அவரது ஆட்சியில், செயல்பாட்டில் இல்லாத புறம்போக்கு நிலங்கள் தனியார் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்கப்பட்டு ஏறத்தாழ ரூ. 1,500 கோடிவரை ஈட்டியது. இந்த விஷயத்தில் அரசு கஜானாவுக்கு வந்ததைவிடப் பல மடங்கு அரசியல்வாதிகளின், குறிப்பாக, ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவர்களின் பையை நிரப்பியது என்கிற குற்றச்சாட்டு இருப்பதும் உண்மை.

ஒரு முதல்வரின் மரணம், அதுவும் பதவியில் இருக்கும்போது மரணம் என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்திதான். 60 வயதிலும் துடிப்பாகவும், உற்சாகமாகவும் செயல்படும் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, தான் நடைமுறைப்படுத்தும் மக்கள் நல்வாழ்வுத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்று பார்வையிடச் சென்றபோது அகால மரணமடைந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.

மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்துத் தங்களது உயிரை அர்ப்பணிக்கும் தலைவர்களின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவது என்பது மக்களின் கடமை. நாகரிக மனிதன் செய்ய வேண்டிய நன்றிக் கடன். ஆனால், இதுபோன்ற தலைவர்களின் மரணத்தைச் சாக்காக வைத்து, உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் கட்சித் தொண்டர்களும், அவர்களுடன் சேர்ந்து சமூக விரோதிகளும் நடத்தும் அராஜகங்கள், மரண துக்கத்தை மறக்கடித்து விடுகின்றனவே!

பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் தில்லியில் நடந்த சீக்கியர் கலவரத்தின் வடுக்கள் இன்றுவரை மறைந்தபாடில்லை. எத்தனை பேர் உயிரிழந்தனர். எத்தனை வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டன. அப்போது, பெண்களும் குழந்தைகளும் பயத்தால் அலறிய ஓலம் இன்றுவரை காதில் ஒலிக்கிறதே...

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு நடந்த கலவரங்களும், ஆங்காங்கே கடைத்தெருக்கள் சூறையாடப்பட்ட சம்பவமும் மறக்கக்கூடியதா என்ன? சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் சிலையை ஒருவர் கடப்பாரையால் உடைத்த காட்சி இப்போதும் ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறதே...

தலைவர்களின் மரணத்துக்கு மௌன அஞ்சலி செலுத்துவதை விட்டுவிட்டு வன்முறையில் ஈடுபடுவதும், கடைத்தெருக்களைச் சூறையாடுவதும், பஸ்களையும், ரயில்களையும் கொளுத்துவதும் அநாகரிகம் என்று சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளாகியும், கல்வி அறிவு கணிசமாக அதிகரித்த பிறகும் புரியாமல் இருப்பது ஏன்? ரயில்களும், பஸ்களும் நிறுத்தப்பட்டதால் எத்தனை எத்தனை குடும்பங்கள் ஆந்திராவில் நடுத்தெருக்களில் தத்தளிக்கின்றனவோ? அஞ்சலி செலுத்த வேண்டிய நேரத்தில் அந்த அப்பாவி ஜனங்களின் சாபத்தை அல்லவா இந்தத் தொண்டர்கள் மறைந்த மாமனிதனுக்குப் பெற்றுத் தருகிறார்கள்...

எப்போதுதான் நாம் நாகரிக மனிதர்களாக வாழப் போகிறோமோ என்கிற கவலை தோய்ந்த சிந்தனையுடன், மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் குடும்பத்துக்கு "தினமணி' தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறது!
நன்றி : தினமணி

ஐரோப்பாவில் குண்டு பல்பிற்கு தடை

ஐரோப்பிய நாடுகளில் குண்டு பல்பு பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப் பட்ட இந்த குண்டு பல்புகளால், மின்சாரம் அதிகம் வீணாவதோடு, அதனை பயன்படுத்துவதன் மூலம் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனை தடுக்கும் விதமாக, ஐரோப்பாவில் குண்டு பல்பிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், குண்டு பல்பிற்கு பதிலாக ப்ளோரோசன்ட் லேம்ப்ஸ் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவிலும் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி : தினமலர்


கோடிகளை குவிக்கும் கோவில் பிசினஸ்: ஒரு ஷாக் ரிபோர்ட்

மனிதனுக்கு வேலை, பணம் உள்ளிட்ட எந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும், தன்னுடைய கவலைகளை தீர்த்து கொள்வதற்காக, அவன் மு‌தலில் தேடி செல்லும் இடம் கோவில். ஆத்மாவிற்கு அமைதியும் , நிம்மதியையும் தரும் இந்த கோவில்களில் தற்போதை‌ய நிலை, பணத்தை குவிக்கும் பிசினசாகி போனது தான். உடனடியாக கோடீஸ்வரராக நினைக்கும் சிலர், தங்கள் இடத்தில் ஒரு கோவிலை கட்டி, அங்கு ஒரு உண்டியலை வைத்து விடுகின்றனர். பின்னர், அந்த கோயிலை பிரபலப் படுத்தி, அதன் மூலம் கோடி கணக்கில் லாபம் பெறுகின்றனர். இதனால் தற்போது, தமிழகம் முழுவதும் கோயில் பிசினஸ் தான் கொடி கட்டி பறக்கிறது. இந்த கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டால் மட்டுமே மக்கள் ஏமாற்றப் படாமல் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், மக்களின் பணமும் சரியான தேவைகளுக்காக பயன்படுத்தப் படும். ஆனால் இதுபோன்ற தனியார் கோயில்களில் கிடைக்கும் பணம் குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டுமே போகின்றன. இதுகுறித்து, திருப்பூர் ஈஸ்வரன்கோயில், பெருமாள் கோயில் முன்னாள் திருப்பணிக்குழுத் தலைவர் முருகநாதன் தெரிவிக்கும் போது, ஒரு தனியார் கோயிலை அறநிலையத்துறை எடுப்பதால் அதை அரசு எடுத்ததாக ஆகிவிடாது. அங்கு வரும் காணிக்கை, நன்கொடை போன்றவை கணக்குப் பார்த்து தணிக்கை செய்து அது வேறொரு வேலைக்கு பயன்பட்டுவிடாமல் அறநிலைத் துறை பார்த்து கொள்கிறது. அதோடு அந்த கோயிலுக்கான பூஜை நேம நியமங்களை அறங்காவலர் குழு என்ற தனியார் தான் நிர்வகிப்பார்கள். ஒரு கோயிலை அறநிலையத்துறை நிர்வகிப்பது தான் உண்மையில் அந்தக் கோயில் நிர்வாகிகளுக்குப் பாதுகாப்பானது என்று தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உட்பட ஏகப் பட்ட தனியார் கோயில்கள் தமிழகத்தில் தற்போது வளர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி : தினமலர்