Friday, September 4, 2009

காக்க.. காக்க..

அமெரிக்க நாட்டின் பல்வேறு கலைக்கூடங்களில் உள்ள இந்திய பஞ்சலோகச் சிலைகளை மீட்பதற்கு மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடியுள்ளதாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து திருடப்பட்டு தற்போது நியூயார்க் நகரின் கலைக்கூடத்தில் இருக்கும் 12 நடராஜர் சிலைகளை இன்டர்போல் அமைப்பின் மூலமாக மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய புலனாய்வுத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் காவல்துறைத் தலைவர் (பொருளாதார குற்றப் பிரிவு) எஸ். ராஜேந்திரன் அண்மையில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் அரசு மட்டுமே கலைக்கூடங்கள் வைத்திருப்பதில்லை. தனியார் அமைப்புகளும் கலைக்கூடங்களை நிர்வகிக்கின்றன. பெரும்பாலும் இக் கலைக்கூடங்களில்தான் இந்தியாவிலிருந்து கடத்தப்படும் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய மண்ணை விட்டு வெளியேறிய கலைச் செல்வங்களை மீட்டுவருவது அத்தனை எளிதாக இருக்கவில்லை என்பதைத்தான் கடந்தகால அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மாபெரும் போராட்டத்துக்குப் பின்னர்தான் பத்தூர் நடராஜர் சிலையை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவர முடிந்தது. தமிழகத் தொல்லியல் துறையின் அன்றைய இயக்குநர் நாகசாமி மற்றும் அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் இருவரும் காட்டிய ஆர்வம்தான் காரணம் என்று கலைப்பொருள் ஆர்வலர்கள் இன்றும் மெச்சுகிறார்கள்.

ஆனால், அந்த ஒரு சிலையைத் தவிர குறிப்பிடும்படியாக இந்தியக் கலைப்பொருள் எதையும் நாம் மீட்டுக் கொண்டு வரவில்லை. இந்தியக் கலைச்செல்வம் என்று அனைவருக்கும் தெரிந்த கோகினூர் வைரத்தைக்கூட நம்மால் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

இதற்குக் காரணம், இந்திய தெய்வச் சிலைகள் மற்றும் கலைப் பொருள்கள் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டவை என்று தெரிந்திருந்தாலும்கூட சர்வதேச நீதிமன்றங்களில் வழக்காடும்போது அவர்கள் கேட்கும் அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் காட்ட முடிவதில்லை என்பதுதான். வெளிநாட்டுக் கலைக்கூடங்களில் இருக்கும் இந்தியச் சிலைகள் நம் நாட்டுத் தொல்லியல் துறையின் பதிவு பெற்ற சிலையாக இருந்தால் மட்டுமே நம்மால் வழக்காடவும் ஆதாரத்தைக் காட்டவும் இயலும்.

தற்போது நம்மிடம் உள்ள பஞ்சலோகச் சிலைகள் மற்றும் தெய்வச் சிலைகளை "காமா ரேய்ஸ் ஃபிங்கர் பிரிண்ட்' போன்ற நவீன தொழில்நுட்ப உதவியுடன் பதிவு செய்கிறார்கள். அனைத்துக் கோணங்களிலும் சிலையைப் படம் எடுத்து, சிலையின் எடையை மிகத் துல்லியமாகக் கணிக்கிறார்கள்.

ஆனால், அரசு கலைக்கூடங்களில் உள்ள சிலைகள் நீங்கலாக, தற்போது கோயில்களில் உற்சவமூர்த்திகளாக இருக்கும் அனைத்துப் பஞ்சலோகச் சிலைகளும் தொல்லியல் துறையிடம் பதிவு பெற்றவையாக இருப்பதில்லை. ஏற்கெனவே பதிவுபெற்ற சிலைகளாக இருந்தாலும்கூட, தற்போதைய நவீன தொழில்நுட்ப முறைகளில் அவற்றை மறுபதிவு செய்து சான்றுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.

இத்தகைய பதிவுகளை முறையாகவும் முழுமையாகவும் செய்தால் மட்டுமே நம்மால் இன்றைய நவீன உலகில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மீட்க முடியும். இதில் அரசு மற்றும் கோயில்களின் பஞ்சலோகச் சிலைகள் மட்டுமல்ல, தனியார் தங்கள் வீடுகளில், மடங்களில் வைத்து பல தலைமுறையாக வழிபடும் பஞ்சலோகச் சிலைகளையும்கூட பதிவு செய்துகொள்ள முடியும்.

பழைய நடைமுறைப்படி, பஞ்சலோகச் சிலைகளின் உள்ளீடற்ற பகுதியில் இருக்கும் வார்ப்பட மண் மட்டுமே "தெய்வசாட்சியாக' நீதிமன்றத்தில் நிற்க முடிந்தது. பத்தூர் நடராஜரை இந்திய மண்ணுக்கு மீட்டுவர உதவியது இந்த மண்தான். ஆனால் இப்போது அறிவியல் முறைப்படி மேலும் பல சான்றுகள் தேவைப்படுகின்றன.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் அனைத்திலும் உள்ள பஞ்சலோகச் சிலைகளை, சர்வதேச நீதிமன்றத்தின் தேவைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப முறையில் பதிவு செய்து வைக்க முன்வர வேண்டும். தனது கட்டுப்பாட்டில் இல்லாத சிறிய கோயில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளையும் நவீன முறைப்படி பதிவு செய்ய நிதியுதவி அளிப்பதும் அறநிலையத் துறையின் கடமையாகும்.

ஒவ்வொரு சிலையும் வெளிநாடுகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலைபோகிறது என்பதால்தான் இந்தியச் சிலைகள், குறிப்பாக தமிழகக் கோயில்களில் உள்ள சிலைகள் திருடு போகின்றன. அனைத்துக் கோயில்களிலும் சிலைகளை வைக்கும் பாதுகாப்பு அறைகளை "கைரேகைத் திறவுகோல்' போன்ற நவீன முறைகளால் பலப்படுத்த வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி, சிலைகளை மீட்பதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் சிலைகளை இந்திய மண்ணில் பாதுகாக்கும் செலவு மிகக் குறைவாகவே இருக்கும்.

நன்றி : தினமணி

No comments: