ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் அந்த மாநில அரசியல் சரித்திரத்தில் ஒரு மிகப்பெரிய துயரமாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. என்னதான் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டாலும் அதையும்மீறி விதி விளையாடி விடுகிறது என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.
மருத்துவத்துக்குப் படித்துப் பட்டம் பெற்ற ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம் முதலே கரடு முரடானதாக இருந்தாலும், அதிர்ஷ்டக் காற்றும் அவருக்குச் சாதகமாக வீசி வந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். தனது 29-வது வயதில் 1978-ல் ராஜசேகர ரெட்டி சட்டப்பேரவை உறுப்பினரானதும் அடுத்த இரண்டே ஆண்டுகளில் துணையமைச்சராகப் பதவி ஏற்றதும் வெறும் தொடக்கமாக மட்டுமே இருந்தன. அவருடைய மிகப்பெரிய அரசியல் சாகசங்கள் கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் அரங்கேற்றப்பட்டன.
2003-ல் ராஜசேகர ரெட்டியின் பாதயாத்திரை ஏற்படுத்திய அதிர்வு அடுத்த ஆண்டே, ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. 2004 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜசேகர ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்தபோது, இந்த மனிதர் அசைக்கவே முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
தொடர்ந்து எந்த ஒரு காங்கிரஸ் முதல்வராலும் பதவிக் காலம் முழுவதும் ஆட்சி செய்ய முடியாது என்கிற சரித்திரத்தைத் திருத்தி எழுதிய பெருமையும், இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் முதல்வர் என்கிற பெருமையும் நீலம் சஞ்சீவ ரெட்டிக்கும், காசா பிரம்மானந்த ரெட்டிக்கும் பிறகு ராஜசேகர ரெட்டியைத்தான் சாரும். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கும் ராஜசேகர ரெட்டியின் அரசியல் சாதுர்யமும், மக்கள் செல்வாக்கும்தான் காரணம் என்பதை எதிர்க்கட்சியினரேகூட ஒத்துக் கொள்வார்கள்.
ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலம் பற்றிய கணிப்பு எழுதப்படுமானால், இரண்டு விஷயங்களைத் தவிர்க்க இயலாது. முதலாவது, அவரது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அளவுக்கு இலவசத் திட்டங்கள் வேறு எந்த ஆட்சியிலும், எந்த அரசாலும் நிறைவேற்றப்பட்டதில்லை. அந்த இலவசத் திட்டங்களிலும் சரி, ஏழை எளியவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உண்மையிலேயே உபயோகமான குறைந்த விலையில் உணவுப் பொருள்கள், மருத்துவ வசதி, மின்சாரம் போன்றவைதான் வழங்கப்பட்டதே தவிர, ஊதாரித்தனமாக அரசு கஜானா சொந்த லாபத்துக்காக வீணடிக்கப்படவில்லை.
இரண்டாவதாக, அவரது ஆட்சியில், செயல்பாட்டில் இல்லாத புறம்போக்கு நிலங்கள் தனியார் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்கப்பட்டு ஏறத்தாழ ரூ. 1,500 கோடிவரை ஈட்டியது. இந்த விஷயத்தில் அரசு கஜானாவுக்கு வந்ததைவிடப் பல மடங்கு அரசியல்வாதிகளின், குறிப்பாக, ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவர்களின் பையை நிரப்பியது என்கிற குற்றச்சாட்டு இருப்பதும் உண்மை.
ஒரு முதல்வரின் மரணம், அதுவும் பதவியில் இருக்கும்போது மரணம் என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்திதான். 60 வயதிலும் துடிப்பாகவும், உற்சாகமாகவும் செயல்படும் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, தான் நடைமுறைப்படுத்தும் மக்கள் நல்வாழ்வுத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்று பார்வையிடச் சென்றபோது அகால மரணமடைந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.
மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்துத் தங்களது உயிரை அர்ப்பணிக்கும் தலைவர்களின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவது என்பது மக்களின் கடமை. நாகரிக மனிதன் செய்ய வேண்டிய நன்றிக் கடன். ஆனால், இதுபோன்ற தலைவர்களின் மரணத்தைச் சாக்காக வைத்து, உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் கட்சித் தொண்டர்களும், அவர்களுடன் சேர்ந்து சமூக விரோதிகளும் நடத்தும் அராஜகங்கள், மரண துக்கத்தை மறக்கடித்து விடுகின்றனவே!
பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் தில்லியில் நடந்த சீக்கியர் கலவரத்தின் வடுக்கள் இன்றுவரை மறைந்தபாடில்லை. எத்தனை பேர் உயிரிழந்தனர். எத்தனை வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டன. அப்போது, பெண்களும் குழந்தைகளும் பயத்தால் அலறிய ஓலம் இன்றுவரை காதில் ஒலிக்கிறதே...
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு நடந்த கலவரங்களும், ஆங்காங்கே கடைத்தெருக்கள் சூறையாடப்பட்ட சம்பவமும் மறக்கக்கூடியதா என்ன? சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் சிலையை ஒருவர் கடப்பாரையால் உடைத்த காட்சி இப்போதும் ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறதே...
தலைவர்களின் மரணத்துக்கு மௌன அஞ்சலி செலுத்துவதை விட்டுவிட்டு வன்முறையில் ஈடுபடுவதும், கடைத்தெருக்களைச் சூறையாடுவதும், பஸ்களையும், ரயில்களையும் கொளுத்துவதும் அநாகரிகம் என்று சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளாகியும், கல்வி அறிவு கணிசமாக அதிகரித்த பிறகும் புரியாமல் இருப்பது ஏன்? ரயில்களும், பஸ்களும் நிறுத்தப்பட்டதால் எத்தனை எத்தனை குடும்பங்கள் ஆந்திராவில் நடுத்தெருக்களில் தத்தளிக்கின்றனவோ? அஞ்சலி செலுத்த வேண்டிய நேரத்தில் அந்த அப்பாவி ஜனங்களின் சாபத்தை அல்லவா இந்தத் தொண்டர்கள் மறைந்த மாமனிதனுக்குப் பெற்றுத் தருகிறார்கள்...
எப்போதுதான் நாம் நாகரிக மனிதர்களாக வாழப் போகிறோமோ என்கிற கவலை தோய்ந்த சிந்தனையுடன், மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் குடும்பத்துக்கு "தினமணி' தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறது!
நன்றி : தினமணி
Friday, September 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment