Sunday, August 2, 2009

பங்குச் சந்தையை உயரே கொண்டு செல்லும் காலாண்டு முடிவுகள்

வியாழனன்று சந்தை மேலே சென்றது. அன்றைய தினம் சந்தை 214 புள்ளிகள் மேலே சென்று முடிந்தது. நேற்று முன்தினம் ஏறியதற்கு காரணம் சந்தையின் சென்டிமென்ட் தான். ஏறும் சந்தையில் வாங்குபவர்கள் பலர் இருந்ததால், சந்தையும் ஜோராக மேலே சென்றது. நேற்று முன்தினம் மும்பை பங்குச் சந்தை 282 புள்ளிகள் கூடி 15,670 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 65 புள்ளிகள் கூடி, 4,636 புள்ளிகளுடனும் முடிந்தது. இது, கடந்த 13 மாதத்தில் அதிகபட்ச உயர்வு.
ஏன் சந்தை கூடியது?: பங்குச் சந்தை ஒன்று தான், சந்தை மேலே செல்லும் போது அனைவரும் வரும் இடம். அது தான், தற்போது சந்தையில் நடக்கிறது. காலாண்டு முடிவுகள், எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளது. இது தவிர, வெளிநாட்டு முதலீடுகளும் வருகின்றன. இவையெல்லாம் சேர்ந்து சந்தையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி 9,903 புள்ளிகள் இருந்தது; அதன் பின் அதற்கும் குறைவாகவும் வந்தது. இந்நிலையில், தற்போது 15,670 புள்ளிகளாகி, 5 சதவீதம் கூடியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், இந்த ஆண்டு மட்டும் 700 கோடி அமெரிக்க டாலர்களை, இந்திய சந்தைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், கடந்தாண்டு 1,300 கோடி டாலர்களை எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் சந்தையின் ஏறு முகத்திற்கு காரணமாக உள்ளது.
காலாண்டு முடிவுகள்: வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் பெரும்பாலும் நன்றாகவே உள்ளன. குறிப்பாக ஸ்டேட் பாங்க், ஐ.ஓ.சி., மகேந்திரா மகேந்திரா, எடுகாம்ப், பி.ஈ.எம்.எல்., ஜோதி லாபரெட்டரி, மேட்ரிக் லாபரட்டரி, டைட் வாட்டர் ஆகிய கம்பெனிகள் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன.
அதானி பவரின் அபரிமிதமான சப்ஸ்கிரிப்ஷன்: அதானி பவரின் புதிய வெளியீடு அபரிமிதமாக செலுத்தப்பட்டது குறித்து தான் தற்போது சந்தை முழுவதும் பேச்சாக உள்ளது. 21.54 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு 2.96 தடவை செலுத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. இது, நீண்ட நாட்களுக்கு பிறகு அபரிமிதமாக செலுத்தப்பட்ட ஒரு வெளியீடு.
அடுத்த வாரம் என்.எச்.பி.சி: அனைவராலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசு வெளியீடான என்.எச்.பி.சி.,(நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன்) வரும் 8ம் தேதி தனது வெளியீட்டை கொண்டு வருகிறது. இதில் வெளியிடப்போகும் மொத்த பங்குகள் 1,67,73,74,015. இதன்மூலம், திரட்டப்படும் மூலதனத்தின் அளவு 6,000 கோடி ரூபாய் வரை வரலாம். இந்தப் பங்குகளில், சிறிய முதலீட்டாளர்கள் பங்கு பெற வேண்டும். ஏனெனில், இதில் லாபம் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பணவீக்கம்: பணவீக்கம் இன்னும் மைனசில் இருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம். இந்த வாரம் 1.54 சதவீதம் மைனசில் இருந்தது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை குறுகிய காலத்தில் மிகவும் மேலே சென்றுள்ளது போல் தோன்றுகிறது. இன்னும் சிறிது நாட்கள் மேலே சென்றாலும், ஒரு மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி :தினமலர்


ரூ. 2.26 லட்சம் கோடி கேள்விகள்!

மெனமாக மற்றொரு பிரளயத்துக்கு வித்திட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். 1991-ல் ஓர் அமைச்சராக இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் என்ற வார்த்தையை அவர் அறிமுகப்படுத்தினார். தேசம் முதல் பிரளயத்தைச் சந்தித்தது. தாராளமயமாக்கம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள் தனியார்மயம் என்று தேசம் முழுமையாக உணர்ந்துகொண்டது.


சரியாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது அவருடைய அமைச்சரவை சகா இன்னொரு பிரளயத்துக்கு வழிவகுக்கும்போது வார்த்தையை நேரடியாகவே பிரயோகப்படுத்துகிறார்: ""கல்வியைத் தனியார்மயமாக்குதல்'' என்று.


ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இப்போதைய ஆட்சியில் மனித வள மேம்பாட்டுத் துறை வழக்கம்போல குறைந்த கவனத்தை ஈர்க்கும் ஒரு துறையாக இருக்கப் போவதில்லை. அமைச்சர் கபில் சிபல் உறுதியாக இருக்கிறார்: ""1991-ல் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மாற்றம் 2009-ல் கல்வியில் நிகழ வேண்டும்''


கல்விச் சீரமைப்பு குறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் கபில் சிபல், அதீத கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக்கொள்வதிலிருந்தும் தனியார்மயமாக்குவதிலிருந்துமே கல்வித்துறை மாற்றங்களைத் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதையே கல்விச் சீரமைப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


பொருளாதாரச் சீரமைப்பைப் பற்றி மன்மோகன் சிங் பேசியபோது இருந்த சூழலைவிடவும் அவருடைய சகா கல்விச் சீரமைப்பைப் பற்றி பேசும்போது நிலவும் சூழல் அவருக்குச் சாதகமாக இருப்பதாகவே தோன்றுகிறது. 1990-களில் பெரும்பான்மை இந்திய அறிவுஜீவி வர்க்கம் மன்மோகனுக்கு சாதகமாக இல்லை. ஆனால், இப்போது அதுவே கபில் சிபலுக்கு சாமரம் வீசும்போது சொல்ல வேறென்ன இருக்கிறது?


முதல்கட்டமாக இந்த அரசு உயர்கல்வியைக் குறி வைத்திருக்கிறது. இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 11 சதமாக இருக்கிறது. இதை 2012-க்குள் 15 சதமாக உயர்த்த 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


இந்த இலக்கை எட்ட 1,500 பல்கலைக்கழகங்கள் நமக்கு வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் இப்போது ஏறத்தாழ 300 பல்கலைக்கழங்களே இருக்கின்றன. இதிலும் மூன்றில் ஒரு பகுதி தனியார் பல்கலைக்கழகங்கள். ஆகையால், இலக்கை எட்டும் தீர்வாக தனியார்மயமாக்கல் முன்வைக்கப்படுகிறது.


மேலும், வெளிநாடுகள் சென்று கல்வி கற்கும் மாணவர்களால் ஆண்டொன்றுக்கு ரூ. 35,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதால் கல்வித் துறையில் அந்நிய முதலீட்டை ஏன் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்கிறார்கள்.

நாம் கொஞ்சம் மாற்றி யோசிப்போம். உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை இந்த அளவுக்கு அதிரடியாக - அவசரமாக ஏன் உயர்த்த வேண்டும்? அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வியில் சேர முற்படும்போது போட்டி ஏற்படுகிறது. ஆகையால், அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதைத் தவிர்க்கவும் எல்லோரும் உயர்கல்வி கற்கவும் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியமாகிறது.


நாம் கொஞ்சம் மாற்றி யோசிப்போம். எல்லோரும் ஏன் உயர்கல்வி கற்க வேண்டும்? தயவுசெய்து இந்தக் கேள்வியை கொஞ்சம் விரிவான தளத்தில் - நாட்டின் 93 சதம் பேர் அமைப்புசாரா வேலைகளிலேயே இருக்கின்றனர் என்ற உண்மையின் பின்னணியில் யோசியுங்கள். அதாவது, உயர்கல்வி என்பது உண்மையிலேயே எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாக இருக்கிறதா அல்லது திட்டமிட்டு ஒரு மாயையாக உருவாக்கப்படுகிறதா? தேசிய தர மதிப்பீட்டுக் குழு (நாக்) என்ன சொல்கிறதென்றால், நம் நாட்டில் இப்போதுள்ள ஆகப் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தரமற்றவை என்கிறது.


இதன் இயல்பான விளைவாக நம் நாட்டில் பத்தில் இருவரே வாங்கும் பட்டத்துக்கேற்ற கல்வித் தகுதியைப் பெறுகின்றனர். அதாவது, முக்கால்வாசிக்கும் மேலானோர் அரைகுறைப் பள்ளிப் படிப்பில் பெற்ற அறிவையும் பெயருக்குப் பெற்ற பட்டத்தையும் கொண்டே வேலைகளைப் பெறுகின்றனர்; அனைத்துத் துறைகளும் இப்படியானவர்களைக் கொண்டே காலம் கடத்துகின்றன.


இந்த உண்மை கண்கூடாக இருக்கும் நிலையில், போலித்தனமாக எல்லோருக்கும் உயர்கல்வி அளிப்பதாலும் பட்டங்கள் அளிப்பதாலும் இடைத்தரகர்களைத் தவிர்த்து யாருக்கு லாபம்? அல்லது பள்ளிப் படிப்பே போதுமான ஒரு வேலைக்கு எதற்காக பட்டம்?


யோசித்துப் பாருங்கள். இப்போதெல்லாம் கல்வித் துறை ஏன் மதிப்பெண்களை வாரிவாரி வழங்குகிறது? போலியாகத் தேர்ச்சி பெற வைக்கிறது? போலியான போட்டியை உருவாக்குகிறது? போலியாக எண்ணிக்கையை உயர்த்த முயல்கிறது?


இந்தக் கேள்விகளின் மதிப்பு சாதாரணமானதல்ல. ரூ. 2.26 லட்சம் கோடி. ஆமாம். 2012-க்குள் இந்தியாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15 சதமாக வேண்டுமானால், 15-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையின்படி அதற்கு இத்தனை தொகை தேவை. இத்தனை பணம் அரசிடம் இல்லாததால்தான் கல்வியைத் தனியார்மயமாக்குகிறோம் என்கிறார்கள்.


ஆகையால், சீரமைப்பு குறித்து பேசுகிறவர்கள் - ரூ. 2.26 லட்சம் கோடியைப் பற்றி பேசுகிறவர்கள் அதே மதிப்பைக் கொண்ட இந்தக் கேள்விகளையும் எதிர்கொண்டு பதிலளிக்க முயலலாம்.


கட்டுரையாளர் : சமஸ்
நன்றி : தினமணி

உலகளவில் உருக்கில் இந்தியா முன்னணி

உலகளவில் உருக்கு உற்பத்தி செய்யும் நாடுகள், அதன் உற்பத்தியில் திடீரென சரிவை சந்தித்து வரும் வேளையில், இந்தியா வளர்ச்சியடைந்து, தற்போது மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இந்தாண்டு ஸ்டீல் உற்பத்தியில் மற்ற நாடுகள் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளே, ஸ்டீல் உற்பத்தியில் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில், அதிகளவில் ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், இந்தியா, இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், ஸ்டீல் உற்பத்தியில் திடீரென சரிவை சந்தித்துள்ளன. இது குறித்து இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ரூங்டா கூறுகையில், 'பொருளாதார மந்த நிலை நிலவிய போதும், ஸ்டீல் உற்பத்தி துறையின் வளர்ச்சியை பராமரித்தோம். இதற்கு உள்நாட்டு சந்தையில் நிலவும், அதிகப்படியான தேவையே காரணம்' என்றார்.
நன்றி : தினமலர்


விவசாயம், ஓட்டல்களை விட, சிகரெட்டில் லாபம் குவியுது: மூன்று மாதங்களில் மட்டும் 900 கோடி ரூபாய்

விவசாயப் பொருட்கள் விற்பனை மற்றும் ஓட்டல் தொழில் மூலம் கிடைக் கும் வருவாய் பல மடங்கு குறைந்து விட்டது; அதே சமயம், சிகரெட் விற் பனை மூலம், மூன்று மாதங்களில் 900 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத் துள்ளது. சிகரெட் விற்பனை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறதே ஒழிய, எந்த கட்டுப்பாடுகள் போட்டாலும், குறைந்த பாடில்லை. சிகரெட் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் இந் திய டுபாக்கோ கம்பெனி (ஐ.டி.சி.,)க்கு கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் மட் டும் 17 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு , ஏப்ரல் - ஜூன் மாதங்களில் ஐ.டி.சி., லாபம் 748 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு இதே மூன்று மாதங்களில் 900 கோடியாக உயர்ந்துள்ளது. சிகரெட் விற்பனை மூலமான வருமானம், கடந்த ஆண்டு இந்த மூன்று மாதங்களில் 3,900 கோடியாக இருந்தது; இந்தாண்டு இதே காலகட்டத்தில், 4,090 கோடியாக உள்ளது. இதே காலகட்டத்தில், விவசாய பொருட்கள் விற் பனையால் வரக்கூடிய வருமானம் 49 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 940 கோடி ரூபாய் குறைவாக வருமானம் கிடைத்துள் ளது.
அதுபோல, ஓட்டல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் 28 சதவீதம் குறைந்து விட்டது. அதாவது, கடந்த ஆண்டு இந்த மூன்று மாதங்களில் கிடைத்ததை விட, 173 கோடி ரூபாய் குறைவாக கிடைத்துள்ளது.
சிகரெட் விலை உயர்த் தப்பட்டாலும், அதன் விற் பனை குறைந்ததாக தெரியவில்லை. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி தான் உள்ளது. அதுபோல, சிகரெட் பிடிக்க கட்டுப்பாடுகளை போட்டபோதும், அதன் விற்பனை துளிக்கூட சரியாதது மட்டுமின்றி, அதிகமாகத்தான் உள்ளது. கோல்டுபிளேக்ஸ் கிங்ஸ், கிளாசிக், ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555, பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் போன்ற உயர் ரக சிகரெட் விலைகளை ஐ.டி.சி., தொடர்ந்து அதிகரித்து வந்துள் ளது. கடந்த காலாண்டில், 15 சதவீத லாபம் தான் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், அதைவிட அதிகமாக கிடைத்துள்ளது, சிகரெட் தொழில்துறை தரப் பில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர்