Sunday, August 2, 2009

பங்குச் சந்தையை உயரே கொண்டு செல்லும் காலாண்டு முடிவுகள்

வியாழனன்று சந்தை மேலே சென்றது. அன்றைய தினம் சந்தை 214 புள்ளிகள் மேலே சென்று முடிந்தது. நேற்று முன்தினம் ஏறியதற்கு காரணம் சந்தையின் சென்டிமென்ட் தான். ஏறும் சந்தையில் வாங்குபவர்கள் பலர் இருந்ததால், சந்தையும் ஜோராக மேலே சென்றது. நேற்று முன்தினம் மும்பை பங்குச் சந்தை 282 புள்ளிகள் கூடி 15,670 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 65 புள்ளிகள் கூடி, 4,636 புள்ளிகளுடனும் முடிந்தது. இது, கடந்த 13 மாதத்தில் அதிகபட்ச உயர்வு.
ஏன் சந்தை கூடியது?: பங்குச் சந்தை ஒன்று தான், சந்தை மேலே செல்லும் போது அனைவரும் வரும் இடம். அது தான், தற்போது சந்தையில் நடக்கிறது. காலாண்டு முடிவுகள், எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளது. இது தவிர, வெளிநாட்டு முதலீடுகளும் வருகின்றன. இவையெல்லாம் சேர்ந்து சந்தையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி 9,903 புள்ளிகள் இருந்தது; அதன் பின் அதற்கும் குறைவாகவும் வந்தது. இந்நிலையில், தற்போது 15,670 புள்ளிகளாகி, 5 சதவீதம் கூடியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், இந்த ஆண்டு மட்டும் 700 கோடி அமெரிக்க டாலர்களை, இந்திய சந்தைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், கடந்தாண்டு 1,300 கோடி டாலர்களை எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் சந்தையின் ஏறு முகத்திற்கு காரணமாக உள்ளது.
காலாண்டு முடிவுகள்: வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் பெரும்பாலும் நன்றாகவே உள்ளன. குறிப்பாக ஸ்டேட் பாங்க், ஐ.ஓ.சி., மகேந்திரா மகேந்திரா, எடுகாம்ப், பி.ஈ.எம்.எல்., ஜோதி லாபரெட்டரி, மேட்ரிக் லாபரட்டரி, டைட் வாட்டர் ஆகிய கம்பெனிகள் நல்ல முடிவுகளை அறிவித்துள்ளன.
அதானி பவரின் அபரிமிதமான சப்ஸ்கிரிப்ஷன்: அதானி பவரின் புதிய வெளியீடு அபரிமிதமாக செலுத்தப்பட்டது குறித்து தான் தற்போது சந்தை முழுவதும் பேச்சாக உள்ளது. 21.54 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்களின் பங்கு 2.96 தடவை செலுத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. இது, நீண்ட நாட்களுக்கு பிறகு அபரிமிதமாக செலுத்தப்பட்ட ஒரு வெளியீடு.
அடுத்த வாரம் என்.எச்.பி.சி: அனைவராலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசு வெளியீடான என்.எச்.பி.சி.,(நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன்) வரும் 8ம் தேதி தனது வெளியீட்டை கொண்டு வருகிறது. இதில் வெளியிடப்போகும் மொத்த பங்குகள் 1,67,73,74,015. இதன்மூலம், திரட்டப்படும் மூலதனத்தின் அளவு 6,000 கோடி ரூபாய் வரை வரலாம். இந்தப் பங்குகளில், சிறிய முதலீட்டாளர்கள் பங்கு பெற வேண்டும். ஏனெனில், இதில் லாபம் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பணவீக்கம்: பணவீக்கம் இன்னும் மைனசில் இருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம். இந்த வாரம் 1.54 சதவீதம் மைனசில் இருந்தது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை குறுகிய காலத்தில் மிகவும் மேலே சென்றுள்ளது போல் தோன்றுகிறது. இன்னும் சிறிது நாட்கள் மேலே சென்றாலும், ஒரு மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி :தினமலர்


No comments: