Monday, August 3, 2009

ஐ.ஓ.பி., சர்வதேச வர்த்தகம் உயர்வு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த சர்வதேச வர்த்தகம், ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 670 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 2008ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 420 கோடி ரூபாயாக இருந்த மொத்த சர்வதேச வர்த்தகம், 2009ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 670 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில், 29 ஆயிரத்து 250 கோடி ரூபாய் (19.71 சதவீதம்) அளவிற்கு வர்த்தகம் உயர்ந்துள்ளது. மொத்த சர்வதேச டிபாசிட், 2008ம் ஆண்டில், 85 ஆயிரத்து ஒரு கோடி ரூபாயிலிருந்து, 2009ம் ஆண்டில், ஒரு லட்சத்து 806 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் சர்வதேச டிபாசிட், 15 ஆயிரத்து 805 கோடி ரூபாய் (18.59 சதவீதம்) அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான மூன்று மாத காலத்திற்கான நிகர லாபம், 301 கோடியே 78 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மூன்றாண்டு காலத்தில் 255 கோடியே 97 லட்சம் ரூபாயாக இருந்தது. மூன்று மாத காலத்திற்கான மொத்த வருவாய், 2,808 கோடியே 51 லட்சம் ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மூன்று மாத காலத்தில் மொத்த வருவாய், 2,186 கோடியே 83 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது 28.43 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்று மாத காலத்தில் வட்டி வருவாய், 2,577 கோடியே 85 லட்சம் ரூபாயாகவும், வட்டியில்லா வருவாய் 230 கோடியே 66 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. மொத்த செலவு 2,379 கோடியே 89 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கியின் அனைத்து கிளைகளும் 100 சதவீதம் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: