Friday, November 20, 2009

விபரீத யோசனை

கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற மருத்துவப் படிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று இந்திய மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கேதன் தேசாய் கூறியுள்ளார்.

இது பாராட்டத்தக்க முடிவு போலவும், கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் கிடைக்கவில்லை என்ற அவலத்தைப் போக்கிவிட வந்த மாற்று ஏற்பாடு என்பதைப் போலவும் தோற்றம் தந்தாலும், இதனால் கிராம மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

கிராமப்புறத்துக்குச் சேவை செய்ய கிராமப்புற மாணவன் மட்டுமே எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற படிப்பைப் படிக்க வேண்டும் என்றால், மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் பார்க்க அந்த மக்களில் ஒருவருக்கு எம்பிபிஎஸ் (டிரைபல்) என்று ஒரு மருத்துவக் கல்வியைத் தொடங்குவார்களா என்ன?

கிராமப்புற மாணவனின் அறிவை கிராமத்திலேயே இருத்தி வைப்பதற்கும், நகர்ப்புற மாணவனின் அறிவை நகரத்திலேயே வளரச் செய்வதற்கும் மட்டுமே இந்தப் புதிய முறை உதவியாக அமையுமே தவிர எதிர்பார்க்கும் பயன்களை அளிக்காது.

கிராமத்தில் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும், சென்னை மாநகராட்சி தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும் ஒரே விதமான தகுதியை நிர்ணயிக்கும்போது, ஊரகப் பகுதியில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் சென்னையில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் ஒரு விதமான தகுதி, சம்பளத்தை நிர்ணயிக்கும்போது, மருத்துவத்தில் மட்டும் இரு வேறு தகுதிகளை- நகரம், கிராமம்- புகுத்துவதன் மூலம் அலோபதி மருத்துவத் துறையில் தேவையற்ற ஒரு பிளவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

மேலும், பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கிராம டாக்டர் என்பவர், நகர டாக்டரைவிட அனுபவம் மற்றும் அறிவில் குறைந்தவர் என்ற எண்ணத்தை அரசே உருவாக்கி, கிராம மக்களை நகரத்துக்கு வரச் செய்வதாக அமைந்துவிடும் அபாயமும் உள்ளது. கிராம மக்களே தங்கள் கிராம டாக்டர்களைப் புறக்கணிக்கவைப்பதாக அமைந்துவிடும்.

அத்தோடு, எம்பிபிஎஸ் (ரூரல்) படிப்பவர் மற்ற எம்பிபிஎஸ் (நகரம்) ஆக மாறவே விரும்புவார். இதற்கான சங்கம் உருவெடுக்கும்; போராட்டமும் நடக்கும். அரசு செவி மடுக்கும்போது, இவர்கள் அனைவரும் ஒரிஜினல் எம்பிபிஎஸ் ஆகிவிடுவார்கள்.

கேதன் தேசாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்தியாவில் மொத்தம் 299 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆண்டுதோறும் இந்தியா முழுவதிலும் 34,000 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடிகிறது. இதில் முதுகலை மருத்துவம் படிக்க 14,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதிலும் சிறப்பு மருத்துவம் பயில 709 இடங்களே உள்ளன. நடப்பாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி அவரே தெரிவித்துள்ள புள்ளிவிவரம் இது.

மருத்துவப் படிப்பில் தற்போதுள்ள இடங்களை ஆண்டுக்கு 34,000 என்பதை இரட்டிப்பாக்கினால் எம்பிபிஎஸ் டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதைப் புதிய கல்லூரிகள் திறப்பதைக் காட்டிலும், தற்போதுள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் 100 இடங்களுக்கு பதிலாக 200 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பதும், வகுப்புகளை காலை மாலை என்று பிரித்துக் கொண்டு பயிற்றுவிப்பதும், இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கையைப் பாகுபாடு இல்லாமல் பரவலாக்க முடியும்.

கிராமப் புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ள டாக்டர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் சேர 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். அதேபோன்று சிறப்பு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் கிராமங்களில் பணியாற்றிய டாக்டர்களுக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை முறைகேடு இல்லாமல், நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்படும் என்றால், நிச்சயமாகக் கிராமங்களில் டாக்டர்கள் சேவை கிடைப்பது எளிதாகிவிடும்.

இந்தியாவில் எம்பிபிஎஸ் படித்த மாணவர் ஒவ்வொருவரும் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் சுமார் ஓராண்டுக்கும் மேலாகப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றும் காலத்தில், இவர்களைச் சுழற்சி முறையில் கிராமங்களில் பணியாற்றச் செய்வதன் மூலமும், கிராம மருத்துவமனைகளில் எப்போதும் மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

டாக்டர்களை கிராமங்களுக்கு அனுப்பும் சக்தி அரசுக்கு இல்லை என்பதற்காக, கிராமத்து மாணவர்களை எம்பிபிஎஸ் (ரூரல்) ஆக்குவது எந்த வகையிலும் சரியானதாக அமையாது.
நன்றி : தினமணி

தங்கத்தின் மீதான முதலீடு குறைகிறது

தங்கத்தில் முதலீடு செய்வது, இந்திய அளவில் 42 சதவீதம் குறைந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. சுத்த தங்கத்தின் நேற்றைய மதிப்பு, 10 கிராமுக்கு, ரூ.17 ஆயிரத்து 280 என்ற அளவிலும், ஆபரணத் தங்கத்தின் மதிப்பு, 10 கிராமுக்கு, ரூ.16 ஆயிரத்து 220 என்றும் 'எகிறி' உள்ளது. இதையடுத்து, ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் குறைந்துள்ளது.உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது என்றாலும், கடந்த ஜூலை செப்டம்பர் மாதங்களில், 34 சதவீதம் குறைந்துள்ளது என்று, உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது என்று கூறியுள்ள கவுன்சில், இதுவரை 111.6 டன் மட்டுமே இந்தியா வாங்கியுள்ளது என்றும் கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட, 42 சதவீதம் குறைவு. ஆபரணத்தைத் தவிர, மற்ற பயன்பாட்டுக்கான தங்கம் வாங்குவதும், 67 சதவீதம் குறைந்துள்ளது.உலக அளவில், இந்த ஆண்டுக்கான முதல் ஒன்பது மாதங்களில் 800 டன் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. எனினும், கடைசி மூன்று மாதங்களில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தியாவுக்கு நேர் எதிராக, சீனாவில் தங்கத்தின் மீதான முதலீடு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒன்பது மாதங்களில் 120 டன் தங்கம், சீனாவில் விற்பனை ஆகியுள்ளது. மேலும், 24 கேரட் சுத்த தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும் சீனாவில் அதிகரித்துள்ளது.சீனாவின் அபரிமித வளர்ச்சியை இது காட்டுவதாக, பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


வருவாய் அதிகரிக்க பொதுத் துறை வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க முடிவு

பொதுத் துறை வங்கிகளை இணைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மூலதன இருப்பு விகிதம் குறைவாகவும் வாராக்கடன் அதிகமாகவும் உள்ள சிறிய அளவிலான பொதுத் துறை வங்கிகளை, பெரிய வங்கிகளுடன் இணைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதற்காக முன்னணி பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. சிறிய அளவில் செயல்பட்டு வரும் வங்கிகள் பெரிய வங்கிகளுடன் செயல்படும் போது, அவற்றின் வருவாய் அதிகரிப்பதுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிய வங்கிகளின் பங்களிப்பு அதிகளவில் அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர்


சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல்: ஊழியர்கள் தவிப்பு

சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.
சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, 'மீட்டிங்' என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். 'சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது' என, அறிவித்தனர்.
காலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர்.
நன்றி : தினமலர்