Saturday, July 18, 2009

வாக்கினிலே இனிமை வேண்டும்!

""பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகை என்பது உமக்கே தெரியும்...'' திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி கதாபாத்திரம் நக்கீரரிடம் பேசும் இந்த வசனத்தை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன அண்மைக் கால அரசியல் சம்பவங்கள்.
அரசியல்வாதிக்குப் பேச்சுதான் மூலதனம். அதைக் கொண்டுதான் தன் நியாயத்தை நிலைநாட்டுவதும் மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்புவதும் சாத்தியமாகும். ஆனால், மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க் கட்சித் தலைவரை கண்ணியமற்ற, தரக்குறைவான சொற்களால் விமர்சனம் செய்யும்போது, தேவையற்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. அகில இந்திய அளவில் பேசப்படும் நபர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் யார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்களுக்கே கூடத் தெரியுமா என்பது சந்தேகம்தான். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஹேமவதி நந்தன் பகுகுணாவின் புதல்வியான ரீட்டா பகுகுணாவின் பெயர் இப்போது இந்திய அளவில் அனைத்து ஊடகங்களிலும் பேசப்படுகிறது. அனைத்து செய்தித்தாள்களிலும் முதல் பக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாயாவதி அரசு நிதியுதவி அளிப்பது குறித்து விமர்சனம் செய்ய ரீட்டா பகுகுணாவுக்கு முழு உரிமை உள்ளது. கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ரீட்டா பகுகுணா பயன்படுத்திய சொற்கள்தான் ஆட்சேபத்துக்குரியவை. குறிப்பாக, மாயாவதியும் ஒரு பெண், அவரை விமர்சனம் செய்யும் தானும் ஒரு பெண் என்ற உணர்வே இல்லாமல், தரக்குறைவாகப் பேசியதால்தான் அங்கே வன்முறைகளும், தீயிடும் சம்பவங்களும், கைதுகளும் நிகழ்ந்தன.
நடந்து முடிந்த தேர்தலின்போது, பாஜக வேட்பாளர் வருண் காந்தி ஒரு கருத்தைத் தெரிவிக்க, அது மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. அதுநாள்வரை, வருண்காந்தியைப் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைந்த நபர்கள்தான். ஆனால் அவரது பேச்சுக்குப் பிறகு இந்தியா முழுவதற்கும் அவர் பெயரைச் சொன்னாலே போதும் என்கிற அளவுக்கு பிரபல்யம் அடைந்தார். இதே மாயாவதி அரசு அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததும், அது தொடர்பாக எழுந்த கருத்து மோதல்களும் அவரை அரசியல்வாதியாக மாற்றிவிட்டன. இன்னமும் வழக்கு முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால், இப்படிப் பேசுபவர்களை அவர்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை கண்டிப்பதோ அல்லது அவர்கள் பேச்சுக்காக தண்டிப்பதோ கிடையாது என்பதுதான்.
கட்சித் தலைமை மகிழ்கிறது என்பதற்காகவே இத்தகைய மோசமான, தரக்குறைவான பேச்சுகள் மற்றும் கேலிகள், விமர்சனங்களை முன்வைக்க இரண்டாம் நிலைத் தலைவர்கள் முற்படுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படும்போது, கட்சித் தலைமை இத்தகைய தரக்குறைவான போக்கை அங்கீகரிப்பதாகவே அமைந்துவிடுகிறது. இத்தகையவர்களை தொடக்கத்திலேயே கண்டிக்கவும், பதவிகளிலிருந்து நீக்கவும் கட்சித் தலைமை முற்பட்டால், இந்த அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஒரு மனிதரின் நடவடிக்கை மீதான வெறுப்பு தனிநபர் மீதான வெறுப்பாக மாறுவது சரியான பண்பாடு அல்ல. ஆனால், தமிழக அரசியல் கட்சி மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும், தங்கள் கட்சித் தலைமை மேடையில் அமர்ந்திருக்க, எதிர்க்கட்சித் தலைமையின் கொள்கையை விமர்சிக்காமல் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளை விமர்சித்து காயப்படுத்தி, கைத்தட்டல் பெறுவதுதான் அதிகம் நிகழ்கிறது.
"திரு. கருணாநிதி அவர்கள்' என்று சொல்லியோ, "செல்வி ஜெயலலிதா அவர்கள்' என்று சொல்லியோ அவர்களது கொள்கைகளை அழகான தமிழ்ச் சொற்களால் விமர்சிக்கும் நாநலம் இன்றைய அரசியலில் காணாமல் போய்விட்டது. இதே நிலைமைதான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் காணப்படுகிறது. ஒவ்வோர் அரசியல் கட்சித் தலைவரும் நினைத்தால் இதை முற்றிலுமாக மாற்றி அமைக்க முடியும்.
பொய் சொல்லாதிருக்கும் "வாக்குச் சுத்தம்' அரசியலில் மிகமிகக் கடினம்தான். "வார்த்தைச் சுத்தம்' கூட அத்தனைக் கடினமா, என்ன?
நன்றி : தினமணி

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் 'பர்பிள்டெல்' சேவை அறிமுகம்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தனது பாலிசிதாரர்களின் ஆரோக்கியத்திற்காக தானியங்கி, தனிநபர், மொபைல் போன் மூலமான 'பர்பிள்டெல்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் சேவை மூலம் பாலிசிதாரர்களின் வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பிரச் னைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனைகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். பரிசோதனையில், பாலிசிதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நோய் இருப்பின், மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச் சை எடுத்துக் கொள்ள, இந்த சேவை உதவும். இது குறித்து, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: எங்கள் பாலிசிதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட தனிநபர் ஆரோக்கிய செயல்களை செய்ய நினைவுபடுத்துகிறோம். நீரிழிவு உள்ளிட்ட நீண்ட கால சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய நோயாளிகளுக்கு, உரிய நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், மருத்துவரை சந்திக்கவும் நினைவுபடுத்துவதன் மூலம் நிலைமையை சீராக் குவதுடன், சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
எங்கள் பாலிசிதாரர்கள் ஆரோக்கியத்துடன் வாழ இந்த சேவை உதவும். முதல் கட்டமாக, இந்த சேவை, எங்களிடம் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் பாலிசி எடுத்திருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு ஸ்ரீனிவாசன் பேசினார். இந்த அறிமுக நிகழ்ச்சியில், பர்பிள்டெல்லின் முதன்மைச் செயல் அதிகாரி நாராயண் ராம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர்கள் அஷ்டனா, கோஷ், ஜோசப் பிளாப்பலில் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்


வங்கிகளில் ரூ.50,000 கோடி கடன் வைத்திருக்கும் கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் நிறுவனங்கள்

தென் தமிழ்நாட்டின் பெரிய தொழில் மாவட்டங்களான கோவை மற்றும் திருப்பூரில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள், அங்குள்ள பலதரப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.50,000 கோடி வரை கடன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அதிகப்படியான தொகையை கடனாக வைத்திருப்ப தற்கு , அடிக்கடி ஏற்படும் பவர்கட் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இது குறித்து சௌத் இந்தியா இஞ்சினியரிங் மேனுஃபேக்சரர்ஸ் ஆசோசியேஷன் ( சீமா ) கருத்து தெரிவித்தபோது, கோயம்புத்தூரில் இருக்கும் இஞ்சினியரிங் தொழில்கள் மட்டும் வங்கிகளில் ரூ.20,000 கோடி வரை கடன் வைத்திருக்கின்றன. அதேபோல், டெக்ஸ்டைல் இன்டஸ்டிரி ரூ.15,000 கோடி வரை கடன் வைத்திருக்கின்றன. திருப்பூரில் இருக்கும் கார்மென்ட்ஸ் துறையினர் ரூ.6,000 கோடி வரை கடன் வைத்திருக்கின்றனர் என்றனர்.அங்குள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், நிச்சயமாக ரூ.40,000 கோடிக்கு மேல் கடன் இருக்கும் என்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஃபவுண்டரிகள், ஆட்டோ உதிரி பாக தொழில், பம்ப் செட், டெக்ஸ்டைல் மெஷினரி, மற்றும் இன்டஸ்டிரியல் வால்வ் தயாரிப்பு ஆகிய தொழில்களில் 40 சதவீத வேலையாட்களை மட்டுமே வேலையில் வைத்து வேலை வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் உற்பத்தியும் 50 சதவீதம் குறைந்து விட்டதாக சொல்கிறார்கள். கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,00,000 பேர் வேலையிழந்திருப்பர் என்கிறார் சீமா வின் தலைவர் ஜெயகுமார் ராமதாஸ்.வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் எங்களது தயாரிப்புகளை சப்ளை செய்ய முடியாமல் போனதால், எங்களுக்கு வரவேண்டிய பல ஆர்டர்கள் குஜராத் மற்றும் லூதியானாவுக்கு சென்றிருக்கிறது. இருந்தாலும் எங்களிடம் விசாரனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்றார் ஜெயகுமார். ரூ.6,000 கோடி வரை கடன் வைத்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயத்த ஆடை தயாரிப்பு நகரமான திருப்பூரின் நிலையை அதை விட மோசம் என்றார் ஜெயக்குமார். திருப்பூர் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் சக்கிவேல் இது குறித்து தெரிவிக்கையில், நாங்கள் சீன மற்றும் வங்காளதேச நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டியதிருக்கிறது. அந்த இரு நாடுகளிலும் எங்களது விலையை விட 20 முதல் 30 சதவீதம் வரை குறைவான விலைக்கு ஆர்டர்களை பெறுகிறார்கள். நாங்களும் அந்த விலையை கேட்டால் எங்களுக்கும் ஆர்டர்கள் வந்துகொண்டுதான் இருக்கும். திருப்பூரில் இருந்து 2006 - 07 நிதி ஆண்டில் ரூ.11,000 கோடிக்கு ஏற்றுமதியாகி இருந்தது, 2008 - 09 ல் ரூ.9,500 கோடியாக குறைந்திருக்கிறது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியிருக்கும் கடனை தாமதமாக திருப்பி செலுத்த அனுமதிக்கு மாறு, மத்திய நிதி அமைச்சகத்திற்கு அங்கிருந்து கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


முதல் நானோ காரை மும்பைவாசி பெற்றார்

உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் முதல் நானோ கார், ஒரு மும்பைவாசி வாடிக்கையாளருக்கு நேற்று வழங்கப்பட்டது. அசோக் ரகுநாத் விகாரே என்ற மும்பைவாசிக்கு முதல் நானோ காரின் சாவியை நேற்று டாடா மோட்டார்ஸ் சேர்மன் ரத்தன் டாடா வழங்கினார். டாடா மோட்டார்ஸின் பெருமைமிகு காரான நானோ வை அதன் சேர்மன் ரத்தன் டாடாவிடமிருந்து பெற்றதில் அதிக மகிழ்ச்சி அடைந்ததாக ரகுநாத் தெரிவித்தார். நானோவின் சிறந்த வகை மாடலான நானோ எல்எக்ஸ் ( லூனார் சில்வர் ) காரை அவர் பெற்றார். இதன் மூலம், முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நானோ காரை சப்ளை செய்யும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மீதி பேருக்கு நானோ கார் சப்ளை செய்யப்பட்டு விடும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. முதல் காருக்கான சாவியை ரகுநாத்திடம் வழங்கி பேசிய ரத்தன் டாடா, அதிகம் புகையை கக்காத, நவீன வசதிகள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிற, ஓட்டுவதற்கு சுகமாக இருக்கிற, நகரங்களுக்கு ஏற்ற, சிறந்த கார் ஒன்றை ரகுநாத் பெற்றிருக்கிறார் என்றார். ரகுநாத்திற்கு அடுத்ததாக, இரண்டாவது நானோ காரை ஹெச்டிஎஃப்சி பேங்க் ஊழியரான ஆசிஸ் பாலகிருஷ்ணன் ( எல்எக்ஸ் - சன்ஷைன் யெல்லோ ) என்பவரும், மூன்றாவது காரை கோரஸ் இந்தியாவும் ( எல்எக்ஸ் - லூனார் சில்வர் ) பெற்றனர்.
நன்றி : தினமலர்