நன்றி : தினமலர்
Monday, December 29, 2008
அடுத்த மாதத்திலிருந்து கார்களின் விலை உயர்கிறது
அடுத்த மாதத்தில் இருந்து, கார்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. குறிப்பாக, கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிப்பதற்காக, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து கார்களின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு குறித்து அறிவிக்க அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. டொயட்டா நிறுவனம், ஜனவரி முதல் தேதியில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயட்டா நிறுவன உதவி மேலாண்மை இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில், 'கடந்த மூன்று மாதங்களில் ரூபாய், டாலர் மாற்று மதிப்பு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. சந்தை நிலைமை தற்போது கார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றார். இருந்தாலும், இந்த விலை உயர்வு மிகவும் அதிக அளவில் இருக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மாருதி நிறுவன வட்டாரங்கள், 'சந்தை நிலவரத்தில் குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சி இல்லையெனில், கார் தயாரிப்பை குறைப்பதை தவிர வேறு வழி இல்லை' என்றன.
Labels:
தகவல்
கடனுக்கான வட்டியை குறைக்கிறது ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ பேங்க்கில் ஹவுசிங், ஆட்டோ மற்றும் பெர்சனல் லோன் வாங்கியவர்களுக்கு ஒரு புத்தாண்டு இனிப்பு செய்தியை அதன் சி.இ.ஓ., மற்றும் மேலாண் இயக்குனர் கே.வி.காமத் அறிவித்திருக்கிறார். இவர்களுக்கான வட்டியை குறைக்கப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஜனவரியின் ஆரம்பத்தில் நாங்கள், எங்களிடம் லோன் வாங்கியவர்களுக்கு வட்டியை குறைப்பது பற்றி அறிவிப்போம் என்றார் அவர். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன புத்தாண்டு பரிசு கொடுக்கப்போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது இதை அவர் தெரிவித்தார். வட்டி குறைப்பு ஒரு சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில்தான் புதிதாக அவர்களிடம் ஹவுசிங் லோன் வாங்கியவர்களுக்கு வட்டியை 1.5 சதவீதம் வரை குறைத்திருந்தது. ஜனவரியில் குறைப்பதாக இருந்த வட்டி குறைப்பு, பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்
ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை
கடந்த ஒரு வாரமாக சரிந்திருந்த பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. பேங்கிங் இன்டக்ஸ் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மெட்டல், ஆயில் அண்ட் கேஸ், பவர் மற்றும் கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. மிட்கேப் 1.58 சதவீதமும் ஸ்மால் கேப் 0.78 சதவீதமும் உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 64.95 புள்ளிகள் ( 2.27 சதவீதம் ) உயர்ந்து 2,922.20 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 204.60 புள்ளிகள் ( 2.19 சதவீதம் ) உயர்ந்து 9,533.52 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் சத்யம் பங்குகளின் மதிப்பு 9.41 சதவீதம், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 7.26 சதவீதம், ரான்பாக்ஸி லேப் 7.03 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 6.35 சதவீதம், கிராசிம் 5.02 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆனால் டாடா மோட்டார்ஸ் 4.37 சதவீதம், மகிந்திரா அண்ட் மகிந்திரா 3.67 சதவீதம், மாருதி சுசுகி 2.32 சதவீதம் குறைந்திருந்தது. இன்று ஆசிய பங்கு சந்தைகள் கலந்து முடிந்திருந்தாலும், ஐரோப்பிய சந்தை ஏற்றத்துடன்தான் முடிந்திருக்கிறது.
Labels:
தகவல்,
பங்கு சந்தை நிலவரம்
பங்கு சந்தை சரிவால் 10 பிரபல நிறுவனங்கள் ஒரு வாரத்தில் இழந்தது ரூ.61,000 கோடி
இந்திய பங்கு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சரிவால், 10 பிரபல நிறுவனங்கள் ரூ.61,000 கோடி வரை சந்தை மூலதனத்தை இழந்திருக்கின்றன. 6 பொதுத்துறை நிறுவனங்களும் 4 தனியார் நிறுவனங்களும் மொத்தமாக போன வாரத்தில் இழந்த சந்தை மூலதனம் ரூ. 60,872 கோடி. இந்தியாவின் மதிப்புமிக்க கம்பெனி என்று பெயர் பெற்றுள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை மூலதனம் மட்டும் ரூ.21,600 கோடி குறைந்து ரூ.2,00,000 கோடிக்கும் கீழே சென்று விட்டது. கடந்த வெள்ளி அன்று முடிந்த பங்கு சந்தையுடன் கணக்கிட்டால், இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் என்று சொல்லப்படும் நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.11,02,154 கோடியில் இருந்து ரூ.10,41,283 கோடியாக குறைந்திருக்கிறது.முகேஷ் அம்பானியின் நிறுவன மதிப்பு ரூ. 2,12,345 கோடியில் இருந்து ரூ.1,90,745 கோடியாக குறைந்திருக்கிறது.இந்த சரிவிலிருந்து தப்பியது பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., என்ற சுரங்க நிறுவனம் மட்டுமே. அதன் சந்தை மூலதனம் ரூ.8,278 கோடி உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
பங்கு சந்தை
புதுவருடத்தில் இருந்து விமான கட்டணம் குறைகிறது
விமான பயணிகளுக்கு புத்தாண்டிற்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இந்திய விமான நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன.உள்நாட்டு விமான கட்டணம் குறைகிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி. கிங் ஃபிஷர் என்ற தனியார் விமான நிறுவனமும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் விமான கட்டணத்தை, வரும் ஜனவரியில் இருந்து குறைப்பதாக இப்போது அறிவித்திருக்கின்றன. விமானங்களில் பயன்படுத்தும் விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் இவர்கள் விமான கட்டணத்தை குறைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேர்மன் விஜய் மல்லையா வெளியிட்ட அறிக்கையில், விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் விமான கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்திருக்கிறார். விமான எரிபொருள் ( ஏ.டி.எஃப் ) விலை குறைந்திருப்பதால், எங்கள் கம்பெனி பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில் இருந்து இப்போது வரை, டில்லியில் ஏ.டி.எஃப்.,விலை 45.2 சதவீதமும், சென்னையில் 44.37 சதவீதமும் குறைந்திருக்கிறது. இதுவரை மற்ற விமான கம்பெனிகள் விமான கட்டண குறைப்பு பற்றி எதுவும் சொல்லாத நிலையில் கிங்ஃபிஷர் மற்றும் ஏர் இந்தியா மட்டுமே கட்டணத்தை ஜனவரியில் இருந்து குறைப்பதாக தெரிவித்திருக்கின்றன. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி முதல் வாரத்தில் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், ஜனவரி மத்தியில் இருந்து கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்
Subscribe to:
Posts (Atom)