
அடுத்த மாதத்தில் இருந்து, கார்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. குறிப்பாக, கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிப்பதற்காக, விலை குறைப்பு, தள்ளுபடி போன்ற திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து கார்களின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு குறித்து அறிவிக்க அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. டொயட்டா நிறுவனம், ஜனவரி முதல் தேதியில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயட்டா நிறுவன உதவி மேலாண்மை இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில், 'கடந்த மூன்று மாதங்களில் ரூபாய், டாலர் மாற்று மதிப்பு 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. சந்தை நிலைமை தற்போது கார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, விலை உயர்வு தவிர்க்க முடியாதது' என்றார். இருந்தாலும், இந்த விலை உயர்வு மிகவும் அதிக அளவில் இருக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மாருதி நிறுவன வட்டாரங்கள், 'சந்தை நிலவரத்தில் குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சி இல்லையெனில், கார் தயாரிப்பை குறைப்பதை தவிர வேறு வழி இல்லை' என்றன.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment