Monday, December 29, 2008

புதுவருடத்தில் இருந்து விமான கட்டணம் குறைகிறது

விமான பயணிகளுக்கு புத்தாண்டிற்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இந்திய விமான நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன.உள்நாட்டு விமான கட்டணம் குறைகிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி. கிங் ஃபிஷர் என்ற தனியார் விமான நிறுவனமும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் விமான கட்டணத்தை, வரும் ஜனவரியில் இருந்து குறைப்பதாக இப்போது அறிவித்திருக்கின்றன. விமானங்களில் பயன்படுத்தும் விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் இவர்கள் விமான கட்டணத்தை குறைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேர்மன் விஜய் மல்லையா வெளியிட்ட அறிக்கையில், விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் விமான கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்திருக்கிறார். விமான எரிபொருள் ( ஏ.டி.எஃப் ) விலை குறைந்திருப்பதால், எங்கள் கம்பெனி பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில் இருந்து இப்போது வரை, டில்லியில் ஏ.டி.எஃப்.,விலை 45.2 சதவீதமும், சென்னையில் 44.37 சதவீதமும் குறைந்திருக்கிறது. இதுவரை மற்ற விமான கம்பெனிகள் விமான கட்டண குறைப்பு பற்றி எதுவும் சொல்லாத நிலையில் கிங்ஃபிஷர் மற்றும் ஏர் இந்தியா மட்டுமே கட்டணத்தை ஜனவரியில் இருந்து குறைப்பதாக தெரிவித்திருக்கின்றன. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி முதல் வாரத்தில் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், ஜனவரி மத்தியில் இருந்து கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: