Saturday, December 19, 2009

காங்​கி​ரசுக்கு சோதனை "தெலங்​கானா'

ஆந்​திர மாநில முதல்​வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜ​சே​கர ரெட்​டிக்​குப் பிறகு அதி​கா​ரத்​தைக் கைப்​பற்​று​வது யார் என்​பது தொடர்​பான சர்ச்சை எழுந்து முதல்​வ​ராக ரோசய்யா தொடர்​வார் என அறி​விக்​கப்​பட்டு பிரச்னை ஓய்ந்​தி​ருந்த நிலை​யில்,​​ அங்கு "தனி தெலங்​கானா' விவ​கா​ரம் விஸ்​வ​ரூ​பம் எடுத்​துள்​ளது.​

÷1950}களின் தொடக்​கத்​தில் முதன்​மு​த​லாக நிலப்​பி​ர​புக்​க​ளுக்கு எதி​ராக மிகப்​பெ​ரிய விவ​சா​யி​கள் இயக்​கம் உரு​வா​னது.​ பின்​னர் தனி மாநி​லக் கோரிக்கை எழுந்​தது.​ அதன் பிறகு கடந்த 10 ஆண்​டு​க​ளில் அக்​கோ​ரிக்கை புதிய உத்​வே​கம் பெற்​றது.​

இந்​தக் காலத்​தில்​தான் மாநி​லங்​கள் மறு​சீ​ர​மைப்​புக் கமி​ஷன் கோரிக்கை வலுப்​பெ​றவே பிர​ணாப் முகர்ஜி தலை​மை​யி​லான கமிட்டி தனது அறிக்​கையை எல்.கே.அத்​வா​னி​யி​டம் அளித்​தது.​ அப்​போது மத்​திய உள்​துறை அமைச்​சர்,​​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்க முடி​யாது என்று கூறி நிரா​க​ரித்​து​விட்​டார்.​

காங்​கி​ரஸ் மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் தனி தெலங்​கானா கோரிக்கை பரிசீ​லிக்​கப்​ப​டும் என்று 2004}ம் ஆண்டு நடந்த தேர்த​லின்​போது காங்​கி​ரஸ் கட்சி தனது தேர்​தல் வாக்​கு​று​தி​யில் தெரி​வித்​தி​ருந்​தது.​ 2009}ம் ஆண்டு தேர்த​லின்​போ​தும் இதை காங்​கி​ரஸ் முன்​வைத்​துப் பிர​சா​ரம் செய்​தது.​ செகந்​த​ரா​பா​தில் நடந்த கூட்​டத்​தில் பேசிய காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்​தி​யும்,​​ "தனி தெலங்​கானா' கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​றுக் கொள்​வ​தா​கக் கூறி​னார்.​

÷எ​னி​னும் தனி தெலங்​கானா கோரிக்கை மீண்​டும் எழா​மல் பார்த்​துக் கொள்​வ​தாக முதல்​வர் ராஜ​சே​கர ரெட்டி காங்​கி​ரஸ் தலை​மைக்கு உறு​தி​ய​ளித்​த​து​டன் மிக​வும் சாமர்த்​தி​ய​மா​கச் செயல்​பட்டு இப்​பி​ரச்னை தலை​தூக்​கா​மல் பார்த்​துக் கொண்​டார்.​ தெலங்​கானா பிரச்னை குறித்து விவா​திக்க ரோசய்யா தலை​மை​யில் ஒரு கமிட்​டி​யை​யும் ஏற்​ப​டுத்​தி​னார்.​ தெலங்​கானா பகு​தி​யைச் சேர்ந்த சில​ருக்கு அமைச்​சர் பத​வி​யும் கொடுத்​தார்.​ இதை​ய​டுத்து பிரச்னை அமுங்​கிப் போய் இருந்​தது.​

மேலும் அர​சிய​லில் அதி​ருஷ்​டம் ராஜ​சே​கர ரெட்டி பக்​கம் இருந்​தது போலும்!​ அடுத்​த​டுத்து தேர்​தல்​க​ளில் தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி எதிர்​பார்த்த அளவு வெற்றி பெற​வில்லை.​ இது ராஜ​சே​கர ரெட்​டிக்​குச் சாத​க​மாக இருந்​த​தால் தெலங்​கானா பிரச்னை தலை​தூக்​க​வில்லை.​

​ 2004}ல் காங்​கி​ரஸ் கட்​சி​யு​டன் கூட்​டணி வைத்​தி​ருந்த தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி,​​ தெலங்​கானா விவ​கா​ரத்தை காங்​கி​ரஸ் கண்​டு​கொள்​ளா​த​தால் 2006}ல் அத​னு​ட​னான உறவை முறித்​துக் கொண்​டது.​ இதைத் தொடர்ந்து தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி எம்.பி.க்கள்,​​ எம்.எல்.ஏ.க்கள் தங்​கள் பத​வி​களை ராஜி​நாமா செய்​த​னர்.​ ஆனால்,​​ அதைத் தொடர்ந்து நடந்த இடைத்​தேர்த​லி​லும் அக்​கட்சி தோல்​வி​யையே சந்​தித்​தது.​ 2009}ம் ஆண்டு நடை​பெற்ற பொதுத் தேர்த​லில் 17 மக்​க​ள​வைத் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி 2 இடங்​க​ளில் மட்​டுமே வென்​றது.​ இதே​போல மாநி​லச் சட்​டப்​பே​ர​வைக்​கான தேர்த​லில் தெலங்​கானா பகு​தி​யில் 119 தொகு​தி​க​ளில் போட்​டி​யிட்டு வெறும் 10 தொகு​தி​க​ளையே அக் கட்சி கைப்​பற்​றி​யது.​

இத​னால் தனி தெலங்​கானா கோரிக்​கைக்கு மக்​க​ளி​டையே ஆத​ரவு இல்லை என்று சொல்​லி​விட முடி​யாது.​ தெலங்​கானா பகு​தி​யில் ரெட்​டி​கள்,​​ கம்​ம​வார் இன மக்​க​ளின் கை ஓங்​கி​யி​ருந்​தது.​ இத​னால் தனி தெலங்​கானா கோரிக்கை தேர்த​லின்​போது முக்​கி​யத்​து​வம் பெற​வில்லை.​ அடுத்​த​டுத்து தேர்​தல்​க​ளில் தோல்வி ஏற்​பட்​டதை அடுத்து ஹைத​ரா​பாத் நக​ராட்​சித் தேர்த​லில் போட்​டி​யி​டத் துணி​வில்​லாத நிலை​யில் கட்​சி​யையே கலைத்​து​வி​ட​லாமா என்ற யோச​ன​யில் இருந்​தார் அதன் நிறு​வ​ன​ரான கே.சந்​தி​ர​சே​கர ராவ்.​

ஆந்​திர மாநி​லத்​தில் ராஜ​சே​கர ரெட்டி மறை​வுக்​குப் பிறகு முதல்​வர் யார் என்ற சர்ச்சை எழுந்த நிலை​யில்,​​ அவ​ரது மகன் ஜெகன்​மோ​கன் ரெட்டி,​​ தனக்​குத்​தான் முதல்​வர் பதவி வேண்​டும் என்று பிடி​வா​தம் பிடித்த நிலை​யில் தாற்​கா​லிக முதல்​வ​ராக ரோசய்யா பொறுப்​பேற்​றார்.​ இதற்கு ஜெகன்​மோ​கன் ரெட்டி கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​தார்.​ இத​னால் ஆந்​திர அர​சிய​லில் திடீர் குழப்​பம் ஏற்​பட்​டது.​ நிலைமை விப​ரீ​த​மா​வதை உணர்ந்த காங்​கி​ரஸ் தலைமை ஜெகன்​மோ​கன் ரெட்​டி​யைச் சமா​தா​னப்​ப​டுத்தி ரோசய்யா முதல்​வ​ரா​கத் தொடர்ந்து நீடிப்​பார் என்று அறி​வித்​தது.​

இதே​ச​ம​யத்​தில் கர்​நா​டக மாநி​லம் பெல்​லா​ரி​யில் சுரங்​கத் தொழி​லில் ஈடு​பட்​டு​வந்த ரெட்டி சகோ​த​ரர்​கள் மீது சட்​ட​வி​ரோ​த​மா​கச் செயல்​பட்டு வந்​த​தான குற்​றச்​சாட்​டின் பேரில் சிபிஐ விசா​ரணை நடத்த மத்​திய அரசு உத்​த​ர​விட்​டது.​

​ பெல்​லாரி ரெட்டி சகோ​த​ரர்​கள் ஒய்.எஸ்.ராஜ​சே​கர ரெட்​டிக்கு மிக​வும் நெருக்​க​மாக இருந்​த​னர்.​ அவ​ரது மறை​வுக்​குப் பிறகு அந்த நெருக்​கம் ஜெகன்​மோ​கன் ரெட்​டி​யு​ட​னும் தொடர்ந்​தது.​ மேற்​கு​றிப்​பிட்ட இரண்டு சம்​ப​வங்​க​ளும் ஒன்​று​டன்​ஒன்று தொடர்பு இல்​லா​தது என்ற போதி​லும் இந்த நேரத்​தைப் பயன்​ப​டுத்தி தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி தலை​வர் கே.​ சந்​தி​ர​சே​கர ராவ்,​​ தெலங்​கானா பிரச்​னையை கையி​லெ​டுத்து அதற்​காக உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் அறி​வித்​தார்.​ ஆனால்,​​ தனி தெலங்​கானா கோரிக்​கைக்கு சிலர் எதிர்ப்​புத் தெரி​வித்​த​னர்.​ இத​னால் பிரச்னை விஸ்​வ​ரூ​பம் எடுத்​தது.​ ரோசய்​யா​வின் ஆட்​சிக்​குக் கெட்ட பெயரை ஏற்​ப​டுத்​த​வும்,​​ அவரை ஆட்​சியி​லி​ருந்து கீழே இறக்​க​வும் ஜெகன் மோகன் ஆத​ர​வா​ளர்​களே பிரச்​னை​யைப் பெரி​தாக்க நினைத்து இரு​த​ரப்​பி​ன​ரை​யும் உசுப்​பி​விட்​டி​ருக்​க​லாம் என்ற கருத்து உள்​ளது.​

ஜெகன்​மோ​கன் ரெட்​டியை முதல்​வ​ராக்க வேண்​டும் என்று கையெ​ழுத்து இயக்​கம் நடத்​தி​ய​வர்​களே தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கைக்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பத​வியை ராஜி​நாமா செய்ய முன்​வந்​துள்​ள​னர்.​ இதைத் தொடர்ந்து கட​லோர ஆந்​தி​ரப் பிர​தே​சம் மற்​றும் ராய​ல​சீ​மை​யைச் சேர்ந்த காங்​கி​ரஸ் எம்.எல்.ஏ.க்க​ளும்,​​ வேறு சில பகு​தி​க​ளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்க​ளும் பத​வியை ராஜி​நாமா செய்​யத் தயார் என அறி​வித்​துள்​ள​னர்.​

​ ​ தெலங்​கானா பிரச்​னை​யைச் சரி​வர கையாள மத்​தி​யில் காங்​கி​ரஸ் தலை​மை​யி​லான ஆளும் கட்சி தவ​றி​விட்​டது.​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்​றுக் கொள்​வ​தாக அறி​வித்த அரசு,​​ அத​னால் ஏற்​ப​டக்​கூ​டிய பின்​வி​ளை​வு​களை நினைத்​துப் பார்க்​கத் தவ​றி​விட்​டது.​ இந்த அறி​விப்பு வந்​த​வு​ட​னேயே அதற்கு எதிர்ப்​புக் கிளம்​பி​யது.​ தனி மாநி​லக் கோரிக்​கையை வலி​யு​றுத்தி சாகும்​வரை உண்​ணா​வி​ர​தம் இருந்த டி.ஆர்.எஸ்.​ கட்​சித் தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவை சமா​தா​னப்​ப​டுத்​தவே இந்த அறி​விப்பு என்று காங்​கி​ரஸ் சொல்​வதை ஏற்க முடி​யாது.​ ​ சந்​தி​ர​சே​கர ராவ் உண்​ணா​வி​ர​தம் இருந்​த​போதே தெலங்​கானா பற்றி முடிவு எடுப்​ப​தற்​கான முன்​மு​யற்​சி​யில் காங்​கி​ரஸ் இறங்​கி​யது.​ உட​ன​டி​யாக அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யு​மாறு ஆந்​திர முதல்​வ​ரைக் கேட்​டுக் கொண்​டது.​ மார்க்​சிஸ்ட் மற்​றும் எம்​ஐ​எம் கட்​சி​கள் தவிர மற்ற கட்​சி​கள் தெலங்​கானா கோரிக்​கையை ஆத​ரிக்க முன்​வந்​தன.​ இது தொடர்​பாக காங்​கி​ரஸ் கட்சி மாநி​லச் ​ சட்​டப்​பே​ர​வை​யில் தீர்​மா​னம் கொண்​டு​வர வேண்​டும் என்​றும் வலி​யு​றுத்​தின.​ ​(ஆனால்,​​ இரண்டு நாள்​க​ளுக்​குப் பிறகு இப் பிரச்னை தலை​கீ​ழாக மாறி​விட்​டது வேறு விஷ​யம்.)​

தெலங்​கானா மாநி​லக் கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​ப​தாக அறி​வித்த உட​னேயே உண்​ணா​வி​ர​தத்தை முடித்​துக் கொள்ள வேண்​டும் என்று சந்​தி​ர​சே​கர ராவை காங்​கி​ரஸ் வலி​யு​றுத்​தி​ய​தா​கத் தெரி​கி​றது.​ அதே​ச​ம​யத்​தில் தனி தெலங்​கானா மாநி​லம் அமைந்​தால் தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமி​தியை காங்​கி​ர​ஸý​டன் இணைக்க ராவ் உறுதி தெரி​வித்​த​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​

​ தெலங்​கானா விவ​கா​ரத்​தில் ஜெகன்​மோ​கன் ரெட்டி மற்​றும் அவ​ரது ஆத​ர​வா​ளர்​கள் எதிர்ப்​புத் தெரி​விப்​பார்​கள் என்று காங்​கி​ரஸ் சற்​றும் எதிர்​பார்க்​க​வில்லை.​ ரோசய்​யா​தான் முதல்​வ​ராக நீடிப்​பார் என்று காங்​கி​ரஸ் மேலி​டம் அறி​வித்​த​போது,​​ ​ ​ ஜெகன்​மோ​கன் ரெட்டி வெளிப்​ப​டை​யாக ஒப்​புக்​கொண்​டா​லும் மன​த​ள​வில் அதை ஏற்​றுக்​கொள்​ளத் தயா​ராக இல்லை.​ இந்​தச் சம​யத்​தில் தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்கை விஸ்​வ​ரூ​பம் எடுத்​த​போது அதற்கு ரெட்டி ஆத​ர​வா​ளர்​கள் எதிர்ப்பை வெளிப்​ப​டுத்​தி​னர்.​

​ தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை கொள்கை அள​வில் ஏற்​ப​தாக அவ​ச​ரப்​பட்டு அறி​வித்த மத்​திய அரசு,​​ இதே​போன்ற கோரிக்கை நாட்​டின் இதர பகு​தி​களி​லி​ருந்து வரும் என்​பதை எண்​ணிப்​பார்க்​கத் தவ​றி​விட்​டது.​ தெலங்​கானா பற்​றிய அறி​விப்பு வந்​த​வு​ட​னேயே கோர்க்கா ஜன​முக்தி மோர்ச்சா,​​ கோர்க்​கா​லாந்து தனி மாநி​லக் கோரிக்​கையை எழுப்​பி​யது.​ இதைத் தொடர்ந்து உ.பி.​ முதல்​வர் மாயா​வ​தி​யும்,​​ உ.பி.​ மாநி​லத்தை மூன்​றா​கப் பிரிக்க வேண்​டும் என்று கோரிக்கை எழுப்​பி​னார்.​

÷தனி தெலங்​கானா மாநி​லம் அமை​வதை அரசு கொள்கை அள​வில் ஏற்​ற​தை​ய​டுத்து நாட்​டின் இதர பகு​தி​யில் உள்​ள​வர்​கள் தனி மாநி​லக் கோரிக்​கையை எழுப்ப வேண்​டாம் என்று மத்​திய அமைச்​சர் பிர​ணாப் முகர்ஜி தெரி​வித்​துள்​ளார்.​ ஆனால்,​​ அர​சின் அறி​விப்பு வெளி​யான விதம் தவ​றான சமிக்​ஞையை ஏற்​ப​டுத்​தும் அபா​யம் உள்​ளது.​

அதா​வது ஆந்​தி​ரத்​தில் தனி மாநி​லக் கோரிக்​கையை வலி​யு​றுத்​திப் போராட்​டம்,​​ வன்​முறை நடந்​ததை அடுத்து நிலை​மை​யைச் சமா​ளிக்க அரசு தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்​கையை ஏற்​ப​தாக அறி​வித்​துள்​ளது.​ இனி வன்​முறை,​​ போராட்​டம் போன்​ற​வற்​றின் மூலம் கோரிக்​கை​களை வலி​யு​றுத்​தி​னால் அர​சைப் பணி​ய​வைத்​து​வி​ட​லாம் என்ற எண்​ணத்தை இது தோற்​று​வித்​து​விட்​டது.​ தற்​போ​தைய அர​சி​யல் சூழ்​நி​லை​யில் தெலங்​கானா தனி மாநி​லக் கோரிக்கை உறு​தி​மொ​ழியை நிறை​வேற்​று​வதா அல்​லது அதி​லி​ருந்து பின்​வாங்​கி​வி​டு​வது நல்​லதா என்​பது புரி​யா​மல் காங்​கி​ரஸ் உள்​ளது.​

÷2004}ம் ஆண்டு மத்​தி​யில் காங்​கி​ரஸ் தலை​மை​யி​லான அரசு அமைய ஆந்​தி​ரம் முக்​கிய கார​ண​மாக இருந்​தது.​ 2009}ம் ஆண்டு தேர்த​லில் காங்​கி​ரஸ் அதி​கா​ரத்​தைத் ​ தக்​க​வைத்​துக் கொள்​ள​வும் ஆந்​தி​ரம் உத​வி​யுள்​ளது.

இக்​கட்​டான இந்த நேரத்​தில் சரி​யான முடிவு எடுக்க ​ காங்​கி​ரஸ் தவ​றி​விட்​டால் இரண்டு பக்​க​மும் மக்​கள் ஆத​ரவை காங்​கி​ரஸ் இழந்​து​விட நேரி​டும்.​ இதைக் கவ​னத்​தில் கொண்டு காங்​கி​ரஸ் செயல்​பட வேண்​டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

பிள்​ளை​க​ளைக் கண்​கா​ணிப்​பார்​களா பெற்​றோர்​கள்?

தங்​கள் குழந்​தை​க​ளைப் பள்​ளி​க​ளில் சேர்ப்​ப​தோடு தங்​க​ளது கடமை முடிந்​து​ விட்​டது எனக் கரு​தா​மல் தங்​கள் பிள்​ளை​க​ளின் செயல்​பா​டு​க​ளைப் பெற்​றோர்​கள் கண்​கா​ணித்து வர​வேண்​டி​யது இன்​றைய காலத்​தின் கட்​டா​ய​மாக மாறி வரு​கி​றது.​

​ ​ தொடக்க நிலை​யைக் காட்​டி​லும் உயர் மற்​றும் மேல்​நிலை வகுப்​பு​க​ளில் பயி​லும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​பா​கப் பெற்​றோர்​கள் கவ​னத்​து​டன் கையாள வேண்​டும்.​ ஏனெ​னில் வளர்​இ​ளம் பரு​வத்​தில் உள்ள இவர்​க​ளின் ஒவ்​வொரு செய​லுமே அவர்​க​ளுக்​குச் சரி​யா​கப் படும் என்​ப​தால் இந்​தப் பரு​வத்​தில் அவர்​கள் மீது கண்​டிப்​பாக ஒரு கண் வைக்க வேண்​டும் என்​பதை யாரா​லும் மறுக்க முடி​யாது.​

​ ​ முன்​பெல்​லாம் பள்​ளி​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளைப் பார்த்​தால் மாண​வர்​க​ளுக்​குப் பயம் கலந்த மரி​யாதை வரு​வது இயல்​பாக இருந்​தது.​ அன்​றைய கால​கட்​டத்​தில் மாண​வர்​க​ளாக இருந்​த​வர்​கள் தற்​பொ​ழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின்​னர் தங்​க​ளின் இந்த உய​ரிய நிலைக்​குக் கார​ணம் ஆசி​ரி​யர்​கள்​தான் என்​பதை உணர்ந்து அவர்​க​ளுக்கு பல்​வேறு உத​வி​க​ளைச் செய்து வரு​வ​தை​யும்,​​ வீடு கட்​டிக் கொடுத்​துக் கொண்​டா​டி​ய​தை​யும் இன்​றைய ஒவ்​வோர் ஆசி​ரி​ய​ரும் ஆச்​ச​ரி​யத்​து​டன் பார்க்​கின்​ற​னர்.​

​ ​ ​ இன்றோ பெரும்​பா​லான மாண​வர்​கள் பள்​ளி​க​ளில்​கூட ஆசி​ரி​யர்​களை மதிப்​ப​தில்லை என்று ஆசி​ரி​யர் வட்​டா​ரங்​கள் வருத்​தத்​து​டன் தெரி​விக்​கின்​றன.​ கார​ணம் சினி​மா​வி​லும்,​​ தொலைக்​காட்சி நாட​கங்​க​ளி​லும் காமெடி நடி​கரை ஆசி​ரி​ய​ரா​கவோ,​​ பேரா​சி​ரி​ய​ரா​கவோ காட்டி,​​ அவர்​க​ளைக் கொண்டு ஆசி​ரி​யர்​களை எவ்​வ​ளவு மோச​மா​கச் சித்​தி​ரிக்க வேண்​டுமோ அந்த அள​வுக்கு மோச​மா​கக் காட்​டு​கின்​ற​னர்.​

​ ​ இக்​காட்​சி​க​ளைப் பார்த்​து​விட்டு மறு​நாள் பள்​ளிக்கு வரும் மாண​வ​னுக்​குத் தாமும் அதே​போல் செய்​தால் என்ன என்று எண்​ணத் தோன்​று​கி​றது.​ ​ விளைவு...​ மதிக்​கத்​தக்​க​வர் அல்ல ஆசி​ரி​யர் என்ற எண்​ணம்​தான் அவ​னுள் வளர்​கி​றது.​

இது சாதா​ர​ணம்.​ இப்​படி உள்​ளூர் ஊட​கங்​க​ளும்,​​ வெளி​நாட்டு ஊட​கங்​க​ளும் போட்டி போட்​டுக் காட்​டும் காட்​சி​கள் மாண​வ​னின் மன​தில் நஞ்சை விதைக்​கின்​றன.​ ​ ஊட​கங்​கள் வரு​வ​தற்கு முந்​தைய கால​கட்​டத்​தில் ஒரே பள்​ளி​யில் பயி​லும் மாணவ,​​ மாண​வி​கள் ஒரு​வ​ருக்​கொ​ரு​வர் பேசு​வ​தைத் தாங்​க​ளா​கவே தவிர்த்து வந்​த​னர்.​ ஆனால் இன்றோ ஊட​கங்​கள் எப்​ப​டிச் சந்​திக்​க​லாம்..​ அதற்​கான வழி​மு​றை​கள் என்ன...​ மாட்​டிக் கொண்​டால் தப்​பிப்​ப​தற்​கான வழி​கள் என்ன என்று அத்​த​னை​யும் பட்​டி​யல் போட்​டுக் ​ காண்​பிக்​கின்​றன.​ இப்​ப​டிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத்​தால் பாவம் அவர்​கள் என்ன செய்​வார்​கள்.​

​ ​ இப்​படி ஊடக வெளிச்​சத்​தில் கரைந்து பள்​ளி​க​ளில் வைத்தே மது அருந்​திய மாண​வர்​க​ளை​யும்,​​ ​ இன மோதல்​க​ளில் ஈடு​பட்ட மாண​வர்​க​ளை​யும்,​​ ​ பெண் ஆசி​ரி​யை​க​ளைக் கேலி செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ சக மாண​வி​க​ளைக் கிண்​டல் செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ ​ தேவை​யற்ற புகைப்​ப​டம் எடுத்த மாண​வர்​க​ளை​யும்,​​ படிக்​கா​மல் சுற்​றித்​தி​ரி​யும் மாண​வர்​க​ளை​யும் ஆசி​ரி​யர்​கள் தண்​டிக்க முடி​யாத நிலையே இன்று நில​வு​கி​றது.​

​ ​ அத​னை​யும் மீறித் தண்​டனை கொடுத்​தால் கல்​வித்​துறை அதி​கா​ரி​க​ளின் விசா​ர​ணைக்கு அந்த ஆசி​ரி​யர் உள்​பட வேண்​டும்.​ ​ இத​னைக்​கூட பொறுத்​துக் கொள்​ள​லாம்.​ ஆனால் தண்​டனை கொடுக்​கப்​பட்ட மாண​வர்​க​ளின் பெற்​றோர்​கள்,​​ ஏதோ,​​ இவ​ரா​வது தங்​க​ளது மகன் மீது பற்​றுக் கொண்டு தீய வழி​யில் செல்​லா​மல் திருத்​தி​னாரே என்று மகிழ்ச்சி கொள்​வ​தில்லை.​ மாறாக என் மகனை நீங்​கள் ​(நீ)​ எவ்​வாறு கண்​டிக்​க​லாம் என ஆசி​ரி​யர்​களை நோக்கி அம்​பினை எய்​வ​து​தான் ஆசி​ரி​யர்​க​ளால் ஏற்​றுக் கொள்ள முடி​யா​மல் இருப்​ப​தாக ஆசி​ரி​யர்​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​

​ ​ எனவே நடக்​கும் நிகழ்​வு​களை அமை​தி​யாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்​பதை தவிர ஆசி​ரி​யர்​க​ளுக்கு வேறு ஒன்​றும் செய்ய முடி​ய​வில்லை.​

நல்ல மதிப்​பெண் எடுக்க வேண்​டும் என்​ப​தற்​குக்​கூட மாண​வர்​களை ஆசி​ரி​யர்​கள் கண்​டிக்க முடி​ய​வில்லை.​ கார​ணம் இன்​றைய மாண​வர்​கள் எளி​தில் உணர்ச்​சி​வ​சப்​ப​டக்​கூ​டி​ய​வர்​க​ளாக இருக்​கின்​ற​னர்.

​ இவ்​வி​ஷ​யத்​தில் மாண​வர்​களை விட மாண​வி​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​குப் பெரும் அவ​தி​யுள்​ளது.​ இப்​ப​டிப் பள்​ளி​க​ளில் மனம் போன போக்​கில் நடந்து வரும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்கு இருக்​கும் நடை​மு​றைச் ​ சிக்​கல்​களை நாளி​தழ்​கள் மற்​றும் செய்தி ஊட​கங்​க​ளின் ​ மூலம் நன்கு தெரிந்து கொள்​ளும் மாண​வர்​கள்,​​ அதைத் தங்​க​ளுக்​குச் சாத​க​மாக்கி முடிந்​த​வரை தப்​பித்து வரு​கின்​ற​னர்.​

​ ​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் ஏரா​ள​மான பணம் கொடுத்​துத் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​கள்,​​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​க​ளோடு தொடர்​பு​கொண்டு விசா​ரித்து வரு​வ​தால் அங்கு மாண​வர்​கள் செய்​யும் தவறு குறைக்​கப்​ப​டு​கி​றது.​

ஆனால்,​​ அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​க​ளில் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​க​ளில் பலர் சேர்க்க வரு​வ​தோடு தமது கடமை முடிந்​து​விட்​ட​தா​கக் கருதி பின்​னர் மாற்​றுச்​சான்​றி​தழ் வாங்​கு​வ​தற்​குத்​தான் வரு​கின்​ற​னர்.​

​ தங்​க​ளது மகன் அல்​லது மகள் பள்​ளிக்கு ஒழுங்​கா​கச் செல்​கி​றார்​களா?​ இல்​லையா?​ என்​பது கூட பல பெற்​றோர்​க​ளுக்​குத் தெரி​வ​தில்லை.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் சில​ருக்​குத் தங்​கள் பிள்​ளை​கள் எந்த வகுப்​பில் படிக்​கி​றார்​கள் என்​ப​து​கூ​டத் தெரி​வ​தில்லை என்​ப​து​தான் உச்​ச​கட்ட வேதனை.​

​ ​ இன்​றைய கால​நிலை மாற்​ற​மும்,​​ ஊட​கங்​க​ளின் போக்​கும் எந்த அள​வுக்கு மாண​வர்​க​ளின் நல​னைப் பாதித்து வரு​கின்​றன என்​பதைப் பெற்​றோர்​கள் உணர்ந்து,​​ அவர்​க​ளைத் தொடர்ந்து கண்​கா​ணிக்க வேண்​டும்.​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​கள்,​​ சக மாண​வர்​க​ளின் பெற்​றோர்​க​ளு​டன் தொடர்​பு​கொண்டு தனது பிள்​ளை​யின் நிலை என்ன என்​பதை அறிந்து கொள்ள முற்​பட வேண்​டும்.​

​ ​ எழுத்​த​றி​வித்​த​வனை இறை​வ​னா​கக்​கூட கருத வேண்​டாம்.​ மனி​த​னா​கக் கரு​தித் தங்​க​ளது பிள்​ளை​க​ளின் எதிர்​கால ​ வாழ்க்​கைக்​கா​கத்​தான் ஆசி​ரி​யர் செயல்​ப​டு​கி​றார் என்ற எண்​ணத்​து​டன் ஒவ்​வொரு பெற்​றோ​ரும் செயல்​பட்​டால் எதிர்​கால இந்​தி​யா​வின் நம்​பிக்கை நட்​சத்​தி​ர​மாக ஒவ்​வொ​ரு​வ​ரின் மக​னும்,​​ மக​ளும் உயர்​வார்​கள்.​ பெற்​றோர்​கள் சற்று சிந்​திப்​பார்​களா?
கட்டுரையாளர் : வி.​ குமா​ர​மு​ரு​கன்
நன்றி : தினமணி

2018ல் காசோலைக்கு கு‌ட்பை: பிரிட்டன் அரசு

வரும் 2018ம் ஆண்டு முதல், காசோலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப் படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு முறைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக காசோலை பயன்படுத்தும் முறை சமீப காலமாக குறைந்து வருகிறது. மேலும், பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இதனால், காசோலை பயன்படுத்தும் முறை 2018ம் ஆண்டில் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விடும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்மீ கூறுகையில், '21ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப சூழலில் பேப்பர் மூலம் பணம் செலுத்தும் முறையை விட பல திறன்மிக்க வசதிகள் சாத்தியப்படும் என்று கூறினார். மேலும், பொருளாதாரத் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு வாய்ப்பு' என்றும் அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடு: லீச்டென்ஸ்டீன் முதலிடம்

தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் குட்டி நாடான லீச்டென்ஸ்டீன் முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகின் டாப் 10 தனிநபர் உற்பத்தி கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே உள்ள லீச்டென்ஸ்டீன் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு மக்கள் தொகை குறைவாகாவும், தொழிற்சாலைகள் அதிகமாகும் இடம் பிடித்துள்ளன. இதனால், அங்கு வாழும் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 55.46 லட்சம் ரூபாயாக உள்ளது. 48.64 லட்சம் ரூபாய் தனிநபர் உற்பத்தியுடன் கத்தார் இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய தன்னாட்சி நகரான லக்சம்பெர்க் 3வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்காவுக்கு 10வது இடமே கிடைத்துள்ளது.
நன்றி : தினமலர்