தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதோடு தங்களது கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளைப் பெற்றோர்கள் கண்காணித்து வரவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக மாறி வருகிறது.
தொடக்க நிலையைக் காட்டிலும் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களைக் கண்டிப்பாகப் பெற்றோர்கள் கவனத்துடன் கையாள வேண்டும். ஏனெனில் வளர்இளம் பருவத்தில் உள்ள இவர்களின் ஒவ்வொரு செயலுமே அவர்களுக்குச் சரியாகப் படும் என்பதால் இந்தப் பருவத்தில் அவர்கள் மீது கண்டிப்பாக ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
முன்பெல்லாம் பள்ளிகளில் ஆசிரியர்களைப் பார்த்தால் மாணவர்களுக்குப் பயம் கலந்த மரியாதை வருவது இயல்பாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் தற்பொழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின்னர் தங்களின் இந்த உயரிய நிலைக்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்பதை உணர்ந்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருவதையும், வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டாடியதையும் இன்றைய ஒவ்வோர் ஆசிரியரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
இன்றோ பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளில்கூட ஆசிரியர்களை மதிப்பதில்லை என்று ஆசிரியர் வட்டாரங்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றன. காரணம் சினிமாவிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் காமெடி நடிகரை ஆசிரியராகவோ, பேராசிரியராகவோ காட்டி, அவர்களைக் கொண்டு ஆசிரியர்களை எவ்வளவு மோசமாகச் சித்திரிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மோசமாகக் காட்டுகின்றனர்.
இக்காட்சிகளைப் பார்த்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவனுக்குத் தாமும் அதேபோல் செய்தால் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. விளைவு... மதிக்கத்தக்கவர் அல்ல ஆசிரியர் என்ற எண்ணம்தான் அவனுள் வளர்கிறது.
இது சாதாரணம். இப்படி உள்ளூர் ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் போட்டி போட்டுக் காட்டும் காட்சிகள் மாணவனின் மனதில் நஞ்சை விதைக்கின்றன. ஊடகங்கள் வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரே பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் பேசுவதைத் தாங்களாகவே தவிர்த்து வந்தனர். ஆனால் இன்றோ ஊடகங்கள் எப்படிச் சந்திக்கலாம்.. அதற்கான வழிமுறைகள் என்ன... மாட்டிக் கொண்டால் தப்பிப்பதற்கான வழிகள் என்ன என்று அத்தனையும் பட்டியல் போட்டுக் காண்பிக்கின்றன. இப்படிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத்தால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.
இப்படி ஊடக வெளிச்சத்தில் கரைந்து பள்ளிகளில் வைத்தே மது அருந்திய மாணவர்களையும், இன மோதல்களில் ஈடுபட்ட மாணவர்களையும், பெண் ஆசிரியைகளைக் கேலி செய்த மாணவர்களையும், சக மாணவிகளைக் கிண்டல் செய்த மாணவர்களையும், தேவையற்ற புகைப்படம் எடுத்த மாணவர்களையும், படிக்காமல் சுற்றித்திரியும் மாணவர்களையும் ஆசிரியர்கள் தண்டிக்க முடியாத நிலையே இன்று நிலவுகிறது.
அதனையும் மீறித் தண்டனை கொடுத்தால் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு அந்த ஆசிரியர் உள்பட வேண்டும். இதனைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தண்டனை கொடுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், ஏதோ, இவராவது தங்களது மகன் மீது பற்றுக் கொண்டு தீய வழியில் செல்லாமல் திருத்தினாரே என்று மகிழ்ச்சி கொள்வதில்லை. மாறாக என் மகனை நீங்கள் (நீ) எவ்வாறு கண்டிக்கலாம் என ஆசிரியர்களை நோக்கி அம்பினை எய்வதுதான் ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதை தவிர ஆசிரியர்களுக்கு வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்குக்கூட மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியவில்லை. காரணம் இன்றைய மாணவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
இவ்விஷயத்தில் மாணவர்களை விட மாணவிகளைக் கண்டிப்பதில் ஆசிரியர்களுக்குப் பெரும் அவதியுள்ளது. இப்படிப் பள்ளிகளில் மனம் போன போக்கில் நடந்து வரும் மாணவர்களைக் கண்டிப்பதில் ஆசிரியர்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் மூலம் நன்கு தெரிந்து கொள்ளும் மாணவர்கள், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி முடிந்தவரை தப்பித்து வருகின்றனர்.
மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான பணம் கொடுத்துத் தங்களது பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள், தொடர்ந்து பள்ளிகளின் ஆசிரியர்களோடு தொடர்புகொண்டு விசாரித்து வருவதால் அங்கு மாணவர்கள் செய்யும் தவறு குறைக்கப்படுகிறது.
ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களில் பலர் சேர்க்க வருவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாகக் கருதி பின்னர் மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்குத்தான் வருகின்றனர்.
தங்களது மகன் அல்லது மகள் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்கிறார்களா? இல்லையா? என்பது கூட பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சிலருக்குத் தங்கள் பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பதுகூடத் தெரிவதில்லை என்பதுதான் உச்சகட்ட வேதனை.
இன்றைய காலநிலை மாற்றமும், ஊடகங்களின் போக்கும் எந்த அளவுக்கு மாணவர்களின் நலனைப் பாதித்து வருகின்றன என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து பள்ளிகளின் ஆசிரியர்கள், சக மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு தனது பிள்ளையின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்.
எழுத்தறிவித்தவனை இறைவனாகக்கூட கருத வேண்டாம். மனிதனாகக் கருதித் தங்களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காகத்தான் ஆசிரியர் செயல்படுகிறார் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒவ்வொருவரின் மகனும், மகளும் உயர்வார்கள். பெற்றோர்கள் சற்று சிந்திப்பார்களா?
கட்டுரையாளர் : வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment