சில தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் ஆட்சியரிடம் மனு கொடுக்க, அவர் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டதாகவும், இதையடுத்து, கட்டணம் உயர்த்தப்பட்ட சில தனியார் பேருந்துகளில் மீண்டும் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி ஒன்று கண்ணில்பட்டது.
அப்போது, அரசுப் பேருந்துகளில் முறையான அறிவிப்பின்றி சில மாதங்களாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது நினைவுக்கு வந்தது. ஆட்சியரிடம் மனு கொடுத்ததும், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் குறைக்கப்படுகிறது. ஆனால், பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள் என பல்வேறு தரப்பினரும் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசுப் பேருந்துகளில் ஏற்றப்பட்ட கட்டணங்கள் இதுவரை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
வாக்குகள் மீது இருக்கும் அச்சம்கூட வாக்காளர்களிடம் தங்களுக்கு இல்லை என்பதை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலின்போது ஆட்சியாளர்கள் நிரூபித்ததை மக்கள் அறிவர். பொதுமக்கள் மீது தேர்தலுக்கு உள்ள இரக்கம்கூட ஆட்சியாளர்களிடம் இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
சில வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளில் அதிகாரிகளின் நாளொரு உத்தரவால், பொழுதொரு கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, எளியோர் பாதிக்கப்படுவது ஆட்சியாளர்களின் பார்வைக்குத் தெரியாத பகல் நிலா.
வரும் துன்பங்களைச் சிறிது காலம் பொறுத்துக் கொண்டால் பின்பு அதுவே பழகிவிடும் என்பதுபோல ஏற்றப்பட்ட கட்டணங்கள் பயணிகளுக்குப் பழகிவிட்டன.
போக்குவரத்தைப் பொறுத்தவரை தனியாரின் சேவை அரசின் சேவையைவிட திருப்திகரமாக உள்ளது என்பதே பெரும்பான்மையான பொதுமக்களின் கருத்து.
நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடில்லாமல் தனியார் பேருந்துகள் எப்போதும் பளபளப்பும், சுறுசுறுப்பும் மாறாதவை. ஆனால், அரசுப் பேருந்துகளோ நகருக்குள்ளும், பெரு நகரங்களுக்கு இடையேயும் இயக்கப்படும் பேருந்துகள் பளபளப்பு, தாழ்தளம் என பல்வேறு வசதிகள் கொண்டவை. கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் நிலைமையோ டெபாசிட் இழந்த வேட்பாளரின் நிலைமைபோல மிகவும் பரிதாபம்.
மழைக்காலங்களில் ஒழுகுதல், குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் தேநீர் குடித்தபடி உலக நடப்பைப் பேசிக் கொண்டிருக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள், இந்த வழித்தடத்தில் செல்லாது, நிறுத்தங்களில் நிற்காது என குரல் உயர்த்தும் அறிவிப்புகள்...இவையெல்லாம் அரசு பேருந்துகளில் பிரசித்தம். தனியார் பேருந்துகளிலோ இதுபோன்ற குறைகள் எண்பது சதவிகிதம் இல்லை என்றே கூறலாம்.
பயணிகளின் நிலைமை, வயது போன்றவற்றை அனுசரித்து நிறுத்தங்கள் இல்லாத இடங்களில்கூட இறக்கிவிடுதல், அனைத்து நிறுத்தங்களில் நின்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைதல் போன்றவை தனியார் பேருந்துகளின் கூடுதல் பலம்.
மற்ற விஷயங்களில் எப்படியோ, அரசு பேருந்துகள் விஷயத்தில் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்பதே உண்மை என்பதை தென் மாவட்ட மக்கள் அறிவர்.
ஒட்டடை, அகற்றப்படாத குப்பைக் கூளங்கள், உடைந்த ஜன்னல் கண்ணாடிகள், நசுங்கிய படிக்கட்டுகள், கிழிந்த இருக்கைகள்...என சில அரசுப் பேருந்துகளின் அவலங்கள் சொல்லில் அடங்காதவை.
சில பேருந்துகளில் சிலந்திகள் போன்ற சின்னச்சின்ன ஜந்துக்கள் டிக்கெட்டும் எடுக்காமல், பஸ் பாஸýம் இல்லாமல் பயணிப்பதைப் பார்த்தால் பயணிகளுக்குப் பொறாமைகூட உண்டாகலாம். வடக்கில் ஓடி வயதாகித் தேய்ந்த பல பேருந்துகள் தெற்கில் இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இருப்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
மேலும், அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்த நகர பேருந்துகளை தாழ்தளப் பேருந்துகள் ஓரங்கட்டி விட்டதால், பயணிகள் வேறுவழியின்றி தாழ்தளப் பேருந்துகளில்தான் செல்ல வேண்டிய நிர்பந்தம். ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதேநிலைதான்.
தனியாரா, அரசா என பொதுமக்கள் அந்தநாள்தொட்டு இந்தநாள்வரை குழம்பித் தவிக்கலாம். ஆனால், அரசோ தெளிவாகவே உள்ளது. இல்லையெனில், அரசுப் பேருந்துகளில் கட்டணம் ஒன்றிரண்டு ரூபாய்கள் உயர்த்தப்பட்டதற்காகப் பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டித்தர மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு தனியாரைத் தேர்வு செய்யுமா அரசு?
கட்டுரையாளர் :மா. ஆறுமுக கண்ணன்
நன்றி : தினமணி