Wednesday, April 15, 2009

பைக் விற்பனையில் இரண்டாவது இடத்தை நெருங்குகிறது டி.வி.எஸ்.

இந்தியாவின் பைக் விற்பனையில் முதலிடத்தை ஹீரோ ஹோண்டா நிரந்தரமாக பிடித்திருந்தாலும், இரண்டாவது இடத்தை பிடிக்க தான் பஜாஜ் மற்றும் டி.வி.எஸ்., இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருந்தாலும் கடந்த வருடம் வரை பஜாஜூக்கும் டி.வி.எஸ்.ஸூக்குமிடையே விற்பனையில் அதிக இடைவெளி இருந்து வந்தது. இந்த வருடத்தில் அந்த இடைவெளி சுருங்கி இருக்கிறது. இந்தியாவில் பைக் விற்பனையில் 49 சதவீத மார்க்கெட் ஷேரை வைத்துக்கொண்டு தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ ஹோண்டா இருந்து வருகிறது. 2007 - 08 நிதி ஆண்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த பஜாஜ் மற்றும் டி.வி.எஸ்.நிறுவனங்களுக்கிடையே இருந்த இடைவெளி 5,27,000 பைக்குகளாக இருந்தது. அது 2008 - 09 நிதி ஆண்டில் 1,49,000 ஆக குறைந்திருக்கிறது. அதாவது 2007 - 08 ல் பஜாஜ் ஆட்டோவுக்கு 23 சதவீத மார்க்கெட் ஷேரும், டி.வி.எஸ்.ஸூக்கு 16 சதவீத மார்க்கெட் ஷேரும் இருந்தது. அது, 2008 - 09 ல் பஜாஜூக்கு 17 சதவீதமும் டி.வி.எஸ்.ஸூக்கு 15 சதவீதமுமாக குறைந்திருக்கிறது. 2008 - 09 ல் டி.வி.எஸ்.ஸின் விற்பனை அப்படி ஒன்றும் அதிகரிக்கவில்லை என்றாலும், பஜாஜின் விற்பனை பெருமளவில் சரிந்திருப்பதால், இரு நிறுவனங்களுக்குமிடையே இருந்து வந்த இடைவெளி குறைந்து விட்டது. பஜாஜின் விற்பனை 2008 - 09 ல் 12.8 லட்சம் பைக்குகள் குறைந்திருக்கிறது. அதாவது 23 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. டி.வி.எஸ்.ஸின் விற்பனையும் குறைந்திருக்கிறதுதான். ஆனால் அது வெறும் 1.36 சதவீதமே குறைவு.
நன்றி : தினமலர்


15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, கம்பெனியை நடத்த முடியுமா முடியாதா என்று திணறிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கல். அதன் சில மாடல் கார்கள் தீ பிடிக்கின்றன என்று வந்த புகார்களை அடுத்து, அது சுமார் 15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது. ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே இம்பாலா, மான்ட கார்லோ, புய்க் ரீகல், மற்றும் போன்டாய்க் கிராண்ட் பிரிக்ஸ் மாடல் கார்களின் இஞ்சினில் தீ பிடிக்கின்றன என்று வந்த புகார்களை அடுத்து, இந்த வகை மாடல்களின் 14,97,516 கார்களை அது திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க ஹைவே டிராபிக் சேப்டி அட்மினிஸ்டிரேஷனிடம் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. திரும்ப பெறும் வேலைகள் அடுத்த மாதம் துவங்கும் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. இஞ்சினில் உள்ள எக்ஸ்ஹாஸ்ட் மேனிஃபோல்டில் ஆயில் தங்கி, அது சூடு தாங்காமல் லேசாக தீ பிடித்து, பின்னர் அது மற்ற இடங்களுக்கு பரவி விடுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்த காரணங்களுக்காக மேலே குறிப்பிட்ட கார்கள் திரும்ப பெறப்படுவதாக அது தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


நன்கு உயர்ந்தது பங்கு சந்தை

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பெரும் பங்களிப்பால் இன்று பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை ஏற்பட்டது. சென்செக்ஸ் 11 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,500 புள்ளிகளை ஒட்டியும் சென்று முடிந்திருக்கிறது. இன்ஃராஸ்டரக்சர், பார்மா, சிமென்ட், மெட்டல் மற்றும் குறிப்பிட்ட ஆயில் அண்ட் கேஸ் நிறுவன பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டதால் நிப்டியின் டி.எம்.ஏ., ( டெய்லி மூவிங் ஆவரேஜ் ) 200 ஐ தாண்டி விட்டது. நிப்டி 200 டி.எம்.ஏ.,ஐ தாண்டியிருப்பது அதிக மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்றார் பிஎஸ்பிஎல்இந்தியா.காமின் சி.இ.ஓ., விஜய் பம்ப்வாணி. மும்பை பங்கு சந்தையில் இன்று 11,337.75 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 317.51 புள்ளிகள் ( 2.9 சதவீதம் ) உயர்ந்து 11,284.73 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் 3,497.55 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த நிப்டி, வர்த்தக முடிவில் 101.55 புள்ளிகள் ( 3 சதவீதம் ) உயர்ந்து 3,484.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் தான் அதிகம் வர்த்தகம் ஆனது. இன்று மிட்கேப் இன்டக்ஸ் 3.95 சதவீதமும், ஸ்மால்கேப் இன்டக்ஸ் 5.32 சதவீதமும் உயர்ந்திருந்தது. மொத்தமாக கடந்த 8 வர்த்தக நாட்களில் மிட்கேப் இன்டக்ஸ் 25 சதவீதமும், ஸ்மால்கேப் இன்டக்ஸ் 29 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இன்றைய வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட்டிருந்தனர். இன்று மொத்தம் ரூ.1,00,893.68 கோடிக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப்பிறகு இன்று மீண்டும் வர்த்தகம் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் நடந்திருக்கிறது. செப்டம்பர் 25, 2008க்குப்பின் இன்று தான் இவ்வளவு அதிகமான தொகைக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் லாபம் சம்பாதித்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பெல், எஸ்.பி.ஐ., என்டிபிசி, பார்தி ஏர்டெல், டிஎல்எஃப், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவையே.

நன்றி : தினமலர்



'ஆமாம்... விமானிகள் தூங்கியது உண்மைதான்!'-ஒரு பகீர்

அடுத்த முறை நீங்கள் ப்ளைட்டில் ஏறும்போதே, விமானிகள் நன்றாக ரெஸ்ட் எடுத்து பிரெஷ்ஷாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
காரணம்...?
பணியிலிருக்கும் போதே இந்திய விமானிகள் இருவரும் கேபினில் தூங்கி விடுவது உண்மைதான் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் ஒரு குண்டை வீசியிருக்கிறது. குறிப்பாக நெடுந்தூர விமானப் பயணங்களின் போது இதுபோல அடிக்கடி நடப்பதாகவும், விபத்துக்களுக்கு இதுவும் முக்கிய காரணம்தான் என்றும் ஒப்புக் கொண்டுள்ளது இந்த அரசு அமைப்பு. கடந்த ஆண்டு ஜெப்பூர் - மும்பை மார்க்கத்தில் பறந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இப்படி தூக்கக் கலக்கத்தில்தான் இரு விமானிகளுமே தரையிறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு பறந்து கொண்டே இருந்தார்களாம். சிறிது நேரத்தில் அந்த விமானம் துபாய் மார்க்கத்தில் பறந்து கொண்டிருந்ததாம்! கோவா தரைக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் அவசரமாக அலாரத்தை ஒலிக்க விட்டு விமானிகளை எழுப்பிய பிறகுதான், பதறிக் கொண்டு விமானத்தைத் திருப்பிக் கொண்டு வந்துள்ளனர்.இப்படி இறங்க வேண்டிய விமான நிலையத்தை விட்டுவிட்டு வேறு விமான தளத்துக்கு விமானங்கள் போவது இது முதல்முறை அல்லவாம். இதனால் எல்லை மீறி விமானம் பயணிப்பதாக பாதுகாப்புத் துறையினரும் பதறியடித்தபடி, விமான எதிர்ப்பு கருவிகளை உஷார்படுத்த வேண்டி வருகிறதாம். எனவே இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு விமான நிலைய தரைக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் (Directorate General of Civil Aviation).இதன்படி இனி ஒவ்வொரு விமானியும் நன்கு தூங்கி ரெஸ்ட் எடுத்துள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அலுவலர்கள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை விமானிகளை இன்டர்காம் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களது விழிப்பணர்வை சோதிக்க வேண்டுமாம். அதேபோல அறிவிப்புகள் குறித்த ஒலிபெருக்கியை சத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் இறங்க வேண்டிய வகையில் வழித்தடங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பல இடை நிறுத்தங்கள் இருந்தால், அதில் இதுபோன்ற பிரச்சினைகள் வருமாம்.
நன்றி : தட்ஸ்தமிழ்

1,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது இ-பே

ஆன்லைன் ஏல நிறுவனமான இ-பே, 1,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டிருக்கிறது. அதாவது அவர்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக நிர்வாகத்தை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தவிர ஆயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்களும் வேலை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். ஆட் குறைப்பு வேலையில் ஈடுபட்டு வரும் இ-பே நிறுவனம், இன்னொரு ஆன்லைன் பேமென்ட் நிறுவனமான ' பில் மி லேட்டர் ' ஐயும் வாங்க திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே இ-பே நிறுவனம், 390 மில்லியன் டாலர்கள் கொடுத்து டென்மார்க்கை சேர்ந்த இரண்டு கிளாசிஃபைட் விளம்பர வெப்சைட்களை வாங்கியிருக்கிறது. இதுதவிர பே பால் என்ற நிறுவனமும் இ-பே யிடம் தான் இருக்கிறது.
நன்றி : தினமலர்


கடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்த்திருக்கிறோம் : இன்போசிஸ்

பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் வேளையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், கடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலையில் சேர்த்திருக்கிறது. 5,000 பேரை புதிதாக சேர்த்திருந்தாலும், அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,772 பேர் மட்டுமே கூடியிருக்கிறார்கள் என்றும் மீதி பேர் போய் விட்டார்கள் அல்லது அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் இன்போசிஸ் சொல்லியிருக்கிறது. மார்ச் 31,2009 கணக்குப்படி, இன்போசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் மொத்தம் 1,04,850 ஊழியர்கள் பணியாற்று வதாக தெரிவித்திருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டில் மொத்தமாக அது 28,231 ஊழியர்களை புதிதாக சேர்த்திருந்தாலும், வெளியே சென்றவர்கள் போக மீதி 13,663 பேர் அவர்களது ஊழியர்கள் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார்கள். இன்போசிஸின் ஹெச்ஆர்டி மற்றும் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் பிரிவின் தலைவர் மோகன்தாஸ் பை இதனை தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர்



இன்போசிஸின் நான்காவது காலாண்டு நிகர லாபம் 29 சதவீதம் உயர்வு

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸின் நான்காவது காலாண்டு நிகர லாபம், கடந்த வருட நான்காவது காலாண்டுடன் ஒப்பிட்டால் 29 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் அந்த நிறுவனம் ரூ.1,613 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிட்டால், இது 29 சதவீதம் அதிகம். நிகல லாபம் உயர்ந்திருப்பதைப்போலவே அதன் மொத்த விற்பனையும் 24 சதவீதம் அதிகரித்து ரூ.5,635 கோடிக்கு நடந்திருக்கிறது. வரி, தேய்மானம் போன்றவைகளுக்கு முந்தைய லாபமும் 26 சதவீதம் அதிகரித்து ரூ.1,663 கோடி கிடைத்திருக்கிறது. ஆனால், கடந்த வருட நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும் போது உயர்ந்திருக்கும் நிகர லாபம், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 1.7 சதவீதம் குறைந்திருக்கிறது. அதன் மொத்த விற்பனையும் 2.7 சதவீதம் குறைந்திருக்கிறது. வரி, தேய்மானத்திற்கு முந்தைய லாபமும் 10 சதவீதம் குறைந்திருக்கிறது. ஏனென்றால் சாப்ட்வேர் தொழில் அதிகம் பாதிப்படைந்தது இந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் தான் என்று சொன்ன இன்போசிஸின் சி.இ.ஓ., சிபுலால், எனினும் நான்காவது காலாண்டில் எங்களுக்கு புதிதாக 37 வாடிக்கை யாளர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றார். மேலும் வருடத்திற்கு வருடம் என்ற கணக்கில், எங்களது அடுத்த காலாண்டு மொத்த விற்பனை 10.8 சதவீதத்தில் இருந்து 12.9 சதவீதம் வரை உயர்ந்திருக்கும் என்றார் அவர்.
நன்றி : தினமலர்