Wednesday, April 15, 2009

நன்கு உயர்ந்தது பங்கு சந்தை

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பெரும் பங்களிப்பால் இன்று பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை ஏற்பட்டது. சென்செக்ஸ் 11 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,500 புள்ளிகளை ஒட்டியும் சென்று முடிந்திருக்கிறது. இன்ஃராஸ்டரக்சர், பார்மா, சிமென்ட், மெட்டல் மற்றும் குறிப்பிட்ட ஆயில் அண்ட் கேஸ் நிறுவன பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டதால் நிப்டியின் டி.எம்.ஏ., ( டெய்லி மூவிங் ஆவரேஜ் ) 200 ஐ தாண்டி விட்டது. நிப்டி 200 டி.எம்.ஏ.,ஐ தாண்டியிருப்பது அதிக மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்றார் பிஎஸ்பிஎல்இந்தியா.காமின் சி.இ.ஓ., விஜய் பம்ப்வாணி. மும்பை பங்கு சந்தையில் இன்று 11,337.75 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 317.51 புள்ளிகள் ( 2.9 சதவீதம் ) உயர்ந்து 11,284.73 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் 3,497.55 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த நிப்டி, வர்த்தக முடிவில் 101.55 புள்ளிகள் ( 3 சதவீதம் ) உயர்ந்து 3,484.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் தான் அதிகம் வர்த்தகம் ஆனது. இன்று மிட்கேப் இன்டக்ஸ் 3.95 சதவீதமும், ஸ்மால்கேப் இன்டக்ஸ் 5.32 சதவீதமும் உயர்ந்திருந்தது. மொத்தமாக கடந்த 8 வர்த்தக நாட்களில் மிட்கேப் இன்டக்ஸ் 25 சதவீதமும், ஸ்மால்கேப் இன்டக்ஸ் 29 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இன்றைய வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட்டிருந்தனர். இன்று மொத்தம் ரூ.1,00,893.68 கோடிக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப்பிறகு இன்று மீண்டும் வர்த்தகம் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் நடந்திருக்கிறது. செப்டம்பர் 25, 2008க்குப்பின் இன்று தான் இவ்வளவு அதிகமான தொகைக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் லாபம் சம்பாதித்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பெல், எஸ்.பி.ஐ., என்டிபிசி, பார்தி ஏர்டெல், டிஎல்எஃப், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவையே.

நன்றி : தினமலர்



No comments: