
கடும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, அரசு துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று, 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த போது, இடதுசாரிகள் மிரட்டல் இருந்ததால், அரசு துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடியாமல் தவித்தது மத்திய அரசு. இந்த முறை இடதுசாரிகள் ஓரம் கட்டப்பட்டு விட்டதால், அவர்கள் தொல்லையில்லாமல் திட்டங்களை நிறைவேற்றுவதில் காங்., நிம்மதி அடைந்துள்ளது. ரசு செலவின மதிப்பீடுகள் அதிகரித்து வருகின்றன; வருவாயும் போதுமான அளவுக்கு இல்லை. திட்டங்களை நிறைவேற்ற அதிகளவில் ஒதுக்கீடும் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், இதற்கான நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் சிலவற்றை தனியாருக்கு விற்று, அதன் மூலம் நிதி திரட்ட அரசு திட்டம் தீட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, வரும் 6ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, அதில் பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்று தெரிகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம், 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, இரு கட்டமாக பங்குகளை விற்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நன்றி : தினமலர்