Saturday, November 14, 2009

மதுரையில் பிரம்மாண்ட ஹோட்டல் : இண்டஸ் திட்டம்

பிரபல கட்டுமானத் துறை நிறுவனமான 'இண்டஸ்', மதுரையில் பிரமாண்டமான ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது. கோயில் நகரமான மதுரையின் மீது ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறையினரின் கவனம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசும் தொழில்துறை சார்ந்த புதிய திட்டங்களை இப்பகுதியில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல இண்டஸ் டெவலப்பர்ஸ், மதுரையில் சுமார் ஏழரை ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இங்கு 125 முதல் 150 அறைகள் கொண்ட நவீன பிசினஸ் ஹோட்டல் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள இண்டஸ் தயாராகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து இண்டஸ் இயக்குனர் அபிஷேக் லுனாவத் கூறுகையில், 'ஹோட்டல் மட்டுமன்றி மதுரையி்ல் 550 யூனிட் கொண்ட குடியிருப்புகளை கட்டவும் திட்டமிட்டுள்ளோம். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் 850 முதல் 1200 சதுரடி வரையிலான அளவுகளில் கட்டப்படும்' என்றார். ஆனால் அத‌ன் விலையை குறிப்பிடவில்லை. சென்னை சைதாப்பேட்டையிலும் தற்போது இண்டஸ் ஹவுசிங் பிராஜக்ட் நடப்பதாக அபிஷேக் தெரிவித்தார். 1000 முதல் 1500 சதுரடி அளவிலான குடியிருப்புகளின் விலை, சதுரடிக்கு ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


200 டன் தங்கம் : ஒரே மாதத்தில் அரசுக்கு ரூ.1,544 கோடி லாபம்

ஐ.எம்.எப் அமைப்பிடம் இந்திய ரிசர்வ் வங்கி வாங்கிய 200 டன் தங்கம், ஒரே மாதத்தில் ரூ.1500 கோடி லாபத்தை அரசுக்கு சம்பாதித்துத் தந்துள்ளது.கடந்த மாதத்தில் 200 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியது. உலக தங்க மார்க்கெட்டில் விற்கும் விலையைக் கொடுத்துத்தான் இந்தியா தங்கத்தை வாங்கியது. இந்தியா ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கத்துக்கு கொடுத்த விலை ரூ.49,115. இந்தியா கொடுத்த மொத்த தொகை ரூ.31,490 கோடி.அக்டோபர் 30ம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.53,815 ஆக உயர்ந்துவிட்டது. அதனால் இந்தியா வாங்கிய 200 டன் தங்கத்தின் மதிப்பு இரண்டு வார காலத்தில் ரூ.1544 கோடி உயர்ந்துள்ளது. இந்தியாவிடம் ஏற்கெனவே 358 டன்கள் தங்கம் இருந்தது. இப்பொழுது அது 558 டன்களாக உயர்ந்துள்ளது. இது 55 சதவீதம் உயர்வாகும். இந்தியாவின் கையிருப்பில் உள்ள தங்கம் 558 டன்களாக உயர்ந்ததால் தங்க கையிருப்பு நாடுகளின் வரிசைப் பட்டியலில் 9வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. உலக சராசரியை விட இந்த அளவு குறைவானது என்றாலும் உலகில் வளரும் முன்னணி நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 0.5 சதவீதமும், ரஷ்யா 4 சதவீதமும், இந்தியா 6 சதவீதமும், சீனா 2 சதவீதமும் தங்கம் வைத்துள்ளனவாம்.
நன்றி : தினமலர்


யாருக்கு யார் பாதுகாப்பு?

இப்போதெல்லாம் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்புக் கெடுபிடி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு அதிரடிப்படை, கருப்புப் பூனைப்படை என இதன் செலவுகளும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. இது ஓர் ஏழை நாட்டுக்குக் கட்டுபடியாகுமா? இந்தக் கேள்வி எங்கும் எழுந்துள்ளது. எனினும் யாரும் இதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மக்களுக்குச் சேவை செய்ய வந்த இந்தப் பெரிய மனிதர்கள் “பாதுகாப்பு’ என்ற பெயரால் அந்நியப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். முக்கியமாக அலுவலக நேரங்களில் பணிகளுக்குச் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தி இந்த வி.ஐ.பி.க்கு வழிவகுத்துக் கொடுக்கும் காவலர்களின் கெடுபிடிகள் கொஞ்சநஞ்சமல்ல.

இப்போது பிரதமரை மையமாக வைத்து ஓர் அதிர்ச்சியான நிகழ்ச்சி. சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவன மருத்துவமனையில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.

அப்போது அங்கு கொண்டு வரப்பட்ட சிறுநீரக நோயாளியான எஸ்.பி. வர்மா சுமார் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் இறந்ததாகவும் அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட வர்மாவைப் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்பது மனிதநேயமற்ற கொடுமையல்லவா?

இறந்து போன வர்மா குடும்பத்தினருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்ததுடன் ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனாதையாக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது.

இக்காலத்தில் மற்ற பொருள்களின் விலையெல்லாம் ஏறிக்கொண்டே இருக்கின்றன; மனித உயிர்களின் விலைகள் மட்டும் மலிவாகிவிட்டன. மனித உயிர்களுக்கு விலையே இல்லை என்று கூறப்பட்டதெல்லாம் அந்தக் காலம்.

மகாத்மா காந்தி, நேரு, காமராஜ், அண்ணா மற்றும் ஜீவானந்தம் போன்றவர்களுக்கு இந்த “பந்தாவெல்லாம் தெரியாமல் போய்விட்டது. எளிமையாக வாழ்ந்துவிட்டு இறந்து போனார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்த அக்காலத் தலைவர்கள் பாவம், பரிதாபத்துக்கு உரியவர்கள்.

முற்றிலும் வியாபாரமாகிவிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நட்சத்திரங்களுக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகக் காவல்துறை பெருமையோடு அறிவிக்கிறது. லட்சியமே இல்லாமல் லட்சக்கணக்கிலிருந்து தாவி கோடிக்கணக்கில் பணம் வாங்கும் இவர்களுக்கும் இந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் பாதுகாப்புத் தரப்படுகிறது.

“மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது கடமையில்லையா?’ என்று கேட்கிறார்கள். அப்படியானால் மக்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லையா? அரசியலுக்கு வந்து சம்பாதிக்கவே துடிப்பவர்களுக்கு மக்கள் பணத்தில் பாதுகாப்புத் தரவேண்டிய அவசியம் என்ன? அவர்களது சொந்தப் பணத்தில் அல்லது கட்சிப் பணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவதுதானே முறையாகும்?

1947 ஆகஸ்ட் 15. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக விடுதலை பெற்றன. நாடெங்கும் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நவகாளியில் இந்து, முஸ்லிம் வகுப்புக் கலவரங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. மக்கள் குற்றுயிரும், குலையுயிருமாகத் திசைதெரியாமல் கூட்டம் கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் மதவெறி கண்ணையும் கருத்தையும் மறைத்துக் கொண்டிருந்தது. இரண்டு மதங்களைச் சேர்ந்த மனிதர் உடல்களிலும் சிவப்பு ரத்தமே சிந்தப்பட்டன.

இந்த நேரத்தில் காந்தியடிகள் மட்டுமே இதைப் பற்றிக் கவலை கொண்டு கலவர பூமியான நவகாளியை நோக்கித் தன்னந்தனியாகத் தன் பயணத்தைத் தொடங்கினார், “அங்கு செல்வது ஆபத்து’ என்று எச்சரிக்கை செய்யப்பட்டபோதும் அவர் கேட்கவில்லை. மனித உயிர்களைக் காப்பதற்காக அந்தத் தள்ளாத வயதிலும் புறப்பட்டார். அவரது வருகை அங்கே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த வகுப்புத் தீயை அணைக்க உதவியது.

அங்கே அவருக்கு எந்த அதிரடிப்படையும் பாதுகாப்புத் தரவில்லை. மக்களே அவருக்குக் கவசமாக இருந்தனர். பகைவர்களையும் நேசிக்கும் பண்பும், தன்னுயிரைக் காட்டிலும் மன்னுயிரை மதிக்கும் அன்பும் அவருக்குப் பாதுகாப்பானது.

1861 ஏப்ரல் 12. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. இரு தரப்பிலும் ஆள்சேதமும், பொருள்சேதமும் மிக மிக அதிகம். இதுவரை நடந்துள்ள உள்நாட்டுப் போர்களில் இதற்கு இணையான ஒரு கொடிய போர் வரலாற்று ஏடுகளில் இல்லை. ஐக்கிய அரசு சார்பில் 3 லட்சத்து 60 ஆயிரம் வீரர்களும், கூட்டு அரசு சார்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும் போரில் மடிந்தனர் என்றால் அதன் பயங்கரத்தை என்னென்பது?

போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. உள்நாட்டுப் போராக இருந்ததால் அழிவும், அவதியும் அதிகமாகிவிட்டது. இரு பகுதி மக்களுக்கும், “போர் எப்படியாவது முடிந்தால் போதும்’ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வெற்றி, தோல்வியைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.

போரின் விளைவாக கொலை, கொள்ளை, களவு, கட்டுப்பாடின்மை மிகுந்து விட்டன. உணவுக்கிடங்குகளை எரித்தல், பாலங்களைத் தகர்த்தல் எனக் கலவரங்களும் ஏற்பட்டுவிட்டன. இதனால் மக்கள் உணவுக்கும், போக்குவரத்துக்கும் பெரிதும் அவதிப்பட்டனர். தந்தையை, கணவனை, குழந்தைகளை இழந்து பெண்கள் சோகத்தில் தவித்தனர்.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் “பாதுகாப்புக் கருதி வெள்ளை மாளிகையிலேயே முடங்கிக் கிடக்கவில்லை.

தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் போர்க்களத்துக்கே போனார்; காயமுற்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த போர் வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

எதிர்தரப்புப் படைவீரர்களையும் அன்போடு நலம் விசாரித்தார்; கை குலுக்கினார். அவரது இடைவிடாத முயற்சியால் உள்நாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.

இவ்வாறு மக்களுக்காகவும், தேசத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மக்களே பாதுகாப்புக் கவசமாக இருந்திருக்கின்றனர். இந்த நிலை மாறிப் போனது ஏன்? இதை எண்ணிப் பார்க்க வேண்டிய வேளை இது.

இந்தப் பாதுகாப்பு மரியாதைக்குரியதாகக் கருதப்படுவதால் இதனை மேலும் மேலும் முக்கியப் பிரமுகர்கள் கேட்டு வருகின்றனர்; இதனால் அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று பலமுறை அறிவித்தனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இக்காலத்தில் அரசியலைவிடச் சிறந்த வணிகம் இல்லை என்றாகிவிட்டது. இந்த வியாபாரப் போட்டியில் பகைவர்கள் தோன்றுவதும், மோதல்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாது. இவர்களுக்குப் பாதுகாப்பு தேவைதான். யாருக்கு யார் இந்தப் பாதுகாப்பைத் தருவது?

ஒரு நாட்டின் பிரதமர் உயிர் மேலானதுதான்; அது பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால், தன் உயிருக்கே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுநீரக நோயாளியால் பிரதமரின் பாதுகாப்புக்கு எப்படிக் குந்தகம் ஏற்படும்? இதுகூடவா இந்தப் பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் போய்விட்டது?

அதிகார வர்க்கத்தினரைத் திருப்தி செய்வது ஒன்றே தங்கள் கடமை என்று காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் நினைக்கும்படி அரசுத்துறை தரம் தாழ்ந்து போய்விட்டது.

சட்ட விதிகள் எல்லாம் பாமர மக்களுக்கு மட்டும்தானா? படித்தவர்கள் எல்லாம் இதற்குச் சவால் விடுவதுபோலவே நடந்து கொள்கின்றனர்.

விதிப்படி வேலை செய்தவர்களை அதிகாரவர்க்கம் பாராட்டியதும், பரிசளித்ததும் அந்தக் காலம். இப்போது அப்படி நடக்கிறவர்கள் கேலிக்குரியவர்கள்; ஆள்வோரின் தண்டனைக்குரியவர்கள்; தேசத் துரோகிகள்!

“”எங்கே மனதில் பயமின்றி தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டு துண்டாகச் சிதறாத உலகம் உள்ளதோ-என் தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்’’ என்று பாடினார் கவி தாகூர்.

மக்களாட்சியில் முக்கியப் பிரமுகர்களே குடிமக்கள்தாம். அந்த மக்களை அந்நியப்படுத்துகிற அதிரடிப்படைகள் எப்படி உண்மையான பாதுகாப்பு என்று கூற முடியும்? தேசம் விழித்தெழும்போது எல்லாம் தெரியும்.
கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி

கரையும் மலைகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தாலும், 40-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்!

அதிக அளவு மழை பெய்திருப்பதை நிலச்சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறினாலும், இதை இயற்கையின் பேரிடர் என்பதைக் காட்டிலும், மானுடத்தின் பிழை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

1994-ல் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில், மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் போதே, இதற்கான காரணங்களையும், இனிவரும் காலங்களில் எத்தகைய அணுகுமுறை மூலம் இதைத் தவிர்க்க முடியும் என்பது குறித்தும், பல்வேறு அமைப்புகள் கருத்துத் தெரிவித்த பிறகும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேறு என்னதான் சொல்ல முடியும்?

நீலகிரியில் நிலச்சரிவு என்பதே 1970-க்குப் பிறகுதான் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது.

நீலகிரியில் உள்ள குன்றுகள் அனைத்துமே முழுக்கமுழுக்கப் பாறைகளால் அமைந்தவை அல்ல. பெரும்பாலான குன்றுகள் கால்பங்கு பாறை, முக்கால் பங்கு மண்ணாக இருப்பவை. சில இடங்களில் பாறைகள் பாதி, மண் பாதி கலந்து நிற்கிறது. அந்தந்தக் குன்றுகளில் உள்ள பாறை, மண் விகிதம் மற்றும் கடல்மட்டத்தின் உயரத்துக்கு ஏற்ப தனக்கான தாவரங்களையும் மரங்களையும் நீலகிரி மலை தனக்குத்தானே வளர்த்து செழித்திருந்தது - திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறும்வரை.

பிரிட்டிஷ் அரசின் அன்றைய கோயமுத்தூர் கவர்னர் ஜான் சலைவன் இந்த மலைக்கு முதலில் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி. மலையின் அழகும், அதன் குளுமையும் பிடித்துப்போனதால், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான கோடை வாசஸ்தலமாக மாற்றினார். சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் அதிகாரிகள் வருவதற்காகவே மலை ரயில் பாதை (இரு தண்டவாளங்களுக்கு இடையே பல்சக்கரங்களுடன் ஒரு தண்டவாளம் இருக்கும் வகையில்) அமைக்கப்பட்டது. கவர்னர் சலைவனின் இந்த ஊடுருவலை மலைவாழ் மக்களான படுகர், தோடா இனத்தவர் எதிர்த்தனர். அந்தப் பழங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதான் தனது விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது.

கோடை வாசஸ்தலம் என்பதோடு, இங்கே தேயிலை பயிரிட முடியும் என்பதையும் கண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக காடுகளை அழித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த மலையின் பாறை - மண் கலப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கிடைத்த இடங்களையெல்லாம் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காகக் காட்டை அழித்தனர்.

1970-களில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்ததால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. எத்தகைய மழையிலும் வேர்களால் மண்ணைப் பிடித்துக் காத்துநின்ற மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு, மழையில் வெறும் மண் கரைந்தது. நீர் ஊறி, ஓதம் தாளாமல் மண்முகடுகள் சரிந்து, மனிதர்கள் இறப்பது வாடிக்கையானது. நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் (பயோ டைவர்சிட்டி) முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.

தேயிலைத் தோட்டங்களுக்காக மலை அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, சுற்றுலாத் தலமாக மாறியதால் பயணிகள் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகரித்தது. இவர்களுக்காக காடுகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்தன. உதகை, குன்னூர் இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 500 விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. சரியான கழிவுநீர் வாய்க்கால்கூட உதகை, குன்னூரில் இல்லை என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.

1994 மரப்பாலம் நிலச்சரிவின் போதே, தொலையுணர் தொழில்நுட்பத்தின் மூலம் மலையின் தன்மையையும், காட்டின் அளவையும் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தொலையுணர் தொழில்நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியுள்ள நமக்கு, நீலகிரி மலைகளின் வகைகளையும், எத்தகைய காடுகள் அங்கே இருந்தால் நிலச்சரிவு ஏற்படாது என்பதையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஆக்கிரமிப்பாலும், காடு அழிப்பாலும் முற்றிலும் மாறிக்கிடக்கும் "ஒத்தக் கல் மண்டூ' என்கிற உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைகளில் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகள் வழியாக மழை நீர் கீழே இறங்குகிறது என்பதைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் நீர் வெளியேற வாய்க்காலும், மண்கரையாமல் இருக்கக் காடுகளும் வளர்க்க முயல வேண்டும்.

பாறையின்றி மண்மேடுகள் மட்டும் இருக்கும் பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை விதிப்பதும், போக்குவரத்து வசதி என்ற பெயரில் நீலகிரியில் புதிய சாலைகள் அமைப்பதைக் கைவிடுவதும்கூடப் பயன்தரும்.

நீலகிரி மலையில் சமவெளியாகப் பரந்து கிடக்கும் புல்வெளிகூட, தன் வேர்களால் அந்த மண்மலையைத் பிடித்துக் காத்து நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான், மலையரசி "கரையாமல்' நிற்பாள்; மனிதரையும் அழ வைக்க மாட்டாள்.