Saturday, February 28, 2009

பொருளாதார வளர்ச்சி திடீர் சரிவு: இனிமேல் அதிக பாதிப்பு வரும்

உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பின் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், நம் நாட்டின் மொத்த வளர்ச்சி 5.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதனால், அதிக அளவு பாதிப்பு வரும் என்று கருதப்படுகிறது. கடந்த அக்டோபர்-டிசம்பர் மாதத்திற்கான மூன்றாவது காலாண்டு வளர்ச்சியைக் கணக்கிட்ட போது, இந்த சரிவு தெரிந்தது. இச்சரிவுக்கு விவசாய உற்பத்தி, மான்யுபேக்சரிங் துறை உற்பத்தி குறைவு என்று தெரிய வந்தது.
நடப்பாண்டான 2008- 2009ம் ஆண்டுக்கு மொத்த வளர்ச்சி 7.1 சதவீதம் இருக்கும் என்று அரசு எதிர்பார்த்ததற்கு மாறாக, அதற்குள் மொத்த வளர்ச்சி 5.3 சதவீதம் என்று புள்ளியியல் துறை தகவல் அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
இது, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த சதவீதமாகும். உலகப் பொருளாதார மந்த நிலை பாதிக்கும். ஆனால், இங்கே தேக்கம் வராது என்று நிதியமைச்சகமும், திட்டக்கமிஷனும் கூறி வந்தாலும், தற்போது விவசாய உற்பத்தி மூன்றாவது காலாண்டில் வெறும் 2.2 சதவீதம் என்பது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இதில் கரும்பு உற்பத்தி கணிசமாகக் குறைந்திருக்கிறது என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. இத்தகவல் குறித்து கருத்து தெரிவித்த நிதித்துறை இணையமைச்சர் பன்சால், 'இன்னும் மூன்று மாதம் இருக்கிறது; வளர்ச்சி அதிகரிக்கும்' என்றார். ஆனால், பொருளாதார நிபுணர்கள் சிலர், தற்போது அரசு சில பொருளாதார நிதியுதவித் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தந்திருக்கிறது. அதன் பயன் தெரிய சில காலமாகும் என்றனர். 'கிரிசில்' என்ற மதிப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் ஜோஷி கூறுகையில், 'அரசு அறிவித்த சலுகையின் பயன் கள் தெரிய இன்னமும் ஏழு மாதங்கள் ஆகும்' என்றார். குறிப்பாக, சமூக, தனிநபர் சர்வீசஸ் துறையின் வளர்ச்சி கடந்தாண்டில் இதே காலத்தை ஒப்பிடும் போது முன்பிருந்த 5.5 சதவீதம் என்பது 17.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அது, மத்திய-மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு அளித்த சம்பள உயர்வு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 9 சதவீத வளர்ச்சி என்று மார்தட்டிய நிலை திடீரென கீழிறங்கியிருப்பது, பொருளாதார நிலை அபாய கட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது. இதனால், நாடும் மக்களும் சிரம நிலையைச் சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே வேலையிழப்பு, ஏற்றுமதி சரிவு, உற்பத்தியின்மை என்று தொடர்கிறது. ஆனாலும், தொழில் துறை மந்தம் ஏற்படும் பெரிய அபாயம் வராது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், வங்கிகள் வட்டி சதவீதத்தைக் குறைப் பது தேவை என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது.
நன்றி : தினமலர்


நெருக்கடியில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் : இவ்வாண்டில் சம்பள உயர்வு கிடையாது

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்.,) நிறுவன ஊழியர்களுக்கு இவ்வாண்டு சம்பள உயர்வு இல்லை என்றும், ஆட் குறைப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.சி.எஸ்., நிறுவனத்தின் விற்று முதல், கடந்த நிதியாண்டில் 22 ஆயிரத்து 863 கோடி ரூபாயாக குறைந்தது. இதனால், ஊழியர்களின் சம்பளம் மறு ஆய்வு செய்யப்படுகிறது. அடிப்படை சம்பளத்தில் மாற்றம் இருக்காது என்றாலும், பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட உள்ளது. தகுதி, பணி மூப்பு அடிப்படையில், இது 20 சதவீதம் முதல் 30 சதவீதமாக இருக்கும். டி.சி.எஸ்., இ - சர்வீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் ஊழியர்கள் உட்பட, டி.சி.எஸ்., நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 1.4 லட்சம். ஊழியர்களின் சம்பளத்துக்காக, இந்நிறுவனம், மொத்த செலவுகளில், 54 சதவீதம் செலவிடுகிறது. தற்போது வருவாய் குறைந்து இருப்பதால், மொத்த செலவுகளில், ஊழியர்களுக்கான செலவை, 52 சதவீதம் முதல் 54 சதவீதத்துக்குள் தற்போது, இந்நிறுவனம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவுடன் நடத்தி வந்த வர்த்தகத்தில், 4 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை குறைப்பு செய்ய வேணடிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. தேவையற்ற, திறமையற்ற ஊழியர்களை வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலும், நிலைமை மேலும் மோசமடைந்தால், அதிகளவில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று, டி.சி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது. 'காம்பஸ் இன்டர்வியூவில், 24 ஆயிரத்து 500 பேருக்கு, வேலையில் சேர ஆபர் லெட்டர் அளிக்கப்பட்டு இருந்தது. இவர்களை பணியில் அமர்த்துவதில் உறுதியாக இருந்தாலும், அது டிசம்பர் மாதம் வரை தாமதப்படும்' என்று, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராமதுரை கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்


ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைகின்றன

சந்தை முதலீட்டு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும் ( ஆர் ஐ எல் ) அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்டும் ஒரே நிறுவனமாக இணைக்கப்படுகின்றன. இந்த தகவல் நேற்று மும்பை பங்கு சந்தைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களின் போர்டும் தனித்தனியாக மார்ச் 2 ம் தேதி அன்று கூடி இது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமாக, ரிலையன்ஸ் பெட்ரோலியம் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று இருந்தது. 2001ல் உற்பத்தியை துவக்கிய அந்த நிறுவனம், 2002 இலேயே ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் இணைந்து விட்டது. இப்போதிருக்கும் இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து விட்டால் பின்னர் அந்த நிறுவனத்தில் மொத்த சந்தை முதலீடு ( மார்க்கெட் கேபிடலைஷேசன் ) ரூ.2,33,000 கோடியாக உயர்ந்து விடும். அப்போது அது, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரி ய நிறுவனமான என்.டி.பி.சி.,யின் சந்தை முதலீட்டை விட 35 சதவீதம் அதிக சந்தை முதலீட்டை கொண்டதாக இருக்கும். இரண்டும் ஒன்றாக இணைந்து விட்டால், உலகின் அதிகம் லாபம் சம்பாதிக்கும் 50 நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும் வந்து விடும்.
நன்றி : தினமலர்


ரூபாயின் மதிப்பு பெருமளவு குறைந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று, என்றுமில்லாத அளவாக குறைந்து விட்டது. இன்று மதியம் வர்த்தகத்தின்போது அது, டாலர் ஒன்றுக்கு ரூ.51 வரை சென்று விட்டது. பகல் 12.34 க்கு ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ.50.87/88 ஆக இருந்தது. இன்று மாத கடைசியாக இருப்பதால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய்க்கான பில் தொகையை இன்று டாலரில் கொடுக்க வேண்டும். அதற்காக அவைகள் வெளி மார்க்கெட்டில் பெருமளவு டாலரை வாங்கும். இதன் காரணமாக டாலருக்கு டிமாண்ட் அதிகமாகி அதன் மதிப்பு உயர்ந்து விடும். ரூபாயின் மதிப்பு குறைந்து விடும்.

நன்றி : தினமலர்