நடப்பாண்டான 2008- 2009ம் ஆண்டுக்கு மொத்த வளர்ச்சி 7.1 சதவீதம் இருக்கும் என்று அரசு எதிர்பார்த்ததற்கு மாறாக, அதற்குள் மொத்த வளர்ச்சி 5.3 சதவீதம் என்று புள்ளியியல் துறை தகவல் அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
இது, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த சதவீதமாகும். உலகப் பொருளாதார மந்த நிலை பாதிக்கும். ஆனால், இங்கே தேக்கம் வராது என்று நிதியமைச்சகமும், திட்டக்கமிஷனும் கூறி வந்தாலும், தற்போது விவசாய உற்பத்தி மூன்றாவது காலாண்டில் வெறும் 2.2 சதவீதம் என்பது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இதில் கரும்பு உற்பத்தி கணிசமாகக் குறைந்திருக்கிறது என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. இத்தகவல் குறித்து கருத்து தெரிவித்த நிதித்துறை இணையமைச்சர் பன்சால், 'இன்னும் மூன்று மாதம் இருக்கிறது; வளர்ச்சி அதிகரிக்கும்' என்றார். ஆனால், பொருளாதார நிபுணர்கள் சிலர், தற்போது அரசு சில பொருளாதார நிதியுதவித் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தந்திருக்கிறது. அதன் பயன் தெரிய சில காலமாகும் என்றனர். 'கிரிசில்' என்ற மதிப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் ஜோஷி கூறுகையில், 'அரசு அறிவித்த சலுகையின் பயன் கள் தெரிய இன்னமும் ஏழு மாதங்கள் ஆகும்' என்றார். குறிப்பாக, சமூக, தனிநபர் சர்வீசஸ் துறையின் வளர்ச்சி கடந்தாண்டில் இதே காலத்தை ஒப்பிடும் போது முன்பிருந்த 5.5 சதவீதம் என்பது 17.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அது, மத்திய-மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு அளித்த சம்பள உயர்வு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 9 சதவீத வளர்ச்சி என்று மார்தட்டிய நிலை திடீரென கீழிறங்கியிருப்பது, பொருளாதார நிலை அபாய கட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறது. இதனால், நாடும் மக்களும் சிரம நிலையைச் சந்திக்க வேண்டி வரும். ஏற்கனவே வேலையிழப்பு, ஏற்றுமதி சரிவு, உற்பத்தியின்மை என்று தொடர்கிறது. ஆனாலும், தொழில் துறை மந்தம் ஏற்படும் பெரிய அபாயம் வராது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், வங்கிகள் வட்டி சதவீதத்தைக் குறைப் பது தேவை என்ற கருத்து மேலோங்கியிருக்கிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment