Tuesday, September 21, 2010

மக்களிடம் மறைப்பானேன்?

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு கூறியுள்ள நடவடிக்கைகள் மிகமிக காலம் தாழ்ந்தவை. இந்த முடிவுகளை எப்போதோ தமிழக சுகாதாரத் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முடிவை அறிவிக்க 800 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகவும், 10-க்கும் மேற்பட்டோர் இறக்கவும் வேண்டியிருந்தது.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றாலும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். அரசு தற்போது அறிவித்துள்ள, ரூ. 24,000 ஆண்டு வருமானம் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவசத் தடுப்பூசி என்பது அர்த்தமற்றது.

நோய்த்தொற்றும் கிருமி, ஏழை என்று கண்டதா, பணக்காரன் என்று கண்டதா?

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதே, கேரளத்தின் வழியாக கோவைக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக சுகாதாரத் துறை, இந்த நோய் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறியது. செம்மொழி மாநாட்டுக்கு வருவோரை அச்சறுத்துவதாக இருக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது என்று கருதினாலும், மாநாடு முடிந்த பிறகாகிலும், சுகாதாரத் துறை வேகமாகச் செயல்பட்டு, தடுப்பூசி போடுவதை அமலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

தமிழ்நாட்டில், மாநில எல்லைப் பகுதிகளில் சிலர் காய்ச்சலால் இறந்தபோது, இதனை பன்றிக் காய்ச்சல் என்று அரசல்புரசலாக மருத்துவர்கள் மூலம் இறந்தவரின் உறவினர்கள் அறிந்தபோதிலும், அதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும், சான்றளிக்கவும் மருத்துவமனைகள் தயக்கம் காட்டின. மர்மக் காய்ச்சலால் மரணம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது.

வேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்று கடையநல்லூரில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்படுகிறது. ஆனால் சான்றிதழில் மட்டும், பல உறுப்புகள் செயலிழந்ததால் மரணம் என்று மொட்டையாக மருத்துவமனை தெரிவிக்கிறது. செய்திகள் யாவும் அந்த மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்றே வருகின்றன. ஆனால் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இந்த மாவட்டத்தில் யாரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தன. ஒசூரைச் சேர்ந்தவர், பெங்களூரில் இறந்ததால்தான் அவருக்குப் பன்றிக் காய்ச்சலால் மரணம் என்று சான்று கிடைக்கிறது.

கோவையில் இறந்தவர்களில் ஒருவர் டாக்டர் என்பதாலும், சென்னையில் இறந்தவர் ஒருவர் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு பிரிவைச் சேர்ந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பதாலும், ஒருவேளை வேறு வழியின்றி, பன்றிக் காய்ச்சல் என்று ஒப்புக் கொண்டார்களே தவிர, அவர்கள் சாதாரண நபர்களாக இருந்திருந்தால் அவர்களும் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கும். ஒரு தொற்றுநோய் பரவி சிலர் சாவதை ஏதோ ஆளுகின்ற அரசியல் கட்சியின் வீழ்ச்சியாகப் பார்க்கப்படும் அச்சம்தான் ஒரு நிர்வாகத்தை இவ்வாறு உண்மையை மறைக்கவும், தள்ளிப் போடவும் வைக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என்பதை வெளிப்படையாக அறிவித்தால், எந்தெந்தப் பகுதிகளில் அதிகம் என்று கண்டறிந்தால் அந்தந்தப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போடவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். நோயை முதல்கட்டத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுவிட்டாலே, தமிழக அரசுக்கு இழுக்கு என்பதாகவும், ஏதோ அமைச்சரின் - அரசின் திறமையின்மை என்பதாக எதிர்க்கட்சிகள் பேசும் என்பதாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் தாக்குதல் ஏற்பட்டபோதும் இதே போன்று மக்கள் மடிந்துகொண்டே இருக்க, தமிழக சுகாதாரத் துறை மறுத்துக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்ந்தபோது, சிக்குன் குனியா தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது.

மீண்டும் சிக்குன் குனியாவின் இரண்டாவது தாக்குதல் - தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவியபோது அப்போதும் அதை மர்மக் காய்ச்சல் என்றே பெயர் புனைந்தார்கள். ஆனால் மருத்துவர்களோ இதனை "செகன்டரி சிக்குன் குனியா' என்று சொல்லி அதற்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இப்போது அதே நிலைமைதான் பன்றிக் காய்ச்சலுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு நோய்த் தொற்று இருக்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்டு அதைத் தடுக்கவும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யவும் முற்படுவதுதான் சுகாதாரத் துறையின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சாவோர் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்வது சரியான வழிமுறை அல்ல.

உண்ண உணவு கிடைக்காமல் மக்கள் சாகும்போதுதான் ஓர் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுமே தவிர, ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்பதை முன்னதாகவே ஒப்புக்கொள்வதால் களங்கம் ஏற்பட்டுவிடாது. மாறாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பு மருந்துகளை உரியநேரத்தில் கொண்டுசேர்த்த பெருமை கிடைக்கும். நமது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பற்றிக் கூறும்போது முதல்வர் கருணாநிதியின் "பூம்புகார்' திரைப்படப் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது - "வரும் முன் காப்பவன்தான் புத்திசாலி, வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி!'
நன்றி : தினமணி