Monday, December 28, 2009

சுமக்கிறவனுக்குத்தான் வலி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னைக்காக அவைத் தலைவரின் உள்வட்டத்திற்குள் நுழைந்து கூச்சல் போட்டதற்குக் காரணம்,​​ தேர்ந்தெடுத்த மக்கள் தங்களைப் பார்த்து சங்கடமான கேள்விகளைக் கேட்டுவிடக்கூடாதே என்ற எண்ணத்தினால்தான்.​ பத்திரிகைகளும் ஊடகங்களும் விலைவாசி உயர்வில் இவர்கள் காட்டிய அதீத அக்கறையைக் கண்டு,​​ நல்லெண்ணம் கொண்டுவிடுவார்கள் என்பதால்தான்.​ ​

ஆனாலும்,​​ மத்திய அரசு இதைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ அல்லது மிகச் சரியாகவே புரிந்துகொண்டதாலோ என்னவோ, நாடாளுமன்ற உணவுக்கூடத்தில் சப்பாத்தி ஒரு ரூபாய்,​​ டீ ஒரு ரூபாய்,​​ சாப்பாடு ரூ.12.50,​ பிரியாணி ரூ.22 என்று - பாவம் வறுமையில் பரிதவிக்கும் மக்களவை உறுப்பினர்களுக்காக குறைந்த விலையை நிர்ணயம் செய்தது.​ பொதுச் சந்தையில் எந்தவொரு பொருளின் விலையும் ஒரு பைசாகூட குறையவில்லை.

இது போதாதென்று,​​ மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்தப் பாடுபட வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சொல்ல,​​ மத்திய அரசின் தவறான கொள்கையால்தான் விலையேற்றம்; இதை மாநில அரசின் மீது தள்ளிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் பதிலடி கொடுக்க,​​ ஒரு சொற்போர் நடந்துகொண்டிருக்கிறது.​ இதனால் எந்தப் பொருளின் விலையும் ஒரு ரூபாய் கூட குறையப் போவதில்லை.

ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறது மத்திய அரசு.​ விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்றும் கூறுகிறது.​ ஆனால் பொருள்களின் விலையோ தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகிறது.​ இந்திய அரசு விலைவாசி உயர்வை மொத்தவிற்பனை விலைப் பட்டியல் ​(ஹோல்சேல் பிரைஸ் இன்டக்ஸ்)​ மூலம் கணக்கிடுகிறது.​ மொத்தவிற்பனை விலைப் பட்டியல் வாரம் தோறும் கணக்கிடப்பட்டாலும்கூட,​​ இதன் மூலம் கிடைக்கும் விலைஉயர்வு சராசரியாக 0.3 சதவீதமாகவே இருக்கிறது. ஏனென்றால்,​​ மொத்தக் கொள்முதல் செய்து அதைப் ​ பதுக்கி,​​ அல்லது சில்லறை வணிகமாக மாற்றப்படும்போதுதான் ஒரு பொருளின் விலை குறைந்தபட்சம் 100 சதவீதத்திலிருந்து 400 சதவீதம் வரை உயர்கிறது.

அரசு வெளியிடும் நுகர்வோர் விலைப் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகத் தெரியும்.​ ஒவ்வொரு மாதமும் வெளியாகும் இந்தப் பட்டியலில் விலைஉயர்வு என்பது 9 முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

விலைவாசி உயர்வைக் கணக்கிடும்போது குறைந்தபட்சம் 435 வகைப் ​ பொருள்களின் விலையைக் கணக்கிடுகின்றனர்.​ இதில் அதிக முக்கியத்துவம் தரும் பொருள்ககளான-​ மின்சாரம்,​​ பெட்ரோலியப் பொருள் போன்றவைகளின் விலை மாற்றமின்றி இருக்கின்றன.​ ஆனால் கணக்கிடுவதில் குறைந்த முக்கியத்துவம் பெறும் காய்கறிகள்,​​ இறைச்சி போன்ற உணவுப் பொருள்களின் விலை சந்தையில் தாறுமாறாக உயர்ந்து கிடக்கிறது.​ இதனால்தான் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அரசு சொன்னாலும்,​​ நடுத்தரக் குடும்பத் தலைவனின் கையைக் கடிக்கிறது.

சாதாரணமாக இந்தியர்கள் உணவுக்காகத் தங்கள் வருவாயில் 42 சதவீதத்தைச் ​ செலவழிக்கின்றனர்.​ போக்குவரத்துக்கு 9 சதவீதமும்,​​ பொழுதுபோக்குக்கு 8 சதவீதமும் செலவிடுகின்றனர்.​ மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது.​ இதில் உணவுப் பொருள்களின் விலை கூடிக்கொண்டே வந்தால்,​​ அவர்கள் தங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை உணவுக்கே கொடுத்துவிட்டால்,​​ மற்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள்.​ இவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும்,​​ தங்கள் மருத்துவச் செலவுக்கும்,​​ சேமிப்புக்கும் என்ன செய்வார்கள்?

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் கிலோ ஒரு ரூபாய் அரிசியை அனைத்துக் குடும்பங்களுமே வாங்கி,​​ அதைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை நிஜம் என்றே வைத்துக்கொண்டாலும்,​​ எண்ணெய்,​​ பருப்பு,​​ மிளகாய்,​​ மிளகு,​​ பூண்டு,​​ வெங்காயம் இவற்றின் விலைஉயர்வு சாதாரண குடும்பத்துக்குத் தாளமுடியாத சுமையாக இருக்கிறது.​ தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு ரூபாய் அரிசிதான் வாங்குகிறார்கள் என்றால்,​​ பொன்னி அரிசியின் விலை வாங்குவார் இல்லாததால் குறைந்திருக்க வேண்டுமல்லவா,​​ 25 கிலோ சிப்பம் விலை ரூ.1000-த்தை நெருங்குகிறதே ஏன்?​ ​

கடந்த ஆறு மாதங்களில் சமையல் எண்ணெய்,​​ பருப்புவகை,​​ அரிசி,​​ கோதுமை,​​ காய்கறிகள் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.​ விலை உயர்வு என்பது,​​ தேவை -​ உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி பெருகினால்தான் உண்டாகும் என்ற பொருளாதார வாய்ப்பாடுகள் எல்லாமும் பொய்யாகும் வகையில் இந்த விலை உயர்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விந்தையிலும் விந்தை.

2008-09 சாகுபடி ஆண்டுக்கான விளைச்சல் பட்டியலில் 233 மில்லியன் "ரெக்கார்டு' உற்பத்தி என்று அரசு சொல்கிறது.​ அதாவது அரிசி 99 மில்லியன் டன்,​​ கோதுமை 80 மில்லியன் டன்,​​ 39 டன் தானிய வகைகள்,​​ 15 டன் பருப்பு வகைகள் என்று புள்ளிவிவரம் தரப்படுகிறது.​ இதில் பருப்பு வகைகள் மட்டும் தேவையைவிட 4 மில்லியன் டன் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,​​ மற்றவர்கள் யாரும் பற்றாக்குறை இருப்பதாகச் ​ சொல்லவில்லை.​ அப்படியானால் ஏன் விலை உயர்கிறது.​ அல்லது யார் விலையை உயர்த்துகிறார்கள்?

ஓட்டல்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்திவிட்டன.​ டீக் கடைகளில் ஒரு கோப்பை தேநீர் விலை கிராமப்புறங்களில் ரூ.4 ஆகவும் நகரங்களில் ரூ.5 ஆகவும் உயர்ந்துவிட்டது.​ மற்ற உணவுப் பண்டங்களின் விலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.​ அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு செய்தி வந்தவுடன் முதலில் உயர்ந்தது வீட்டு வாடகை என்பது,​​ வாடகைக்குக் குடியிருப்போருக்குத் தெரியும்.

இதிலும் ராஜதந்திரிகளாகச் செயல்படும் பெரும் நிறுவனங்கள் தங்கள் நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளின் ​ விலையை உயர்த்தாமல் அதில் உள்ள எடையை மட்டும்,​​ 100 கிராம் என்பதை 80 கிராமாகக் குறைத்து மாயாஜாலம் காட்டுகின்றன.​ முன்பெல்லாம் 250 கிராம் இருந்த பாக்கெட்டுகள் எல்லாமும் இப்போது 200 கிராம் பாக்கெட்டுகளாக மாறி ரொம்ப காலமாகிறது.​ நுகர்வோர்தான் பாவம்,​​ அரை கிலோ பாக்கெட் விலையில் பாதிதான் கால்கிலோ பாக்கெட் விலையும் என்று நினைத்து ஏமாறும் நுகர்வோர் அதில் அச்சிட்டுள்ள எடையைப் பார்த்தால் தெரியும்,​​ ஏமாந்துகொண்டிருப்பது.

​ மாதம் ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஒழிய சராசரி இந்தியன் இன்றைய விலைவாசியில் வாழ வழியே இல்லை போலிருக்கிறதே!
நன்றி : தினமணி

காங்கிரஸின் தந்தை ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் 125-ம் ஆண்டின் தொடக்கவிழா இன்று முதல் (டிச. 28) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமானதொரு கட்டம்.

1885 டிசம்பர் 28-ம் தேதி மும்பை நகரின் கோவாலியா குளக்கரையிலிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது.

பிற்காலத்தில் இந்தியாவை அடக்கி ஆண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களைப் படிப்படியாக நடத்தி, இறுதியில் "வெள்ளையனே வெளியேறு' என்ற மகத்தான போராட்டத்தையும் நடத்திய காங்கிரஸ் கட்சி உருவாக முன் நின்றவர் ஓர் ஆங்கிலேயர்தான். அவர் அப்பொழுது இருந்த ஆங்கிலேயர் ஆட்சியில் (ஐ.சி.எஸ்.) இந்திய நிர்வாகப் பணி அதிகாரியாகப் பணியாற்றி ஆங்கில அதிகாரத்தின்கீழ் நடைபெற்ற பல்வேறு தவறுகளையும், குற்றங்களையும் நேரடியாகக் கண்டு வெறுப்படைந்த நிலையில் தமது பதவியிலிருந்து வெளியேறி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு முழு முயற்சி எடுத்தார்.

1829 ஜூன் 6-ம் தேதி இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாக ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆலன் ஓர் ஐ.சி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார்.

பெரும்பாலான வெள்ளை அதிகாரிகளைப்போலல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு உண்மையாகப் பாடுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்ற முற்பட்டு, எட்டாவா மாவட்டத்தில் பல இலவசத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார். அந்தப் பள்ளிகளில் இந்தி அல்லது உருது பயிற்று மொழியாக இருந்தது. இதற்கு முன்னதாக, ஆங்கிலக் கல்விமுறையில் முற்போக்கான அறிவியல் பாடங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்தி வங்காளத்தில் ராஜாராம் மோகன் ராய் கோல்கத்தாவில் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களைத் திறப்பதில் ஈடுபட்டார். ஆங்கில ஆட்சியின் உத்தரவைப் புறக்கணித்து தமது சொந்தச் செலவில் எட்டாவா நகரில் 1856-ல் ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆலன் தொடங்கினார். ஆலன் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் பிற்காலத்தில் அந்தப்பகுதி "ஹியூம் கஞ்ஜ்' என்று வழங்கப்பட்டு அது மருவி தற்பொழுது "ஹோம் கஞ்ஜ்' என அழைக்கப்படுகிறது.

1857-ல் சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு ஆங்கில மேலதிகாரிகளின் 1859 ஜனவரி சுற்றறிக்கையின்படி இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தச் சுற்றறிக்கைக்குப் பதிலாக 1859 மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் ஆலன் பின்வரும் கருத்தை வலியுறுத்தினார்: ""இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் முயற்சி அதிகமாக வேண்டும் என்று இதற்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் போட்ட உத்தரவு உள்ளது.

அதன்படி தொடர்ந்து கல்வி அறிவைப் பரப்புவது நல்லது. கல்வி அறிவு மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் அது அரசுக்கு நன்மை பயக்கும். அறியாமையில் மக்களை அடக்கி வைப்பதால் கடைசியில் எதற்கும் அடங்காத ஆவேசம் மக்களுக்கு ஏற்பட்டு எதிர்ப்படும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் அவர்கள் உடைத்தெறிந்துவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன.

மக்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டி அவர்களுடைய மதிப்பையும், நம்பிக்கையையும் பெறுவதில்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்''.

சிப்பாய்க் கலகத்தை அடக்கிவிட்ட இறுமாப்பில் ஆலன் தந்த இந்த ஆலோசனையை ஆங்கில மேலதிகாரிகள் அலட்சியப்படுத்திவிட்டனர்.

இவ்வாறு ஆங்கில அரசாங்கம் மேற்கொண்ட பற்பல சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி அதனால் கிடைக்கும் ஏராளமான வருவாயை அரசாங்கம் ஆண்டுதோறும் பெருக்கிக் கொள்வதை ஆலன் கண்டித்தார். அதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழைகளின் குடும்பங்கள் படும் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் தனது வரி வசூலை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும் என்று 1860 மே மாதத்தில் ஆலன் எழுதிய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

ஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்பொழுது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில் விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறையில் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார்.

1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன் ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. உடனே, ஆலன் செயலாளர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு அப்பொழுது இருந்த வடமேற்கு மாகாணத்தின் (தற்கால உத்தரப்பிரதேசம்) வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக அனுப்பப்பட்டார். அப்பொழுது இருந்த பத்திரிகைகள் அனைத்தும் கடுமையான முறையில் ""மிக நேர்மையான ஓர் அதிகாரி ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார்'' என்று கண்டித்தன.

1882 ஜனவரி முதல் நாளில் தமது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்துவிட்டார். அதன் பிறகு இந்திய மக்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று அவருக்கு இருந்தது. அது, ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தி தக்க முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியா பற்றிய ஓர் அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்று இருந்த நண்பர்கள் இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இந்திய மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள்.

இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கோல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளுக்கு 1883, மார்ச் 1-ல் சிறந்ததொரு வெளிப்படையான வேண்டுகோளை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

""மிகவும் உயர்தரமான கல்வியைப் பெற்றுள்ள உங்களிடம்தான், நேர்மை, மன உறுதி, சமுதாய நீதி, அரசியல் ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றமடைவதற்கான பொறுப்பும், சக்தியும் இருக்கின்றன. தனிப்பட்ட மனிதனாகவோ அல்லது ஒரு நாடாகவோ இருந்தாலும் முன்னேற்றம் என்பது உள்ளிருந்து வெளிப்பட வேண்டுமே தவிர, என்னைப்போன்று நாட்டுக்கு நல்ல நண்பர்களாக உள்ள வெளிநாட்டவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. வெளிநாட்டிலிருந்து உங்களுக்குத் தேவையான உதவிகள், பணம், ஆதரவு கிடைக்கலாம். உங்களுக்காக அவர்கள் தியாகம் செய்யவும், போராட்டங்கள் நடத்தவும் முன்வரலாம். இருந்தாலும், தேசிய உணர்வு என்பது உங்களிடம்தான் உள்ளது. அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. இப்பொழுது உங்களுக்கு மிகவும் இன்றியமையாதவை: ஒற்றுமை, உறுதியான அமைப்பு, தெளிவான செயல்திட்டம்... உங்களில் ஐம்பது பேர் தன்னலமற்ற முறையில் எடுத்த காரியத்தை முடிக்கும் திறனுடன் இவ்வாறான ஓர் அமைப்பை உருவாக்க முன்வந்தால்தான், இந்தியா வளர்ச்சியடைவதற்கான வெற்றிப் பயணம் தொடங்கிவிட்டதாக ஆகும்...''

ஆலன் பற்றி இந்திய மக்களுக்கு மதிப்பும், நம்பிக்கையும் இருந்த காரணத்தினால் அவர் விடுத்த இந்த வேண்டுகோள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் பற்பல நகரங்களிலிருந்தும், மாகாணங்களிலிருந்தும் வந்த ஆதரவின்படி "இந்திய தேசிய சங்கம்' என்னும் பெயரில் ஆலன் முயற்சியின் விளைவாக இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு தேசிய அமைப்பு உருவானது. இதற்கான முன்னேற்பாடுகள் ஓரளவு செய்யப்பட்டபிறகு, 1885 மார்ச் மாதத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் கூட்டத்தில், இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டை புணேயில் 1885 டிசம்பர் 25-31 வரை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆயினும், குறிக்கப்பட்ட மாநாட்டுத் தேதிக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக புணேயில் கடுமையான பிளேக் நோய் பரவிய காரணத்தினால், அந்த மாநாடு மும்பை நகருக்கு மாற்றப்பட்டது. இதற்கான பொறுப்பை மும்பை மாகாண அமைப்பு ஏற்றது. அதன்படி, மும்பையில், கோவாலியா குளத்தின் அருகில் இருந்த கோகுல்தாஸ் பள்ளிக்கூடத்தில் இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாடு கூட்டப்பட்டது.

1885 டிசம்பர் 28-ல் மும்பையில் கூடிய இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டில், மும்பை, வங்காளம், மதராஸ் மாகாணங்களிலிருந்து 72 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சர். வில்லியம் வெட்டர்பர்ன் (ஐ.சி.எஸ். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆலனின் நெருங்கிய நண்பர்), எம்.ஜி. ரானடே (மும்பை சட்டமன்ற மேலவை உறுப்பினர், உயர் நீதிமன்ற நீதிபதி) மற்றும் பல்வேறு துறை விற்பன்னர்கள் கலந்துகொண்டனர்.

ஆலன் ஹியூம் முன்மொழிய, எஸ். சுப்ரமணிய ஐயர் (மதராஸ், பிரபல வழக்கறிஞர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி). மாநாட்டின் வரவேற்புக் குழுவின் செயலாளர் கே.டி. டெலாங் (மும்பை, பிரபல வழக்கறிஞர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் வழிமொழிய, 1885, டிசம்பர் 28-ல் இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைவராக டபுள்யு.சி. பானர்ஜி (கோல்கத்தா, பிரபல வழக்கறிஞர்) நியமிக்கப்பட்டார்.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: இந்திய நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியர்களுக்குத் தகுந்த வாய்ப்புத் தருவதற்காகத் தேர்ந்தெடுக்கும் குழு இந்தியாவிலும், இலங்கையிலும் அமைக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆங்கில அரசின் செயலாளர் குழு நீக்கப்பட வேண்டும். மாகாண சட்டசபைகளுக்கு மக்கள்தொகைக்குத் தக்கவாறு உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி, மாகாணத்தின் நிதிநிலை அறிக்கையைக் கவனித்து மாகாண நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை சட்டமன்றங்களுக்கு வழங்க வேண்டும்.

இந்திய அலுவல் குழுவின் 1860 தீர்மானப்படி ஐ.சி.எஸ். தேர்வு ஒரேசமயத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்கள் மேலும் பயிற்சி பெற இங்கிலாந்து அனுப்பப்பட வேண்டும். இந்திய அரசாங்க நிதியிலிருந்து தற்பொழுது ராணுவத்துக்குச் செலவிடப்படும் அதிகமான தொகையைக் குறைப்பதுடன், ஆங்கிலப் பேரரசின் செலவுகளை இந்தியாவின் மீது சுமத்தக்கூடாது. அரசாங்கத்தின் ராணுவச் செலவு அதிகப்படுத்தப்பட வேண்டுமென்றால் சுங்க வரி, வருமான வரியை உயர்மட்ட வகுப்பினருக்கும் விதித்து வருமானத்தை உயர்த்த வேண்டும். வட பர்மா பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருப்பதை இம் மாநாடு கண்டிப்பதுடன், இது மிகவும் தேவையான ஒன்று என்றால், இந்திய நிர்வாகத்திலிருந்து பர்மா முழுவதையும் தனிமைப்படுத்தி ஆங்கில ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொரு மாகாணத்திலுள்ள அரசியல் சங்கங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்தத் தீர்மானங்களின்படி மாகாணங்கள் தத்தம் நிலைமைக்கு ஏற்றவாறு அவற்றை நி றைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இந்திய தேசிய சங்கத்தின் அடுத்த மாநாடு 1886 டிசம்பர் 28-ம் தேதி கோல்கத்தாவில் நடைபெறும்.

மும்பையில் கூடிய இந்த மாநாடுதான் இந்திய தேசிய காங்கிரஸின் தொடக்கம் என்று கூற வேண்டும். அப்பொழுதைய பத்திரிகைகளில் இந்த மாநாடு பற்றி நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டன.

முக்கியமாக, "பம்பாய் கெஸ்ட்' என்ற ஆங்கில ஏடு எழுதியதாவது: ""பம்பாயில் கூடிய மாநாடு இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாதவாறு இந்தியாவிலுள்ள பல்வேறு இன, கலாசார, மத சார்புடையவர்கள் ஓரிடத்தில் கூடி இந்தியா முழுமைக்கும் ஒன்றுபட்ட ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்கி இருப்பது மிகவும் தனித்தன்மையும், நம்பிக்கையும் உடைய சம்பவமாகும்.''

மும்பை மாநாட்டுக்கு முன்னதாக இந்தியாவில் ஆங்காங்கு உள்ள படித்த இந்தியர்கள் சிறுசிறு அமைப்புகளை வைத்திருந்தார்கள். மதராஸில் மகாஜனசபா (1849), கல்கத்தாவில் இந்தியா லீக் (1875), இந்தியன் அசோசியேஷன் (1876), பம்பாயில் பம்பாய் அசோசியேஷன் (1852), புணேயில் சர்வஜனிக் சபா (1867) போன்ற பல அமைப்புகள் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நிகரான வேலைவாய்ப்புகளும், சலுகைகளும் தரப்பட வேண்டுமென்று அவ்வப்பொழுது தீர்மானங்களையும், முறையீடுகளையும் செய்து வந்தன. ஆயினும், ஆலன் தொடங்கிய இந்திய தேசிய சங்கத்தின் மாநாட்டின் மூலம் தனிப்பட்டு இயங்கி வந்த பல சங்கங்களை ஓர் அமைப்பின்கீழ் - அதுவே நாளடைவில் "இந்திய தேசிய காங்கிரஸ்' என்று நிலைபெற்றது.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 1885 முதல் 1906 வரை தொடர்ந்து காங்கிரஸ் அமைப்பின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஆண்டுதோறும் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மற்றவர்கள் தலைவராவதற்கு உறுதுணையாக இருந்தாரே தவிர ஒருபோதும் தாம் தலைவராவதற்கு உடன்படவில்லை. ஐ.சி.எஸ். அதிகாரியாக இந்தியா வந்த ஆலன் உண்மையில் இந்திய மக்களுக்குப் பணிபுரியும் குறிக்கோளுடன் இருந்ததல்லாமல், அவர் பணிபுரிந்த காலத்தில் விஞ்ஞான முறையில் பறவை இனங்களை ஆராய்ச்சி செய்து அவர் வெளியிட்ட பல ஆராய்ச்சி நூல்கள் உலக விஞ்ஞானிகள் கண்டு பாராட்டும் அளவுக்குச் சிறந்து விளங்கின. "இந்தியப் பறவை இயல் தந்தை' என ஆலன் போற்றப்படுகிறார்.

இந்தியாவின் முதுபெரும் தலைவர் தாதாபாய் நௌரோஜி தொடங்கி இந்திய விடுதலைப் போராட்டத்தை முடித்து வைத்த மகாத்மா காந்தி வரை மாபெரும் தலைவர்கள் பலர் இந்திய தேசிய காங்கிரûஸ ஒரு மாபெரும் அமைப்பாக வளர்ச்சியடையச் செய்தார்கள். ஆயினும், ஆலன் ஆக்டேவியன் ஹியூமைத்தான் "இந்திய காங்கிரஸின் தந்தை' என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பாக இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்ற மகாத்மா காந்தி, தமது தொடக்க உரையில் பின்வருமாறு கூறினார்:

""நான் மிகப் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். காங்கிரஸ் அமைப்பு என்பது ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஓர் ஆங்கிலேயரின் கருத்தில் உருவான ஒன்று. அதனால் அவர்தான் காங்கிரஸின் தந்தை ஆவார்.''

ஐ.சி.எஸ். அதிகாரிகளாக இந்தியா வந்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன் ஆகிய இருவரும் இந்தியக் குடிமக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்கும், பிறகு இந்திய தேசியத்தை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வளர்த்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. இருவரும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்கள். வரலாற்றில் நீண்டகாலமாக இங்கிலாந்தை எதிர்த்து தங்கள் உரிமைகளுக்காக ஸ்காட்லாந்து மக்கள் போராடி இருக்கிறார்கள்.

அந்தப் பாரம்பரிய உணர்வு இன்றளவும் நீடித்து வருகிறது. அந்த வகையில் ஆலன், வெட்டர்பர்ன் இருவரும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் அநீதிகளை எதிர்த்துப் போராடினார்கள்.
கட்டுரையாளர் : இரா. செழியன்
நன்றி : தினமணி

அசைவப் பிரியர்கள் வெறுக்கும் 'கருவாடு': கேரளா, புதுச்சேரியில் ஏறுமுகம்

சுகாதாரத்தைக் காரணம் காட்டி, 'தமிழக புகழ்' கருவாட்டை, அசைவ பிரியர்கள் புறக்கணிப்பது அதிகரித்து வருகிறது. ஆடு, கோழி, மீன், முட்டை என அசைவ உணவுகள் எத்தனை இருந்தாலும், கருவாடுகள் மீது அசைவ பிரியர்களுக்கு தாக்கம் அதிகம். வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு, தாய்மார்கள் அன்புடன் கருவாடு அனுப்பும் பழக்கம், இன்றும் நடைமுறையில் உள்ளது. கிராமம் முதல் நகர் வரை தமிழகத்தில் கொடி கட்டி பறந்த கருவாடு விற்பனை, சமீபகாலமாக தொய்வடைந்து வருகிறது.

கடலோரப் பகுதிகளில் நிலவும் சுகாதாரக் கேட்டால், கருவாடுகளை வாங்க அசைவ பிரியர்கள் தயங்குகின்றனர். வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், கிடைத்த இடத்தில் மீன்களை கருவாடாக மாற்றும் முயற்சியில் மீனவர்கள இறங்குகின்றனர். மீனுடன் ஒட்டிக் கொள்ளும் கிருமிகள், காய்ந்த பிறகும் அதனுடன் ஒட்டிக்கொள்ளும் என்பதால் தான் இந்த பீதி. தமிழக கடலோர பகுதிகளில் சுகாதாரம், சமீப காலமாக கேள்விக்குறியாக உள்ளது. மர்ம காய்ச்சல்கள் வேறு பரவி வருகின்றன. இதனால், கருவாடு வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில், கேரளாவில் கருவாடு பதப்படுத்த நவீன வசதிகள் உள்ளன. புதுச்சேரியிலும் ஓரளவுக்கு வாய்ப்புகள் இருப்பதால் இங்குள்ள கருவாட்டுக்கு, தமிழகத்தில் நல்ல கிராக்கி உள்ளது. அதே நேரத்தில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலோரப் பகுதிகளில் வரும் கருவாட்டுக்கு, விற்பனை மந்தமாகவே உள்ளது. தமிழக மீனவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தராததும், இந்நிலைக்கு முக்கிய காரணமாகும். இதே நிலை தொடர்ந்தால், நாளடைவில் இங்குள்ள மீன்களையும், அசைய பிரியர்கள் வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.
நன்றி : தினமலர்