Monday, December 28, 2009

சுமக்கிறவனுக்குத்தான் வலி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னைக்காக அவைத் தலைவரின் உள்வட்டத்திற்குள் நுழைந்து கூச்சல் போட்டதற்குக் காரணம்,​​ தேர்ந்தெடுத்த மக்கள் தங்களைப் பார்த்து சங்கடமான கேள்விகளைக் கேட்டுவிடக்கூடாதே என்ற எண்ணத்தினால்தான்.​ பத்திரிகைகளும் ஊடகங்களும் விலைவாசி உயர்வில் இவர்கள் காட்டிய அதீத அக்கறையைக் கண்டு,​​ நல்லெண்ணம் கொண்டுவிடுவார்கள் என்பதால்தான்.​ ​

ஆனாலும்,​​ மத்திய அரசு இதைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ அல்லது மிகச் சரியாகவே புரிந்துகொண்டதாலோ என்னவோ, நாடாளுமன்ற உணவுக்கூடத்தில் சப்பாத்தி ஒரு ரூபாய்,​​ டீ ஒரு ரூபாய்,​​ சாப்பாடு ரூ.12.50,​ பிரியாணி ரூ.22 என்று - பாவம் வறுமையில் பரிதவிக்கும் மக்களவை உறுப்பினர்களுக்காக குறைந்த விலையை நிர்ணயம் செய்தது.​ பொதுச் சந்தையில் எந்தவொரு பொருளின் விலையும் ஒரு பைசாகூட குறையவில்லை.

இது போதாதென்று,​​ மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்தப் பாடுபட வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சொல்ல,​​ மத்திய அரசின் தவறான கொள்கையால்தான் விலையேற்றம்; இதை மாநில அரசின் மீது தள்ளிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் பதிலடி கொடுக்க,​​ ஒரு சொற்போர் நடந்துகொண்டிருக்கிறது.​ இதனால் எந்தப் பொருளின் விலையும் ஒரு ரூபாய் கூட குறையப் போவதில்லை.

ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறது மத்திய அரசு.​ விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்றும் கூறுகிறது.​ ஆனால் பொருள்களின் விலையோ தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகிறது.​ இந்திய அரசு விலைவாசி உயர்வை மொத்தவிற்பனை விலைப் பட்டியல் ​(ஹோல்சேல் பிரைஸ் இன்டக்ஸ்)​ மூலம் கணக்கிடுகிறது.​ மொத்தவிற்பனை விலைப் பட்டியல் வாரம் தோறும் கணக்கிடப்பட்டாலும்கூட,​​ இதன் மூலம் கிடைக்கும் விலைஉயர்வு சராசரியாக 0.3 சதவீதமாகவே இருக்கிறது. ஏனென்றால்,​​ மொத்தக் கொள்முதல் செய்து அதைப் ​ பதுக்கி,​​ அல்லது சில்லறை வணிகமாக மாற்றப்படும்போதுதான் ஒரு பொருளின் விலை குறைந்தபட்சம் 100 சதவீதத்திலிருந்து 400 சதவீதம் வரை உயர்கிறது.

அரசு வெளியிடும் நுகர்வோர் விலைப் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகத் தெரியும்.​ ஒவ்வொரு மாதமும் வெளியாகும் இந்தப் பட்டியலில் விலைஉயர்வு என்பது 9 முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

விலைவாசி உயர்வைக் கணக்கிடும்போது குறைந்தபட்சம் 435 வகைப் ​ பொருள்களின் விலையைக் கணக்கிடுகின்றனர்.​ இதில் அதிக முக்கியத்துவம் தரும் பொருள்ககளான-​ மின்சாரம்,​​ பெட்ரோலியப் பொருள் போன்றவைகளின் விலை மாற்றமின்றி இருக்கின்றன.​ ஆனால் கணக்கிடுவதில் குறைந்த முக்கியத்துவம் பெறும் காய்கறிகள்,​​ இறைச்சி போன்ற உணவுப் பொருள்களின் விலை சந்தையில் தாறுமாறாக உயர்ந்து கிடக்கிறது.​ இதனால்தான் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அரசு சொன்னாலும்,​​ நடுத்தரக் குடும்பத் தலைவனின் கையைக் கடிக்கிறது.

சாதாரணமாக இந்தியர்கள் உணவுக்காகத் தங்கள் வருவாயில் 42 சதவீதத்தைச் ​ செலவழிக்கின்றனர்.​ போக்குவரத்துக்கு 9 சதவீதமும்,​​ பொழுதுபோக்குக்கு 8 சதவீதமும் செலவிடுகின்றனர்.​ மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது.​ இதில் உணவுப் பொருள்களின் விலை கூடிக்கொண்டே வந்தால்,​​ அவர்கள் தங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை உணவுக்கே கொடுத்துவிட்டால்,​​ மற்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள்.​ இவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும்,​​ தங்கள் மருத்துவச் செலவுக்கும்,​​ சேமிப்புக்கும் என்ன செய்வார்கள்?

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் கிலோ ஒரு ரூபாய் அரிசியை அனைத்துக் குடும்பங்களுமே வாங்கி,​​ அதைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை நிஜம் என்றே வைத்துக்கொண்டாலும்,​​ எண்ணெய்,​​ பருப்பு,​​ மிளகாய்,​​ மிளகு,​​ பூண்டு,​​ வெங்காயம் இவற்றின் விலைஉயர்வு சாதாரண குடும்பத்துக்குத் தாளமுடியாத சுமையாக இருக்கிறது.​ தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு ரூபாய் அரிசிதான் வாங்குகிறார்கள் என்றால்,​​ பொன்னி அரிசியின் விலை வாங்குவார் இல்லாததால் குறைந்திருக்க வேண்டுமல்லவா,​​ 25 கிலோ சிப்பம் விலை ரூ.1000-த்தை நெருங்குகிறதே ஏன்?​ ​

கடந்த ஆறு மாதங்களில் சமையல் எண்ணெய்,​​ பருப்புவகை,​​ அரிசி,​​ கோதுமை,​​ காய்கறிகள் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.​ விலை உயர்வு என்பது,​​ தேவை -​ உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி பெருகினால்தான் உண்டாகும் என்ற பொருளாதார வாய்ப்பாடுகள் எல்லாமும் பொய்யாகும் வகையில் இந்த விலை உயர்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விந்தையிலும் விந்தை.

2008-09 சாகுபடி ஆண்டுக்கான விளைச்சல் பட்டியலில் 233 மில்லியன் "ரெக்கார்டு' உற்பத்தி என்று அரசு சொல்கிறது.​ அதாவது அரிசி 99 மில்லியன் டன்,​​ கோதுமை 80 மில்லியன் டன்,​​ 39 டன் தானிய வகைகள்,​​ 15 டன் பருப்பு வகைகள் என்று புள்ளிவிவரம் தரப்படுகிறது.​ இதில் பருப்பு வகைகள் மட்டும் தேவையைவிட 4 மில்லியன் டன் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,​​ மற்றவர்கள் யாரும் பற்றாக்குறை இருப்பதாகச் ​ சொல்லவில்லை.​ அப்படியானால் ஏன் விலை உயர்கிறது.​ அல்லது யார் விலையை உயர்த்துகிறார்கள்?

ஓட்டல்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்திவிட்டன.​ டீக் கடைகளில் ஒரு கோப்பை தேநீர் விலை கிராமப்புறங்களில் ரூ.4 ஆகவும் நகரங்களில் ரூ.5 ஆகவும் உயர்ந்துவிட்டது.​ மற்ற உணவுப் பண்டங்களின் விலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.​ அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு செய்தி வந்தவுடன் முதலில் உயர்ந்தது வீட்டு வாடகை என்பது,​​ வாடகைக்குக் குடியிருப்போருக்குத் தெரியும்.

இதிலும் ராஜதந்திரிகளாகச் செயல்படும் பெரும் நிறுவனங்கள் தங்கள் நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளின் ​ விலையை உயர்த்தாமல் அதில் உள்ள எடையை மட்டும்,​​ 100 கிராம் என்பதை 80 கிராமாகக் குறைத்து மாயாஜாலம் காட்டுகின்றன.​ முன்பெல்லாம் 250 கிராம் இருந்த பாக்கெட்டுகள் எல்லாமும் இப்போது 200 கிராம் பாக்கெட்டுகளாக மாறி ரொம்ப காலமாகிறது.​ நுகர்வோர்தான் பாவம்,​​ அரை கிலோ பாக்கெட் விலையில் பாதிதான் கால்கிலோ பாக்கெட் விலையும் என்று நினைத்து ஏமாறும் நுகர்வோர் அதில் அச்சிட்டுள்ள எடையைப் பார்த்தால் தெரியும்,​​ ஏமாந்துகொண்டிருப்பது.

​ மாதம் ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஒழிய சராசரி இந்தியன் இன்றைய விலைவாசியில் வாழ வழியே இல்லை போலிருக்கிறதே!
நன்றி : தினமணி

No comments: