Friday, September 24, 2010

தேசத் துரோகிகள்!

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ 70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் 262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.

ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.

அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.

70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.

எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்

கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?

இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

 நன்றி : தினமணி  


Tuesday, September 21, 2010

மக்களிடம் மறைப்பானேன்?

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு கூறியுள்ள நடவடிக்கைகள் மிகமிக காலம் தாழ்ந்தவை. இந்த முடிவுகளை எப்போதோ தமிழக சுகாதாரத் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முடிவை அறிவிக்க 800 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகவும், 10-க்கும் மேற்பட்டோர் இறக்கவும் வேண்டியிருந்தது.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றாலும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். அரசு தற்போது அறிவித்துள்ள, ரூ. 24,000 ஆண்டு வருமானம் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவசத் தடுப்பூசி என்பது அர்த்தமற்றது.

நோய்த்தொற்றும் கிருமி, ஏழை என்று கண்டதா, பணக்காரன் என்று கண்டதா?

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதே, கேரளத்தின் வழியாக கோவைக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக சுகாதாரத் துறை, இந்த நோய் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறியது. செம்மொழி மாநாட்டுக்கு வருவோரை அச்சறுத்துவதாக இருக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது என்று கருதினாலும், மாநாடு முடிந்த பிறகாகிலும், சுகாதாரத் துறை வேகமாகச் செயல்பட்டு, தடுப்பூசி போடுவதை அமலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

தமிழ்நாட்டில், மாநில எல்லைப் பகுதிகளில் சிலர் காய்ச்சலால் இறந்தபோது, இதனை பன்றிக் காய்ச்சல் என்று அரசல்புரசலாக மருத்துவர்கள் மூலம் இறந்தவரின் உறவினர்கள் அறிந்தபோதிலும், அதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும், சான்றளிக்கவும் மருத்துவமனைகள் தயக்கம் காட்டின. மர்மக் காய்ச்சலால் மரணம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது.

வேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்று கடையநல்லூரில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்படுகிறது. ஆனால் சான்றிதழில் மட்டும், பல உறுப்புகள் செயலிழந்ததால் மரணம் என்று மொட்டையாக மருத்துவமனை தெரிவிக்கிறது. செய்திகள் யாவும் அந்த மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்றே வருகின்றன. ஆனால் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இந்த மாவட்டத்தில் யாரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தன. ஒசூரைச் சேர்ந்தவர், பெங்களூரில் இறந்ததால்தான் அவருக்குப் பன்றிக் காய்ச்சலால் மரணம் என்று சான்று கிடைக்கிறது.

கோவையில் இறந்தவர்களில் ஒருவர் டாக்டர் என்பதாலும், சென்னையில் இறந்தவர் ஒருவர் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு பிரிவைச் சேர்ந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பதாலும், ஒருவேளை வேறு வழியின்றி, பன்றிக் காய்ச்சல் என்று ஒப்புக் கொண்டார்களே தவிர, அவர்கள் சாதாரண நபர்களாக இருந்திருந்தால் அவர்களும் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கும். ஒரு தொற்றுநோய் பரவி சிலர் சாவதை ஏதோ ஆளுகின்ற அரசியல் கட்சியின் வீழ்ச்சியாகப் பார்க்கப்படும் அச்சம்தான் ஒரு நிர்வாகத்தை இவ்வாறு உண்மையை மறைக்கவும், தள்ளிப் போடவும் வைக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என்பதை வெளிப்படையாக அறிவித்தால், எந்தெந்தப் பகுதிகளில் அதிகம் என்று கண்டறிந்தால் அந்தந்தப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போடவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். நோயை முதல்கட்டத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுவிட்டாலே, தமிழக அரசுக்கு இழுக்கு என்பதாகவும், ஏதோ அமைச்சரின் - அரசின் திறமையின்மை என்பதாக எதிர்க்கட்சிகள் பேசும் என்பதாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் தாக்குதல் ஏற்பட்டபோதும் இதே போன்று மக்கள் மடிந்துகொண்டே இருக்க, தமிழக சுகாதாரத் துறை மறுத்துக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்ந்தபோது, சிக்குன் குனியா தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது.

மீண்டும் சிக்குன் குனியாவின் இரண்டாவது தாக்குதல் - தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவியபோது அப்போதும் அதை மர்மக் காய்ச்சல் என்றே பெயர் புனைந்தார்கள். ஆனால் மருத்துவர்களோ இதனை "செகன்டரி சிக்குன் குனியா' என்று சொல்லி அதற்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இப்போது அதே நிலைமைதான் பன்றிக் காய்ச்சலுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு நோய்த் தொற்று இருக்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்டு அதைத் தடுக்கவும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யவும் முற்படுவதுதான் சுகாதாரத் துறையின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சாவோர் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்வது சரியான வழிமுறை அல்ல.

உண்ண உணவு கிடைக்காமல் மக்கள் சாகும்போதுதான் ஓர் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுமே தவிர, ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்பதை முன்னதாகவே ஒப்புக்கொள்வதால் களங்கம் ஏற்பட்டுவிடாது. மாறாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பு மருந்துகளை உரியநேரத்தில் கொண்டுசேர்த்த பெருமை கிடைக்கும். நமது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பற்றிக் கூறும்போது முதல்வர் கருணாநிதியின் "பூம்புகார்' திரைப்படப் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது - "வரும் முன் காப்பவன்தான் புத்திசாலி, வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி!'
நன்றி : தினமணி

Friday, September 17, 2010

ஏன்? எப்படி? எதற்கு?

ஜாதிவாரி கணக்கெடுப்பை 2011 ஜூன் மாதத்தில் தொடங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என்பது இத்தனை காலமாக இதைக் காலம் தாழ்த்தியதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். இருந்தும் கூட்டணி ஆட்சியில் ஆதரவாக நிற்கும் அரசியல் கட்சிகளின் நெருக்குதலுக்கு ஆளான மத்திய அரசு, வேறுவழியின்றி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல்வாதிகளின் கலக அரசியலுக்குத் துணைபோகும் என்று ஒரு சாரார் எதிர்த்தாலும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசின் சலுகைகளையும் பயன்களையும் பெறவில்லை என்று இன்னொரு சாரார் வலியுறுத்தி வந்தனர். ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதென மத்திய அரசு தீர்மானித்து, அறிவித்துள்ளது.

இந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்செலவு

ரூ.2000 கோடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிடக் கூடுதலாகவும் வாய்ப்பு உண்டு. இந்த முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால், வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு இதையும் சேர்த்திருந்தால், இந்தச் செலவை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும்.

இருப்பினும்கூட, இப்போது இத்தனை பெரும் பொருள்செலவில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் ஜாதி, அவர்களின் வங்கி இருப்பு, சொத்துகள், அரசால் பெற்ற நலத்திட்டப் பயன்கள், கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பெற்ற சலுகைகள், அவர்தம் குழந்தைகள் பெற்றுவரும் சலுகைகள், கலப்பு மணம் என்றால் அதன் விவரம், வருமான வரி செலுத்துபவரா போன்ற அனைத்துத் தகவல்களையும் பெற்று, இவர்கள் ஏற்கெனவே மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கொடுத்த தகவல்களையும் ஒப்பீடு செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்தத் தகவல்கள் சரியானவையாக இருக்கும்.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இருக்கும் ஜாதி, இன்னொரு மாநிலத்தில் பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. சில மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோராக இருக்கும் ஜாதி, அண்டை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது. இந்த வேறுபாடுகளை, இந்தப் புள்ளிவிவரம் களைய முற்படுமா? அல்லது அந்தந்த மாநிலத்தில் தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதிகளை அந்தந்த வகைப்பாட்டிலேயே வைத்திருக்குமா?

புள்ளிவிவரத்தின்படி, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் கல்வி வாய்ப்புகளிலும், அரசுப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று விட்டார்கள் என்று தெரியவந்தால், அவர்களுக்கான ஒதுக்கீட்டு அளவைக் குறைத்தும், வாய்ப்பு பெறாதவர்களுக்காக இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்தும் சட்டத்தை மாற்ற முனைவார்களா?

÷பிரிட்டிஷ் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 70 ஆண்டு காலத்தில் இந்தியா மிகப்பெரும் மாறுதலை அடைந்துள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. குறிப்பாக, இடஒதுக்கீடு மூலம் பல சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனாலும், சலுகை மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த அதே குடும்பங்களே தொடர்ந்து சலுகையைத் தட்டிச்சென்று, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு நந்தியாகக் குறுக்கே நிற்பதைத் தடுக்கும் வகையில் "கிரீமி லேயர்' என்பதை அறிமுகம் செய்வதற்கும் அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டுச் சலுகை மூலம் டாக்டர் பட்டம் பெற்று பல லட்சம் சம்பாதித்தவர், தனது மகனுக்கும் இடஒதுக்கீட்டில் டாக்டர் படிப்புக்கு இடம்பெற்று, பல கோடி சம்பாதித்து, இப்போது பேத்திக்கும் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் இடம்பெறுவார் என்றால், அதே சமூகத்தின் இரு குடும்பங்களின் பலனை அவர் தட்டிப் பறிப்பதாகத்தானே அர்த்தம்? இப்படிப்பட்டவரை ஏன் "கிரீமி லேயர்' என்று கருதி, சலுகைகள் பெறுவதைத் தடுக்கக்கூடாது?

÷தனது சமூகத்துக்கே தடைக்கற்களாக இருக்கும் இத்தகைய சுயநலமிகளை இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சலுகைக்கு வெளியே நிறுத்த அரசு முற்பட்டால், அதை இதே அரசியல் தலைவர்கள் ஒப்புக்கொள்வார்களா? இடஒதுக்கீடு மூலம் அரசு வேலைவாய்ப்பு பெற்றவரின் குழந்தைகளில் ஒருவர் மட்டுமே அடுத்த முறை இச்சலுகையைப் பெற முடியும் என்று இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் அரசு தீர்மானிக்குமானால் அதை அரசியல்வாதிகள் ஏற்பார்களா?

ஏற்க மறுப்பார்கள் என்றால் - எந்த மாற்றமும் செய்ய உடன்பட மாட்டார்கள் என்றால், இந்தக் கணக்கெடுப்பு பொருளற்றது. வெறும் பொருள்செலவுதான் மிஞ்சும். அதற்காக மக்களின் வரிப்பணம் 2,000 கோடி ரூபாய் விரயமாக்கப்படுவதில் அர்த்தமேயில்லை.

ஜாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால், கணக்கெடுப்பு என்கிற பெயரில் ஜாதியம் நிலைநிறுத்தப்படுமானால், இது விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் முயற்சியாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி

Wednesday, September 8, 2010

ஞாயிறு தூற்றுதும்!

செப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்துவிட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

டாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமையே மலர்தூவி வணங்கிவிட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம்.

ஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக்கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுதபூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட! கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.

இப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே! எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும்! தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதேகூடத் தவறல்லவா?

இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா?' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல்பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)!

ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, "ஃபிரண்ட்ûஸ மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல!

இதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மின்வாரியம், தொலைத்தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல்கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால் மட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.

இதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை. சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும்! இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற அசட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.

நமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து!
நன்றி : தினமணி

Friday, September 3, 2010

காப்பது கடமை!

தகவல்பெறும் உரிமைச் சட்டம் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தச் சட்டம் முறையாகவும், பரவலாகவும் பயன்படுத்தப்பட்டால், அரசு நிர்வாகத்தில் காணப்படும் பல குறைகளை வெளிக்கொணரவும் அதன் மூலம் குறைகள் களையப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதில் பிரதமருக்கேகூட முதலில் தயக்கம் இருந்தது என்று கூறப்படுகிறது. இப்போதும்கூட, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒரு பிரிவினர் இந்தச் சட்டத்திலிருந்து பல பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு தரப்பட வேண்டும் என்கிற நீதித்துறையின் பிடிவாதம் இப்போதுதான் மெல்லமெல்லத் தளரத் தொடங்கி இருக்கிறது.

இத்தனை தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதற்கு, நாம் மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நன்றி கூறியே தீரவேண்டும். பிரதமரின் தயக்கத்தையும் மீறி காங்கிரஸ் தலைமை இந்தச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பதை நாம் வரவேற்காமல் இருந்தால் எப்படி?

தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து இப்போது இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் இன்னொரு சட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. பொதுநலத்தைக் கருத்தில்கொண்டு தவறுகளை வெளிப்படுத்தும் அதிகாரிகளும், பொதுநல அமைப்புகளும், ஏன் பத்திரிகைகளும், பாதிக்கப்படும் குற்றவாளிகளாலும், உயர் அதிகாரிகளாலும், அதிகார மையங்களாலும் தாக்குதலுக்கு ஆளாக நேர்வதைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியொரு சட்டத்துக்கான தேவை சமீபகாலமாக மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தவறுகளை அம்பலப்படுத்திய ஒன்பது பொதுநல ஊழியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கொலை நடந்து முடிந்ததும், "விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகளைத் தப்பவிட மாட்டோம்' என்று சம்பந்தப்பட்ட மாநில அரசும், காவல்துறையும் தெரிவிக்கின்றனவே தவிர, இதுவரை எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

கோலாப்பூரைச் சேர்ந்த தத்தா பாட்டீல் மே 31 அன்று கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 21 அன்று அதே மகாராஷ்டிர மாநிலம் பீத் என்கிற ஊரில் விட்டல் கீதே என்பவர் கொல்லப்பட்டார். ஏப்ரல் 11 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் கோலா ரங்கா ராவ், பிப்ரவரி 26 அன்று மகாராஷ்டிரத்தில் அருண் சாவந்த், பிப்ரவரி 14 அன்று பிகார் பெகுசராயில் சசிதர் மிஸ்ரா, பிப்ரவரி 11-ல் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் விஷ்ரம் லட்சுமண் தோதியா, ஜனவரி 13 அன்று பூனாவில் சதீஷ் ஷெட்டி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் பொறியாளராக இருந்த சத்யேந்திர துபே என்பவர், சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் இருந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். ஊழலை விசாரிப்பதற்குப் பதிலாக, சத்யேந்திர துபேயின் உயிருக்கு உலை வைத்துவிட்டார்கள். சத்யேந்திர துபேயின் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தொடர் வற்புறுத்தலின் பலனாக, மத்திய அரசு 2004-ல் ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, மத்திய கண்காணிப்பு ஆணையம் (சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன்) இதுபோன்ற பிரச்னைகளில், முறையீடுகளைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் தொடர்விளைவாகத்தான் இப்போது மக்களவையில் பொதுநல நோக்குடனான "ஊழலை அம்பலப்படுத்துவோரைப் பாதுகாக்கும் சட்டம் 2010' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு சட்டத்துக்கான தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. துணிந்து அரசு அதிகாரிகளோ, வேறு யாரோ பொதுநல எண்ணத்துடன் குற்றங்களை வெளிப்படுத்த முன்வந்தால்தானே தவறுகளை நாம் அடையாளம் காண முடியும்? அப்படி தகவல் தருபவர்களுக்கு, அவர்களது பதவிக்கும், உயிருக்கும் பாதுகாப்புத் தருவது என்பது அவசியமான ஒன்றாயிற்றே.

மேலை நாடுகளில், அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, தனியார் சமூகசேவை நிறுவனங்கள், மக்களிடம் பங்குகள் வசூலித்து நடத்தப்படும் உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோருமே ஊழலை வெளிக்கொணரவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ உதவினால், அந்த நாட்டு அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள். இங்கே மட்டும்தான் அவர்கள் பல சோதனைக்கு உள்ளாவதும், அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதும் நடைபெறுகிறது.

சற்று காலதாமதமாக வந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய சட்டம். சட்டம் இயற்றுவதுடன் கடமை முடிந்துவிடவில்லை. இதுபோலத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்களையும் தவறுகளையும் வெளிக்கொணரும் தைரியசாலிகளுக்குப் பொதுமக்கள் பின்துணை நல்க வேண்டும். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடாமல், நமக்காகப் பாடுபடும் அவர்களுக்காக நாம் குரல் எழுப்பியே தீர வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் மக்களாட்சித் தத்துவம் முறையாகச் செயல்படத் தொடங்கும்.
நன்றி : தினமணி

Thursday, September 2, 2010

சதை ஆடுகிறதே...!

பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.

வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது.

இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும், தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.

ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது.

இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை.

இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.

முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள்.

இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது.

நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!
நன்றி : தினமணி

Wednesday, September 1, 2010

மறுபக்கம்...

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் உச்சகட்டம்தான் தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவம்.

கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுச் சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த பஸ் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எரிக்கப்பட்ட சம்பவம் இன்றைக்கும் நமது மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. 44 சக மாணவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த கோகிலாவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரும் வெறிபிடித்த கும்பலுடைய ஆத்திரத்தின் விளைவால் எரிந்து சாம்பலான கொடூரமான சம்பவம் தமிழக சரித்திரத்திலேயே ஒரு கரும்புள்ளி.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சௌஹான் இருவரும் எழுதியிருக்கும் தீர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பாராட்டுக்குரியது. நமது இந்திய சமுதாயம் எப்படி மரத்துப்போன இதயங்களுக்குச் சொந்தமாகிவிட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு வருத்தத்துடன் பதிவு செய்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல நூறு பேர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேதவிர, அந்த அப்பாவி மாணவிகளை எரியும் பஸ்ஸிலிருந்து மீட்கவோ வெறிபிடித்த கும்பலை அடித்து விரட்டவோ ஒருவர்கூட தங்களது சுட்டுவிரலை அசைக்கவில்லை என்கிற இரக்கமற்ற தன்மையைத் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சேலத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் ஏனைய 25 பேருக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுபோலவே, இப்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருப்பதன்மூலம் இந்தியாவில் இன்னும் நீதி செத்துவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே அடிப்படைப் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இந்திய அரசியலில் காணப்படும் சில அநாகரிகமான போக்குக்கும் முடிவு கட்டப்படுமானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடையும் ஏனைய கட்சிகளின் போக்குமட்டும் பாராட்டக்கூடியதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிஜம்.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்கிற அறிஞர் அண்ணாவின் கோஷத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தைப்போல, தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.

தருமபுரியில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஏனைய நிகழ்வுகளில் பொதுச்சொத்துகளுக்குச் சேதமும் பொதுமக்களுக்குத் துன்பமும் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் வேறுபாடு.

தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெறிபிடித்த கும்பலாக்குவதன் மூலம் தங்களது தலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்து பரவலாகவே நமது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தொண்டர்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் உதவித்தொகை அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருவானேன்?

உணர்ச்சிவசப்படுபவர்களையோ, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைகளையோ ஆதரிக்க முடியாது, கூடாது என்று ஏதாவது ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுண்டா? சொல்ல மாட்டார்கள். பல லட்சம் ரூபாய் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளித்து, தனக்காக இத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தனர் என்று அதையே அரசியல் ஆதாயமாக்க விரும்புபவர்கள்தான் பெருவாரியான தமிழக அரசியல் தலைவர்கள்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த வன்முறையில் நாசப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகள் கொஞ்சமாநஞ்சமா? எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா? வன்னியர் போராட்டத்தின்போதும், வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோதும் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மட்டுமென்ன சாதாரணமானதா?

விடுதலைப் போராட்டத்தில் அன்னியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைப்போல, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளைப்போல ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குறிப்பாக, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வன்முறைக்கும், வெறிச்செயல்களுக்கும் தேவைதான் என்ன? நல்ல தலைவர்களாக இருந்தால் தங்களது தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை எப்படி அனுமதிக்கலாம்?

தனி மனிதன் செய்தால் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயல்களை, வெறிபிடித்த கும்பல் செய்தால் நியாயமாகி விடுகிறதே, இதற்கு நமது அரசியல் கட்சித் தலைவர்கள்தானே காரணம். கடமை உணர்வோடு, கண்ணியமாகவும் கட்டுப்பாடுடனும் தனது தொண்டர் கூட்டத்தை மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் தலைவர் இவர் என்று அடையாளம் காட்ட தமிழகத்தில் ஒருவர்கூட இல்லாத நிலையில், என்ன சொல்லி என்ன பயன்?

பொதுமக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும்போது, தேட முற்படும்போது தருமபுரியில் நடந்ததுபோல பஸ் மட்டுமா எரியும், மனித தர்மமே அல்லவா எரிந்து சாம்பலாகும்...
நன்றி : தினமணி