தகவல்பெறும் உரிமைச் சட்டம் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தச் சட்டம் முறையாகவும், பரவலாகவும் பயன்படுத்தப்பட்டால், அரசு நிர்வாகத்தில் காணப்படும் பல குறைகளை வெளிக்கொணரவும் அதன் மூலம் குறைகள் களையப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதில் பிரதமருக்கேகூட முதலில் தயக்கம் இருந்தது என்று கூறப்படுகிறது. இப்போதும்கூட, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒரு பிரிவினர் இந்தச் சட்டத்திலிருந்து பல பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு தரப்பட வேண்டும் என்கிற நீதித்துறையின் பிடிவாதம் இப்போதுதான் மெல்லமெல்லத் தளரத் தொடங்கி இருக்கிறது.
இத்தனை தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதற்கு, நாம் மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நன்றி கூறியே தீரவேண்டும். பிரதமரின் தயக்கத்தையும் மீறி காங்கிரஸ் தலைமை இந்தச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பதை நாம் வரவேற்காமல் இருந்தால் எப்படி?
தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து இப்போது இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் இன்னொரு சட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. பொதுநலத்தைக் கருத்தில்கொண்டு தவறுகளை வெளிப்படுத்தும் அதிகாரிகளும், பொதுநல அமைப்புகளும், ஏன் பத்திரிகைகளும், பாதிக்கப்படும் குற்றவாளிகளாலும், உயர் அதிகாரிகளாலும், அதிகார மையங்களாலும் தாக்குதலுக்கு ஆளாக நேர்வதைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படியொரு சட்டத்துக்கான தேவை சமீபகாலமாக மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தவறுகளை அம்பலப்படுத்திய ஒன்பது பொதுநல ஊழியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கொலை நடந்து முடிந்ததும், "விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகளைத் தப்பவிட மாட்டோம்' என்று சம்பந்தப்பட்ட மாநில அரசும், காவல்துறையும் தெரிவிக்கின்றனவே தவிர, இதுவரை எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.
கோலாப்பூரைச் சேர்ந்த தத்தா பாட்டீல் மே 31 அன்று கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 21 அன்று அதே மகாராஷ்டிர மாநிலம் பீத் என்கிற ஊரில் விட்டல் கீதே என்பவர் கொல்லப்பட்டார். ஏப்ரல் 11 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் கோலா ரங்கா ராவ், பிப்ரவரி 26 அன்று மகாராஷ்டிரத்தில் அருண் சாவந்த், பிப்ரவரி 14 அன்று பிகார் பெகுசராயில் சசிதர் மிஸ்ரா, பிப்ரவரி 11-ல் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் விஷ்ரம் லட்சுமண் தோதியா, ஜனவரி 13 அன்று பூனாவில் சதீஷ் ஷெட்டி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் பொறியாளராக இருந்த சத்யேந்திர துபே என்பவர், சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் இருந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். ஊழலை விசாரிப்பதற்குப் பதிலாக, சத்யேந்திர துபேயின் உயிருக்கு உலை வைத்துவிட்டார்கள். சத்யேந்திர துபேயின் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தொடர் வற்புறுத்தலின் பலனாக, மத்திய அரசு 2004-ல் ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, மத்திய கண்காணிப்பு ஆணையம் (சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன்) இதுபோன்ற பிரச்னைகளில், முறையீடுகளைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் தொடர்விளைவாகத்தான் இப்போது மக்களவையில் பொதுநல நோக்குடனான "ஊழலை அம்பலப்படுத்துவோரைப் பாதுகாக்கும் சட்டம் 2010' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு சட்டத்துக்கான தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. துணிந்து அரசு அதிகாரிகளோ, வேறு யாரோ பொதுநல எண்ணத்துடன் குற்றங்களை வெளிப்படுத்த முன்வந்தால்தானே தவறுகளை நாம் அடையாளம் காண முடியும்? அப்படி தகவல் தருபவர்களுக்கு, அவர்களது பதவிக்கும், உயிருக்கும் பாதுகாப்புத் தருவது என்பது அவசியமான ஒன்றாயிற்றே.
மேலை நாடுகளில், அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, தனியார் சமூகசேவை நிறுவனங்கள், மக்களிடம் பங்குகள் வசூலித்து நடத்தப்படும் உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோருமே ஊழலை வெளிக்கொணரவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ உதவினால், அந்த நாட்டு அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள். இங்கே மட்டும்தான் அவர்கள் பல சோதனைக்கு உள்ளாவதும், அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதும் நடைபெறுகிறது.
சற்று காலதாமதமாக வந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய சட்டம். சட்டம் இயற்றுவதுடன் கடமை முடிந்துவிடவில்லை. இதுபோலத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்களையும் தவறுகளையும் வெளிக்கொணரும் தைரியசாலிகளுக்குப் பொதுமக்கள் பின்துணை நல்க வேண்டும். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடாமல், நமக்காகப் பாடுபடும் அவர்களுக்காக நாம் குரல் எழுப்பியே தீர வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் மக்களாட்சித் தத்துவம் முறையாகச் செயல்படத் தொடங்கும்.
நன்றி : தினமணி
Friday, September 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment